உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சபாஷ், நிதின் கட்கரி!

சபாஷ், நிதின் கட்கரி!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு முறையை, திரும்ப பெற வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்என்ற செய்தி, 'சபாஷ்' போடவைத்துள்ளது. ஆயுள் காப்பீடும், மருத்துவ காப்பீடும்,பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மனிதர்கள் முதல், மேல்மட்ட நிலையில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையுடன் சேர்த்து கட்டப்படும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., தொகை, வருமான வரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. வரி விலக்கில் பிரீமியத் தொகை மட்டுமே கழிக்கப்பட்டு வருகிறது. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் அனைவரையும் சென்றுஅடைந்து, பலரையும் இதன் வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், இதற்கு விதிக்கப்படும் வரியை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.மத்திய அமைச்சர் ஒருவரே, மற்றொருமத்திய அமைச்சருக்கு இது சார்ந்துஎழுதியுள்ள கடிதம், ஒரு ஆரோக்கியமான போக்கே! காப்பீடு திட்டத்தில் வசூலிக்கப்பட்டு வரும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., ரத்து செய்யப்படும் போது பல கோடி பாலிசிதாரர்கள் மகிழ்ச்சி அடைவர்; புதிதாக பாலிசி எடுக்கும் நபர்கள் உற்சாகமடைவர்.பாலிசிதாரர்கள் வயிற்றில் பால் வார்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா?

மத்திய அரசுக்கு பின்னடைவு! அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: ஜூலை 29ல், 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த, 'கனிமங்கள் வழக்கில் தீர்ப்பு மத்திய அரசுக்கு அதிர்ச்சி' என்கிற தலையங்கம் படித்தேன். மத்திய அரசாகட்டும், ஒரு மாநில அரசாகட்டும் இரண்டுமே ஒன்றின் நிர்வாகத்தில் மற்றொன்று தலையிடும் போது அங்கு பிரச்னைகள் எழுகின்றன.

அந்த வகையில், பா.ஜ., தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 'இண்டியா' கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும் கருத்து மோதல்கள் மிகப்பெரிய அளவில் உள்ளன.அதிலும் மத்திய அரசு தன் நிதி ஆதாரத்தை, இண்டியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போதிய அளவில் ஒதுக்குவது இல்லை என்று மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில், புதுடில்லியில் நடைபெற்ற, 'நிடி ஆயோக்' கூட்டத்தைக் கூட இண்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் புறக்கணித்தது நாம் அறிந்ததே.இந்நிலையில், 'சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்கள் மற்றும் கனிமங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; மத்திய அரசு அதை தடுக்க முடியாது' என்று, ஒன்பதுநீதிபதிகள் அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது, ஒரு வகையில் மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்துள்ளதாக தான் நினைக்க வைக்கிறது. இதன் வாயிலாக, 1989ல் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு திருத்தப்பட்டு விட்டது. தலையங்கத்தில் கூறியுள்ள கருத்துப்படி,மாநிலங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு அரவணைத்து நடந்து கொண்டிருந்தால், இந்த பிரச்னைக்காக நீதிமன்றத்திற்கு வராமல் தீர்வு கண்டிருக்கலாம். மாநில அரசுகளும் நேர்மையான முறையில் ஒழுக்கமாக ஆட்சி செய்யும் பட்சத்தில் ஏன் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் தலையிடப் போகிறது? தலையங்கம் முடிவு வரிகள் கருத்துப்படி, மத்திய அரசானது மாநில அரசுகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். முடிந்த அளவுக்கு உதவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்ய வேண்டும். எது எப்படியோ உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட கடிவாளம் ஒருவகையில் இன்று மிகப்பெரியபின்னடைவை மத்திய அரசுக்கு ஏற்படுத்தி விட்டதாக கடைசி பத்தியில் கூறியுள்ளது, 100 சதவீதம் உண்மை!

மெக்சிகோவை பின்னுக்கு தள்ளி விடும்!

