உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அலுமினியத் தட்டை நீங்களும் ஏந்தி நிற்கிறீர்களே?

அலுமினியத் தட்டை நீங்களும் ஏந்தி நிற்கிறீர்களே?

ஆர்.கே.செந்தில்குமார், திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வணக்கம் கமல் சார்... இன்று ஓய்வில் தான் இருப்பீர்கள்! பரவாயில்லை... வீட்டில் உள்ள, 'ஸ்மார்ட் டிவி'யில், 'யு டியூப்' திறந்து கொள்ளுங்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் செல்வோம்... தேவர்மகன்!ஊஞ்சலாடியபடியே, கவுதமிக்கு முத்தம் தர வருவீர்கள். தள்ளிச் செல்லுங்கள்... 'இஞ்சி இடுப்பழகா' பாடலில் ரேவதியுடன் கோலம் போடும் சீன் பாருங்கள். 'ரொமான்ஸ்' என்றால் கமல் தான்! இன்னும் நாற்பது வருஷம் பின்னால்... ராஜபார்வை!பார்வையற்ற பாத்திரம். மனதை பிழிய வைத்தீர்கள். 'புதுமை' என்றால் கமல்!மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா!இப்படி, கிரேசி மோகனின் வசனங்களை வைத்து, விழுந்து உருண்டு சிரிக்க வைத்தீர்கள்; நாயகனில் அழ வைத்தீர்கள்; குருதிப்புனலில் மிரட்டினீர்கள். இன்றும் பேசப்படுகிறது குணா! சலங்கை ஒலி நடனங்கள், அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு பாத்திரம், இது மட்டும் அன்றி புத்தாண்டு பிறப்பதே, உங்கள் நடனம் கண்டு தான்!அதோடு நின்றிருக்கலாமே? தி.மு.க., தன்னை அழிக்க நினைத்த அத்தனை பேர் கையிலும், ஒரு அலுமினியத் தட்டை தந்து அறிவாலய வாசலில் உட்கார வைத்து விடும்; வைகோவில் ஆரம்பித்து சமத்துவம் பேசும் தோழர்கள், சமூக நீதி பேசும் ஜாதிக் கட்சித் தலைவர்கள் என, அந்த லிஸ்ட் பெரியது. அந்தத் தட்டை, நீங்களும் ஏந்தி நிற்கிறீர்களே இப்போது?

தேவையின்றி ஜாதியை கிளப்பாதீர்கள்!

சு.ஸ்ரீனிவாசன், கோவையிலிருந்து எழுதுகிறார்: சமூக சமத்துவம் என்று பேசியபடியே, ஜாதிகளை நிலை நிறுத்தவும், அதனால் கிடைக்கும் ஆதாயங்களை அறுவடை செய்யவுமே அரசியல் கட்சியினர் குறியாக இருக்கின்றனரே அல்லாமல், நாட்டின் முன்னேற்றத்தில் எள்ளளவும் ஈடுபாடு இல்லை.பல நாடுகளின் வரலாறுகளை ஆராய்ந்தால், எந்த நாட்டிலும் முழுமையான சமத்துவம் இல்லவே இல்லை; அது சாத்தியமும் இல்லை. நம் அரசியல் சாசனத்திலேயே கூட, 'சமமானவர்களுக்கிடையிலே சமத்துவம் பேணப்பட வேண்டும்' என்று தான் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் ராணுவத்திலும், கீழ் நிலையில் சிப்பாயில் துவங்கி, மேல்நிலையில் ராணுவத் தலைவர் என்ற நிலை வரை, பல்வேறு படித் தரங்கள் உள்ளன.இவர்கள் அனைவரும், அவரவர் தகுதிகளின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றனர் என்பதும், தேவையான வேறுபாடுகள் பேணப்படுகின்றன என்பதே உண்மை. இவ்வாறு நடத்தப்பட்டால் தான், ராணுவம் ஒழுங்காகச் செயல்பட்டு, அது நாட்டுக்காகச் செம்மையாகத் தொண்டாற்றும் என்பது நிதர்சனம். இந்த அடிப்படையிலேயே, நம் நாட்டின்அனைத்துப் பகுதிகளிலும் ஜாதிகள் கட்டமைக்கப்பட்டு, அவை பிறப்பினடிப்படையில் தொடருமாறு வழிவகை செய்யப் பட்டு, நம் சமுதாயம் இயங்கி வந்துள்ளது. சமுதாய மாற்றங்கள் பெரிய அளவில் ஏற்பட்ட பின், ஜாதிகளின் தாக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.இந்நேரத்தில், ஜாதிகளைப் பற்றிய பேச்சுகள் அநாவசியமானவை. எனினும், வேறு பல காரணிகளின் அடிப்படையில், சமத்துவமின்மை நடைமுறையில் இருப்பது கண்கூடு. கம்யூனிச நாடுகளில் கூட, அவர்களது தேவைகளுக்கேற்ப ஏற்றத்தாழ்வுகள் பராமரிக்கப்படுகின்றன.எனவே நம் நாட்டு அரசியல்வாதிகள் தேவையேயில்லாத ஜாதியப் பிரச்னைகளை உருவாக்கி, அவற்றினடிப்படையில், குளிர்காய நினைத்துச் செயல்படாமல், உண்மையிலேயே சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டால், நம் நாடு வெகுவிரைவில் உன்னதமான நிலையை அடைந்தே தீரும்.

