மேலும் செய்திகள்
வேண்டாம் அரசியல் நாடகம்!
29-Apr-2025
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க., 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை. எந்த கூட்டணி வந்தாலும், தி.மு.க., அதைப் பற்றி கவலைப்படாது. எமர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள், தி.மு.க.,வினர்' என்று கூறியுள்ளார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்ததில் இருந்து, 'எந்த கூட்டணி வந்தாலும், தி.மு.க., கவலைப்படாது' என்று மேடைதோறும் பிதற்ற ஆரம்பித்துள்ளார், முதல்வர். கவலை இல்லை என்றால் எதற்காக, அதுகுறித்து பேச வேண்டும்?அத்துடன், வயதாகி விட்டதாலோ என்னவோ, பழங்கதைகளை கொஞ்சம் உப்பு, மிளகு துாவி பரிமாறுவதில் அலாதி ஆர்வம் கொள்கிறார். அவ்வகையில், சமீபகாலமாக, 'நாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலே' என்று ஆரம்பித்து, 'எமர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள்' என்று கதையளக்க ஆரம்பித்து விடுகிறார். இந்தியாவிலேயே எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்கள் தி.மு.க.,வினர் தான் என்பது போல் பேசுகிறார். மிசா சட்டத்தில் உதைபட்டு சிறைக்கு போனதை தவிர, தி.மு.க.,வினர் எமர்ஜென்சியை எதிர்த்து என்ன அரசியல் செய்து விட்டனர்? தனக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு உடையவர்கள் பல்லாயிரக் கணக்கானோரை கைது செய்தார், இந்திரா. அதில், தி.மு.க.,வினரும் இருந்தனர் அவ்வளவு தான்!உண்மையில் எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்கள் ஜெயபிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண்சிங், ஜிவத்ராம் கிருபளானி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்றோர் தான்!தேர்தலை நடத்துவதாக இந்திரா அறிவிக்கும் வரை, அவரை எதிர்த்து பலவழிகளில் போராட்டம் நடத்தினர். பின், அனைவரையும் ஒருங்கிணைத்து, ஜனதா கட்சி என்ற பெயரில், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியைப்பிடித்தனர். தன் மீது போட்டிருந்த சர்க்காரியா கமிஷன் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக, ஜனதா கட்சிக்கு ஆதரவு வழங்கியவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி. பிரதமர் மொரார்ஜி தன் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றதும், அடி, உதை வாங்கியதைக் கூட மறந்து, இந்திராவிடம் அடைக்கலமாகி, சர்க்காரியா கமிஷனிலிருந்து வெளிவந்ததை தவிர்த்து, எமர்ஜென்சியை எதிர்த்து என்ன அரசியல் செய்து விட்டனர் தி.மு.க.,வினர்?'பெருமை ஒரு முறமாம்; புடைத்தெடுத்தால் வெறும் முறமாம்' அதுபோன்று உள்ளது, முதல்வரின் எமர்ஜென்சி பெருமை! மாணவர்களுக்கு எப்போது கற்று தருவீ ர்?
சு.செல்வராஜன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இந்தியாவை கொள்ளையடிக்க
வந்தவர்கள் மன்னராகி ஆட்சி செய்ததும்; வியாபாரம் செய்ய வந்தோர் நம்மை
ஆண்டது குறித்தும் பள்ளிப் புத்தகங்களில் மாணவர்கள் விரிவாக படிக்கின்றனர்.அதேநேரம்,
நீதி நெறிமுறை தவறாமல் ஆட்சி செய்த இந்நாட்டு மன்னர்களின் உண்மை சாதனைகள்
மறைக்கப்பட்டு, மரம் நட்டனர், சத்திரம் கட்டினர், குளம் வெட்டினர் என்றே
திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,
ஏழாம் வகுப்பு பாட நுாலில், 'முகலாயர், சுல்தான் பாடங்கள் நீக்கம்' என்ற
செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்திலும் பள்ளிப் பாடத் திட்டங்களில் உரிய
மாறுதல்களை செய்ய வேண்டும்.தமிழ் மன்னர்களின் பராக்கிரமம், கொடை,
அறிவுக் கூர்மை, வாழ்வியல், போர் நெறிகள் என்று அவர்களைப் பற்றி படிக்க
எவ்வளவோ சிறந்த விஷயங்கள் உள்ளன. அவை, முகலாய மன்னர்களின் கதைகள் போன்று
கொடூர மானவை அல்ல; ஆங்கி லேயரின் கதைகளைப் போன்று பிரித்தாளும் தந்திரமோ,
அடுத்தவர் பொருளை அபகரிக்கும் நயவஞ்சகமோ நிறைந்ததில்லை. மாறாக,
பெற்ற பிள்ளை என்றாலும் நீதியின் முன் சமம் என்று உரைக்கும். அடைக்கலம்
என்று வந்த புறாவிற்காக, தன் சதையையே இரையாக தரும் மாண்பைச் சொல்லும்.
