என்.பாடலீஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடந்த, திருச்சி பாரதிதாசன் பல்கலையின் 38வது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி சென்று திரும்பிய போது, 'அரசு பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்க வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு, இரண்டாம் வகுப்பு மாணவி துவாரகா மதிவதனி என்ற சிறுமி, கூட்டத்தில் தந்தையுடன் நின்றிருந்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியாகி இருந்தது.தமிழகத்தில், ஒரு குறிப்பிட்ட மொழியை கற்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், அந்த குழந்தையின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. திராவிட கட்சிகள், 'நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால், மொழி திணிப்பையே எதிர்க்கிறோம்' என்பர்.அவர்களின் கருத்து, 'விரும்பி படித்தால் நாங்கள் எதிர்க்க மாட்டோம்' என்பது தான். ஆகையால், விருப்பம் உள்ளோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த குழந்தையின் கோரிக்கை, அரசு பள்ளியில் ஹிந்தி கற்க வாய்ப்பளியுங்கள் என்பது தான். யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்; விரும்பினால் படிக்கட்டும். அப்படி வாய்ப்பளித்தால், 'ஹிந்திக்கு எதிர்ப்பில்லை; திணிப்பிற்கு தான் எதிர்ப்பு' என்ற வாதத்திற்கு எந்த பங்கமும் வராது.வசதியானோர், தங்கள் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஹிந்தி மொழியை கற்பிக்கும்போது, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுப்பது, உண்மையான சமூக நீதிக்கு எதிரானது என்பதை திராவிட மாடல் அரசு உணர வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்!
பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: இயற்கையை நாம் சீரழித்து விட்டதால், தற்போது எங்கு,
எப்போது, எவ்வளவு மழை பெய்யும் என்பதை, யாராலும் சரியாக கணிக்க
முடிவதில்லை. 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இதுவரை இந்த அளவு
மழை பெய்ததே கிடையாது' என்று வானிலை மையமே அதிர்ச்சியாகும் அளவு,
சமீபத்தில், தென் மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில்
கொட்டி தீர்த்தது.இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற வெள்ளங்கள்
வரக்கூடும். எனவே ஆட்சியாளர்கள், வெள்ளம் வந்த பின் மீட்பு மற்றும் நிவாரண
பணிகள் செய்து கொள்ளலாம் என்று அலட்சியத்துடன் இருக்காமல், இதற்கு நிரந்தர
தீர்வு காணும் விதமாக, இப்போதே திட்டங்கள் வகுக்க வேண்டும்.இயற்கை, வானிலை மையத்தின் மீது பழி சுமத்து வதை விட்டு, எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.சிங்கப்பூரில்
எவ்வளவு மழை பெய்தாலும், சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் தேங்காமல், அந்த மழை
நீர், சாக்கடை நீருடன் கலந்து விடாமல், தனியாக கொண்டு சென்று சேமித்து
பயன்படுத்தப் படுகிறது. ஆனால், தமிழகத்தில் கிடைக்கும் மழைநீர்
கடலில் சென்று வீணாக கலக்கிறது. அதன்பின், பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு,
கடல் நீரை குடிநீராக மாற்றுகிறோம். என்ன ஒரு புத்திசாலித்தனம்!வெள்ளத்தால்
பலர் உயிரிழந்து, பல்லாயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு, அதன்பின்
பல்லாயிரம் கோடியை நிவாரண பணிக்காக செலவிடுவதை விட, அந்த பணத்தை,
முன்கூட்டியே, வெள்ள பாதிப்புகளை தடுக்க பயன்படுத்தலாம்.அந்த
வகையில், நீர்நிலைகளை நல்ல முறையில் பராமரிப்பதுடன், புதிதாக பல அணைகளை
கட்டி, குளங்களை வெட்டி, நதிகளையும் இணைக்கலாம். இதனால், குடிநீர் பஞ்சம்
குறையும்; வேலை வாய்ப்பு கூடும்; விவசாயம் செழிக்கும்; நிலத்தடி
நீர்மட்டமும் உயரும்.சென்னை, வெள்ளத்தில் மிதக்கும் போதெல்லாம், நீர்நிலைகள் மேல் கட்டடம் கட்டியதால் தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறுவர். இருந்த
நீர்நிலைகளை நல்ல முறையில் பராமரிக்காததால், சமீபத்தில் தென்
மாவட்டங்களில் பெய்த கனமழையால், ஏகப்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டு நீர்
வீணாகி, இப்போது அவை, வறண்டு கிடக்கின்றன. எனவே, நீண்ட கால பயன்
தராத இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த பணத்தில்,
தொலைநோக்கு சிந்தனையுடன், இருக்கும் நீர் நிலைகளை மேம்படுத்தவும், புதிய
நீர்நிலைகளை உருவாக்குவதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும். அடுத்தவர் சாதனைக்கு உரிமை கோருவதா?
செ.சாந்தி,
மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை மற்றும்
சுற்றியுள்ள மக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருவதை எளிதாக்கவும்,
கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை
குறைக்கும் வகை யிலும், 2018ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய பணிகள் துவங்கின.தற்போது
அங்கு, 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம்' என்ற பெயரில் பஸ் நிலையம்
திறக்கப்பட்டு, கூடவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்
சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சில தனியார்கள் ஆக்கிரமிப்பில் இருந்த
இந்த நிலத்தை, அப்போதைய அ.தி.மு.க., அரசு நீதிமன்றத்தின் வாயிலாக பல்வேறு
சட்ட போராட்டங்களை நடத்தி மீட்டது.இதற்காக, அரசு அதிகாரிகள்
அல்லும் பகலும் நீதிமன்ற வாசலிலேயே படுத்து கிடந்தனர். அரசு பணியை தங்களது
சொந்த பணி போல அர்ப்பணிப்புடன் செய்தனர். அரசுக்கு ஆதரவாக தீர்ப்பும்
வந்து, அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியிலேயே, பேருந்து நிலைய கட்டுமான பணிகள்
துவக்கப்பட்டன.காலம் மாறி, காட்சியும் மாறியது. 2021-ல் தி.மு.க.,
ஆட்சிக்கு வந்த பின், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணியை தொடர்ந்தது.
கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் பணிகள் முடிந்து, தற்போது கடைசியாக
செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.ஆனால், பல தடைகளை வென்று பேருந்து
நிலையம் கொண்டு வர பெருமுயற்சி எடுத்த அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகள்
மறைக்கப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டி, அவரது
சிலையும் வைக்கப்பட்டுள்ளது.இதே பாணியில், 6,218 அரசு பள்ளிகளில்
காலங்காலமாக செயல்பட்டு வரும் தமிழ் மன்றங்களின் பெயர்களை, 'முத்தமிழறிஞர்
கலைஞர் தமிழ் மன்றம்' என்று பெயர் மாற்றி, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்படி, பிறர் சாதனைக்கு சொந்தம் கொண்டாடுவதும், எல்லா திட்டங்களுக்கும் கருணாநிதி பெயர் சூட்டுவதும் எந்த வகையிலும் சரியல்ல. தி.மு.க.,
சார்பில் கட்டப்படும் கட்டடங்களில், கருணாநிதிக்கு ஒரு சிலை என்ன,
ஓராயிரம் சிலைகளை கூட வைத்துக் கொள்ளட்டும். மாறாக, மக்களின் வரிப்பணத்தில்
இப்படி பெயர் சூட்டுவதும், சிலைகள் நிறுவுவதும் மக்களின் அதிருப்திக்கு
ஆளாகும் என்பதில் சந்தேகமே இல்லை!