உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  செல்வாக்கை மீட்டெடுப்பது இயலாத காரியம்!

 செல்வாக்கை மீட்டெடுப்பது இயலாத காரியம்!

எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தலைவர்களின் பேச்சுக்களை கவனித்தால், அவர்கள் இன்னும் தங்கள் அரசியல் வீழ்ச்சிக்கான உண்மையான காரணத்தை சரியாக கண்டறியவில்லையோ என்று தோன்றுகிறது. விஜய் அரசியலுக்கு வந்ததால் தான் இளைஞர்கள் திசைமாறி விட்டனர் என்றும், இது வெறும் சினிமா மோகம் என்றும் எளிதாகக் கடந்து செல்வது, தங்களின் நிர்வாகத் தவறுகளையும், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியையும் மறைக்க நினைக்கும் தி.மு.க.,வின் மழுப்பல் அரசியல் என்றே கூறலாம்! கட்சியின் கட்டமைப்பில் உண்மையான மாற்றம் வர வேண்டுமெனில், அதற்கு சில சீரமைப்புகள் அவசியம். அவை:  இளைஞர்களை கட்சியில் உறுப்பினர்களாக சேர்ப்பதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது; கட்சியின் கீழ்மட்டத்தில் இருக்கும் சாதாரண தொண்டனும், அடித்தட்டு இளைஞர்களும் அதிகாரத்திற்கு வருவதற்கான வழிகளை செய்ய வேண்டும்  பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மூத்த நிர்வாகிகள் ஒதுங்கும்போது, மீண்டும் அதே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கே பதவி களைத் தாரை வார்ப்பதை விடுத்து, புதிய திறமையான இளைஞர்களுக்கு இடம் அளித்தால் மட்டுமே அது உண்மையான மாற்றமாக இருக்கும்  கீழ்மட்ட அமைப்புகளில் மட்டும் இளைஞர்களை அமரவைத்துவிட்டு, முடிவெடுக்கும் மேல்மட்ட குழுவில், மூத்தவர்களே ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்  தோல்விக்கான உண்மையான காரணத்தை உணர்ந்து, ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை, மக்கள் மனதில் விதைக்க வேண்டும். - இப்படி அதிகாரப் பகிர்வும், வாரிசு அரசியலற்ற வெளிப்படைத்தன்மையும் சாத்தியமானால் மட்டுமே, தி.மு.க., மாறியிருக்கிறது என்பதை உணர்ந்து, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை மக்கள் அக்கட்சிக்கு வழங்குவர். அதைவிடுத்து, பழைய மொந்தையில் புதிய கள்ளை ஊற்ற நினைத்தால், தி.மு.க., இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பது இயலாத காரியம்! ------

காகிதங்கள் இல்லா நடைமுறை வேண்டும்!

கே.சண்முகசுந்தரம், பொள்ளாச்சியில் இருந்து எழுதுகிறார்: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய பணிகளை கருவூலங்கள் தான் செய்து வருகின்றன.ஊழியர்கள் ஓய்வு பெற்ற மாதங்களில் ஆண்டுதோறும் மறுபதிவு செய்வது, ஓய்வூதியர் எவராவது இறந்தால், அவரது ஓய்வூதியத்தை நிறுத்துவது, குடும்ப ஓய்வூதியதாரர்களின் கணக்குகளை பராமரிப்பது என, இத்துறையின் பொறுப்புகள் மிக நீண்டது.அதேநேரம், கருவூலங்கள் பின்பற்றும் நடைமுறைகளோ, ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளின்படி, பேப்பர்களை அடிப்படையாக வைத்தே இயங்கி வருகின்றன.ஒருவருடைய தொலைபேசி எண்ணை வைத்து, அவருடைய ஓய்வூதிய கணக்கை கண்டுபிடிக்கும் நடைமுறை, கருவூலங்களில் இல்லை.உதாரணமாக, ஓய்வூதியரோ, குடும்ப ஓய்வூதியரோ இறந்தால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், இறப்பு குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே, அவரது ஓய்வூதியம் நிறுத்தப்படும்.தகவல் தெரிவிக்காமல்விட்டால், ஆண்டு மறுபதிவுக்கு குறிப்பிட்ட மாதத்தில் ஓய்வூதியர் வராமல் இருந்தால் மட்டுமே, அவரது ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது.அவ்வாறான நிலையில்,தவறுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதிய பணத்தை, மேற்படி இறந்தவரின் குடும்பத்தினரிடம் இருந்து திரும்ப பெறுவதற்கான அதிகார வரம்பும் கருவூலங்களிடம் இல்லை.இதனால், அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், கருவூலங்கள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றன.எனவே, காகிதங்கள் இல்லாத நவீன தொழில்நுட்பங்களை கருவூலச்செயல்பாடுகளில் கொண்டு வந்து, காலத்திற்கேற்ற மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!------