இமயம் தாண்டிய வெற்றிக் கொடி நாட்டிய வீரத்தை பறைசாற்றும். நீர்வளம், கொடை
திறன், கலைத் திறன் என்று படிக்கும் மாணவனின்இதயத்தில் புகுந்து, அவனின்
வாழ்வை நல்வழிப்படுத்தும்! விதைக்கப்படுவது தான் முளைக்கும்.
அரிச்சந்திரன் கதையை படித்த காந்திஜி, பொய் பேசுவதை தவிர்த்ததுபோல்,
பள்ளிப் பருவதில் எவர்கள் குறித்து மாணவர்கள் அதிகம் அறிந்து கொள்கின்றனரோ,
அதன் தாக்கம் அவர்கள் மனதில் நிலைத்து விடும். எத்தனை காலம்,
நம்மை கொள்ளை அடிக்க வந்தவர்களின் மூர்க்கத்தனத்தையும், முட்டாள்
தனத்தையும், ஆட்சி அதிகாரத்திற்காக சொந்த சகோதரர்களை கொன்றதையும் கற்றுக்
கொடுப்பீர்கள்? கரிகால் பெருவளத்தான், ராஜராஜ சோழனை விடவா ெஷர்ஷாவும், அக்பரும் நீர் மேலாண்மையிலும், அரசியல் நிர்வாகத்திலும் சிறந்தவர்கள்?சி.பி.எஸ்.இ., போன்று, தமிழக பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டு வாருங்கள்! நம் பிள்ளைகள் இந்த மண்ணின் வரலாறை முதலில் தெரிந்து கொள்ளட்டும்! நடவடிக்கை எடுப்பரா?
ஜி.பி.கார்த்திக் ராம்குமார், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தர்ப்பூசணியில் அடர் சிவப்பு நிறத்திற்காக, 'எரித்ரோசின்' ரசாயனத்தை ஊசி வாயிலாக, பழங்களுக்குள் செலுத்துவதாக சர்ச்சை எழுந்து அடங்கிய நிலையில், தற்போது மாம்பழங்களை, 'கால்சியம் கார்பைடு' வாயிலாக, செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக செய்திகள் வெளிவருகின்றன. இப்பழங்களை உண்போருக்கு வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்று வலி ஏற்படுகிறது. இதுகூட மாம்பழ சீசனோடு முடிந்து விடுகிறது.ஆனால், வாழைப்பழம், ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி போன்றவை எல்லா காலங்களிலும் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. பதநீரில் கூட ரசாயனம் கலக்கப்படுகிறது.உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற மோசடி நடந்து கொண்டிருக்கும் நிலையில், உணவகங்களில் இலைகளுக்கு பதில் பிளாஸ்டிக் தாள்களையும், பார்சலுக்கு பிளாஸ்டிக் டப்பாக்களையும் பயன்படுத்துவதும், டீ, காபிகளை கூட பாலிதீன் பைகளில் கட்டித் தருகின்றனர். இதனால், பிளாஸ்டிக்கில் உள்ள, 'டையாக்சின்' என்ற வேதிப்பொருள் வெளியாகி, உணவுடன் கலந்து விடுகிறது. இத்தகைய உணவுகளை ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்று நோய் உண்டாகும் அபாயம் உள்ளது.உணவு பாதுகாப்பு துறை மற்றும் தரக் கட்டுப் பாட்டு அதிகாரிகளோ, இதை தடுத்து நிறுத்தாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
29-Apr-2025