எதை நம்பி ஓட்டு கேட்பர்?

சதீஷ் குமார், கடலூாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் தேர்தலில், ஆளும் தி.மு.க., எந்த வாக்குறுதிகளை அளித்து ஓட்டு கேட்பர் எனத் தெரியவில்லை. 'நீட்'டை ஒழித்து விட்டேன் அனைத்து பெண்களுக்கும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்து விட்டேன்  டாஸ்மாக்கில், 50 சதவீதம் கடைகளை மூடிவிட்டேன் அரசு பேருந்துகள் சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன தரமான சாலை வசதிகள் செய்து தந்து விட்டேன் தமிழகத்தின் கடனை குறைத்து விட்டேன் வேலை வாய்ப்பை அதிகரித்து விட்டேன்  கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் அழித்து விட்டேன் மழை வெள்ளத்தில் சிறப்பாக பணியாற்றினேன் தமிழகத்தில் கொலை, கொள்ளையே நடக்கவில்லை சட்டம் - ஒழுங்கு நிலை மிகச் சீராக இருக்கிறதுஇப்படி உதாரணம் காட்டி, ஓட்டு கேட்க முடியுமா?

பச்சோந்திகளாக இருக்காதீர்கள்!

ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த 4ல், 'தினமலர்' நாளிதழில் வெளியான தலையங்கத்தில், 'குதிரைகள் ஓடிய பின் லாயத்தை, பூட்டுவதா?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையின், நோக்கம் சரியானது தான். லோக்சபா தேர்தல் நடைபெற, சில மாதங்கள் உள்ளன. பத்து ஆண்டுகளாக, பல மாநில சட்டசபை உறுப்பினர்கள், கட்சி மாறி மாறிச் செல்கின்றனர். ஜனநாயகத்தில் ஒரு கட்சியின் சார்பாக வெற்றி பெற்றவரை, கட்சி மாறச் சொல்லி அழைப்பது குற்றமே. இந்த குற்றத்தை, 10 ஆண்டுகளாக செய்து வரும் அரசியல் கட்சிகள் எவை எவை என்பது, மக்களுக்கு தெரியும். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர், மனசாட்சியை அடகு வைத்து, ஓட்டு போட்ட வாக்காளரையும், அவர் தேர்தலில் போட்டியிட, முடிவு செய்த தலைமையையும் ஏமாற்றுகிறார்.வாக்காளர்கள் தேர்தல் நேரத்தில் பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவது குற்றம் என்றால், வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பணம் வாங்கிக் கொண்டு, சொந்த கட்சிக்கு எதிராக, சட்டசபையிலோ, பார்லி.,யிலோ ஓட்டு போடுவதும் குற்றமே! ராஜ்யசபா தேர்தலில், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில், இது தான் நடைபெற்றது. லோக்சபா - சட்டசபை உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்க தான் செய்யும். அந்த வேறுபாடுகளை, தேர்தல் முடிந்த பின், பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, இப்படி தலைமையையும், ஓட்டு போட்ட மக்களையும் ஏமாற்றி, பச்சோந்தித்தனமாக இருக்கக் கூடாது.இது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 18, 2024 15:10

இஷ்டப்பட்டுதான் வளைஞ்ச அலுமினியத் தட்டை ஏந்தி நிக்குறேன் ..... ஹிஹிஹி ....


vbs manian
மார் 18, 2024 11:49

கழகம் கொடுத்த ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக எதிர்காலத்தில் ஏ தெற்கெல்லாம் விலைகொடுக்க போகிறார்.


vbs manian
மார் 18, 2024 10:51

இவ்வளவு முரண்பாடுகளோடு ஒரு மனித பிறவி எப்படி இருக்க முடியும்.


vbs manian
மார் 18, 2024 10:51

முள் நிறைந்த சப்பாத்தி பழம்.


D.Ambujavalli
மார் 18, 2024 04:43

பவர் போகுமா, என்று எதிர்பார்க்குமளவு மூளைச்சலவைக்கு ஆளான மக்கள் உள்ளவரை எதுவுமே கூற வேண்டாம்


D.Ambujavalli
மார் 18, 2024 04:42

எந்த சாதனையையும் காட்ட மாட்டார்கள் குவார்ட்டர், ரொக்கம், புடவை, கொலுசு போதாதா இந்த வாக்காளர்களுக்கு தேர்தல் தேதி அறிவித்த உடனே 'செய்தித்தாள் நடுவே கவர் இருக்குமா, பவர் கேட்


புதிய வீடியோ