என்.வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான்' என்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. தன்னை முதல்வர் பதவியில் அமர்த்திய சசிகலாவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியவர் பழனிசாமி. தன்னை பிரதமர் பதவியில் அமர்த்த உதவியை காமராஜரை, எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைத்தவர் இந்திரா. அண்ணாதுரை மரணம் அடைந்த பிறகு, தன்னை முதல்வர் ஆக்கிய எம்.ஜி.ஆரை, கட்சிக் கணக்கு கேட்டார் என்பதற்காக, கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி. தன்னை சினிமாவிலிருந்து அழைத்து வந்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக அமர்த்தி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., மீதே கோபப்பட்டு, எதிராக செயல்படத் துவங்கியவர் ஜெயலலிதா. பின்னாளில் அது தோல்வியில் முடிந்தது வேறு விஷயம்.இப்படி அரசியலில் நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் பட்டியலைப் பார்த்தால், அது நீண்டு கொண்டே போகும்.அ.தி.மு.க.,வைக் காப்பாற்ற, தன் அருகில் அமர்த்தி, ஆலோசனை சொன்ன மோடியை உதறித் தள்ளி, தனித்துப் போட்டியிட்டவர், பொதுச் செயலர் பழனிசாமி.துரோகத்தின் மேல் துரோகம் செய்வதால், கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறார் பழனிசாமி.ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க., தோற்று கட்டெரும்பாய் மாறுவதற்கு முழு காரணமும் பழனிசாமி தான். இவர், பா.ஜ.,வின் அண்ணாமலையை துரோகி எனச் சொல்வது, வேடிக்கையாக உள்ளது. நேர்மையாக நடந்திருக்குமா தேர்தல்?
க.அம்பலவாணன்,
ராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டின் பல்வேறு
மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், ஆளுங்கட்சி தோற்று, எதிர்க்கட்சி
வெற்றி பெற்றுள்ளது. காரணம், அங்கெல்லாம் தேர்தல் நேர்மையாக, அரசின்
தலையீடு இல்லாமல் நடந்துள்ளது.ஆனால், தமிழகத்தில் இந்த நேர்மையை
எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், ஒரு புது
யுக்தி என்ற வகையில், தேர்தலைச் சந்திக்கிறது ஆளுங்கட்சி;
விக்கிரவாண்டியில் எந்த யுக்தி பின்பற்றப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.பணம்,
பரிசு, மது, பிரியாணி என எதற்கும் மயங்காமல், மனசாட்சியுடன் மக்கள்
ஓட்டளித்திருக்க வேண்டும். அது நடந்தால், நேர்மையாக தேர்தல் நடந்தது என்று
சொல்ல முடியும்.புதிய வரலாற்றை விக்கிரவாண்டி மக்கள் படைத்துள்ளனரா என்பது விரைவில் தெரிந்து விடும். 'தினமலர்' முயற்சி வெற்றி பெறாது!
பொன்மணி
ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: கோவை மாவட்டம்,சூலுார் தாலுகா, பெரிய வதம்பச்சேரியை
சேர்ந்த துளசிராஜன் என்பவர், 2019ல், வாகன விபத்தில் உயிரிழந்தார்.