காய்கறி வியாபாரியை சங்கீதம் பாடச் சொன்னால் எப்படி?

ஆர்.கண்ணப்பன், மதுரை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் வாதிகள் திருமண விழாவிற்கு சென்றாலும் சரி; துக்க நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி... தங்கள் சொந்தக்கதைகளை கொட்டித் தீர்த்து, கடைசியில், 'வாழ்க, வளர்க' என்று முடித்து விட்டு, டாட்டா காட்டி சென்று விடுவர்.அந்த வரலாற்றை அடிபிறழாமல் நிகழ்த்தியுள்ளார், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி, 'கைது நடவடிக்கைகளுக்கு பயந்தவன் நான் கிடையாது; இதே தஞ்சாவூரில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினேன். போராட்டத்தில், 'டம்மி' முதல்வர் என்றெல்லாம் விமர்சித்து பேசினேன்.'அப்போது அவர்களுக்கு கோபம் வரவில்லை; 'காவிரியில் தண்ணீர் வரவில்லை' என்றதும் கோபம் வந்து என்னை கைது செய்தனர். அதனால், இந்த அரசு, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது. 'உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்ததும் விட்டு விடுவோம்' என, 'பல்டி' அடித்தது.'முன்பெல்லாம் சட்டசபையில் கேள்வி கேட்டால் பதில் சொல்வர். இப்போது பதில் சொல்லாமல், பாட்டு பாடுகின்றனர். அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், 'ரீல்ஸ்' எடுப்பதற்காகவே சட்டசபைக்கு வருகின்றனர்.'அவர்களுக்கு தேவையெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு ரீல்ஸ். இவர்கள் ஆட்சி நடத்துகின்றனரா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகின்றனரா என்று கேட்கும் அளவுக்கு தான், இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன.'தி.மு.க., ஆட்சியில் இந்தியாவிலேயே, 'நம்பர் ஒன்' மாநிலமாக, 11.19 சதவீத வளர்ச்சியோடு தமிழகத்தை கொண்டு வந்தோம்.'இன்று அதை பாதாளத்தில் தள்ளி விட்டனர். தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும், 'டம்மி' அரசாகவே, இந்த த.வெ.க., அரசு உள்ளது' என்று, 'மணமக்களை வாழ்த்தி' பேசியுள்ளார், உதயநிதி.இவர் பேசியதில், எங்காவது ஓர் இடத்தில் மணமக்களுக்கான வாழ்த்து இருக்கிறதா?காய்கறி வியாபாரியை சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறிவேப்பிலை என்று தானே சொல்வார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 27, 2026 00:59

'அங்காடிக். கூடைக்காரிக்கு . சங்கீதம். பாட. வருமா?'. இதுவாவது பரவாயில்லை இழவு. வீட்டில்கூட. 'கழகப். புகழ்' பாடும். விவஸ்தை. கெட்டவர்கள்


புதிய வீடியோ