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சட்டத்துறை அமைச்சர்ரகுபதியும், சபாநாயகர் அப்பாவுவும், 'தமிழகத்துல நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கும் அரசு பொறுப்பேற்காது, ரவுடிகளின் பழிவாங்கும் நோக்கத்தால் கொலைகள் நடக்கின்றன.'அதற்கு அரசு என்ன செய்ய முடியும்? இங்கே, ராமராஜ்யம் தான் நடக்கிறது' என்று ஆணித்தரமாக கூறுகின்றனர்.வேண்டுமென்றால் அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார் அமைச்சர் ரகுபதி. ஓட்டு போட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது என்ன நியாயம்? 'எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என, சொல்வர்.அதுபோல் கஞ்சா, சாராயம், போதை மாத்திரை, போதை ஊசிகள் போன்றவை தமிழகத்தில் தாராளமாக புழங்கி வருகின்றன; இவற்றை கட்டுப்படுத்தினாலே, கொலைகள் குறைந்து விடுமே!ஆனால், இவற்றை கட்டுப்படுத்தும் தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றை கட்டுப்படுத்தினால் ஓரளவு குற்றம் குறைய வாய்ப்பு உள்ளது.போதை பயன்பாட்டில் சிக்கி இளம் பருவத்தினர் அதிகம் பேர் மாட்டிக்கொண்டு, பெற்றவர்களை உயிரோடு மரணிக்க வைக்கின்றனர். சமீபத்தில்,ராமேஸ்வரத்தில், 7 கிலோ போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக உளவுத்துறைக்கும், போலீசாருக்கும் இந்த செய்தி வரவில்லையா? மெக்சிகோ தான் போதை வஸ்துகளின் உலகின் தலைமையகமாக செயல்படுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகம், மெக்சிகோவை பின்னுக்கு தள்ளிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Dharmavaan
ஆக 06, 2024 00:06

9 ஜட்ஜ் பெஞ்ச் அருந்ததியர் உள் ஒதுக்கீடு, கனிம வள வரி தீர்ப்புகள எல்லாம் மாநிலத்திற்கு ஆதரவு ஆரணம் கொலீஜியும் முறை கோர்ட் வழியாக மோடியை பழி வாங்கும் செயல்.மோடி துணிந்து கொலீஜியும் முறையை நீக்க வேண்டும்


D.Ambujavalli
ஆக 05, 2024 17:12

பிடிபடும் போதைப்பொருள்களை அவற்றின் அளவைக் குறைத்துக்காட்டி, மீதியை போலீஸே விற்றுக்காசாக்கும் போது அவர்கள் தங்கள் sponsor களை எப்படிக் காட்டிக்கொடுப்பார்கள் முதல்வரே நேற்று வரை இந்த வியாபாரிகள் உடன் குலாவிவிட்டு, இன்று பிடிபட்டதும் ' இதோ நான்தான் மனுநீதி சோழன், கட்சியிலிருந்தே நீக்கிவிட்டேன் பார்' என்று நியாயவான் நாடகம் போடுகிறார் இன்னும் பள்ளிகளில் ஆசிரியர்களை விட்டு கட்டாயமாக விற்கச்சொல்லவில்லை அதுவும் நடக்குமோ என்னவோ ?


KRISHNAN R
ஆக 05, 2024 12:11

பெரும்பாலான பொருட்கள் அதிக ஜி எஸ் டி யில் உள்ளன. பெரும்சுமை.. ஏற்றப் பட்டுள்ளது.. நல்லவேளை.... பேசினாலும்...............


Sathyanarayanan Sathyasekaren
ஆக 05, 2024 20:41

கிருஷ்னன், GST என்பது முன்விருந்த பல்வேறு வரிகளை ஒன்றிணைத்து ஒரே வாரியாக கொண்டுவரப்பட்டது. ஏதோ அதற்கு முன் வரியே இல்லாததுபோல் கொத்தடிமைகளும் புள்ளி வைத்த கூட்டணியினரும் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றுகின்றனர், உங்களை போன்ற அறிவாளிகளும் அதற்கு மயங்குகின்றனர்.


MADHANRAJ PALANI
ஆக 05, 2024 11:47

போலீஸ் கைகள் கட்டபடவில்லை அவர்கள் நேர்மையாக நடந்தாலே இது போன்ற தவறுகளை களையலாம் அதற்க்கு அவர்கள் தயாராக இல்லை அவர்களே சிலரை தமக்கு துணையாக கொண்டுள்ளனர் இதில் தான் பிரச்சனை


Bhaskaran
ஆக 05, 2024 04:35

இதனை நிதியமைச்சர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவங்க எப்படி எல்லாம் மக்கள் மேல் வரி போடுவதில் குறியாக இருக்கிறவர்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 05, 2024 20:42

பாஸ்கரன் ஜிஎஸ்டிகுமுன் வரியே காட்டியது இல்லை போல.


முக்கிய வீடியோ