வறுமையுடன் போராடி வரும் அவர் மனைவி கனகுமணி, பிள்ளைகளை படிக்க வைக்க
வேண்டும் என்பதற்காக, குழந்தைகள்பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,உதவித்தொகை
கேட்டு கல்வித் துறைக்கு விண்ணப்பித்தார். 'அவருக்கு, 75,000
ரூபாய் உதவித்தொகை வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. ஆனால்,
உத்தரவு கடிதம் மட்டுமே கிடைத்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும்,
உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே, கலெக்டர் இதில் தலையிட்டு உதவித்தொகை
உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, 'தினமலர்'
நாளிதழில்செய்தி வெளியாகி இருந்தது.கள்ளச்சாராயம் குடித்து
இறந்தால், நாளையே அமைச்சர் உதயநிதி நேரில் வந்து, அவரது பொற்கரங்களால், 10
லட்சம் ரூபாய் உதவித் தொகையை, யாரும் கேட்பதற்கு முன்னரே கொடுப்பார். அப்படி
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை
எல்லாம், அரசே ஏற்றுக் கொள்வதுடன், அவர்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட
உதவிகளிலும் முன்னுரிமையும் வழங்கப்படும்.ஆனால், கனகுமணி
கேட்டவுடன் கொடுப்பதற்கு துளசிராஜன் கள்ளச்சாராயம் குடித்து
பலியாகவில்லையே; விபத்தில் தானே உயிரிழந்திருக்கிறார்! எனவே, அவரது
குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை கிடைக்க, மூன்று வருடம் என்ன... 30
வருடம் கூட ஆகலாம். எனவே, சமூக அக்கறையுடன் வெளியிடுவதாக நினைத்து,
இது போன்ற செய்திகளை தேடித் தேடி வெளியிட்டு, திராவிட மாடல் ஆட்சியின்
நற்பெயரை கெடுக்க நினைக்கும், 'தினமலர்' நாளிதழின் முயற்சி, ஒரு போதும்
வெற்றி பெறப் போவதில்லை. இளைஞர்களை அலைக்கழிக்காதீர்!
ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன், ஸ்விட்சர்லாந்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
புதுச்சேரியில், ஒரு குறிப்பிட்ட பள்ளியில், ஊர்க்காவல் படையில்
சேர்வதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத்
தேர்வு நடந்த போது, 200 தேர்வர்கள் சற்றே காலதாமதமாக வந்த காரணத்தால்,
மெயின் கேட் பூட்டப்பட்டு, வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.காலை 9:30 மணிக்கு தேர்வு மையத்தின் உள்ளே அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதே
நேரம், அந்த தனியார் பள்ளிக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இருந்தனவா
என்பதும், போக்குவரத்து வசதிகள் நிறைந்த அரசு பள்ளிகளை விட்டுவிட்டு
தனியார் பள்ளியில் இதுபோன்ற முக்கிய தேர்வுகளை நடத்துவது நியாயமில்லை
என்பதும் ஏன் தெரியவில்லை?செய்வதறியாது திகைத்து நின்ற தேர்வர்கள்,
அவ்வழியாக வந்த புதுச்சேரி சபாநாயகர் செல்வம் காரை மறித்து, அவரிடம்
முறையிட்டுள்ளனர். அவரும் தன் கை பேசியில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு
பேசியும், அதிகாரிகள் தேர்வர்களை அனுமதிக்க வில்லையாம்.ஒரு தேர்வை
எழுத, ஒரு மாணவன் தன் பருவ வயதில் எவ்வளவு சிரமப் படுகிறான் என்பதை,
படித்து பட்டம் பெற்று பதவிக்கு வரும் அதிகாரிகளால் அறிய முடியாமல் போனது
ஏன்?உணவை மறந்து, உறக்கத்தை தொலைத்து, உணர்வுகளை ஓரங்கட்டி வைத்து
விட்டு தேர்வு ஒன்றையே மனதில் நிறுத்தி, அத்தேர்வை எழுதி முடித்ததும், மனது
லேசாகி ஓர் இனிய ஆனந்தம் உள்ளத்தில் உலா வருவதை அனுபவித்தவர்களாலேயே உணர
முடியும்.இளைஞர்களை தேர்வுகளால் அலைக்கழிப்பதை அரசும்,
அதிகாரிகளும் இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும். உலகத்தில் மிக அதிகமான
இளைஞர்களை கொண்ட நம் நாட்டில், அவர்களுக்கு உரிய வழியை காட்டி உயர்த்த,
உயர் பொறுப்பில் உள்ளவர்கள் உறுதியேற்க வேண்டும்.