அ.தி.மு.க., கூட்டணியே வெல்லும்!
எம்.ராஜா, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து பல்வேறு யூகங்கள் உலவுகின்றன. அதில், தற்போதைய தி.மு.க., கூட்டணி மிக வலிமையாக இருப்பது போன்று காட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரமோ வேறு. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெற்ற ஓட்டு, 44.91 சதவீதம். இதில், தி.மு.க., - 37.7, காங்கிரஸ் - 4.27, வி.சி., - 1, சி.பி.ஐ-., 1.09, சி.பி.எம்., 0.85 சதவீதம். கூட்டணி கட்சிகளின் மொத்த ஓட்டு வெறும், 7.21 சதவீதம் மட்டும் தான்!அதேசமயம், அ.தி.மு.க., கூட்டணி பெற்ற ஓட்டு, 40.14 சதவீதம். இதில், அ.தி.மு.க., - 33.29, பா.ம.க., - 3.80, பா.ஜ., - 2.62, தே.மு.தி.க., - 0.43 சதவீதம்!தற்போது, தினகரனின் அ.ம.மு.க., கட்சியும் பா.ஜ., கூட்டணியில் தான் உள்ளது. அவர்களது ஓட்டு கடந்த தேர்தலில், 2.35 சதவீதம். இதையும் சேர்த்தால் அ.தி.மு.க., கூட்டணியின் பலம், 42.49 சதவீதம். இரு கூட்டணிகளுக்கு இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் வெறும், 2.42 சதவீம் மட்டுமே!இந்நிலையில், புதிய வரவான நடிகர் விஜயின் த.வெ.க., வரும் சட்டசபை தேர்தலில் எவ்வளவு ஓட்டு பெறும் என்பது தெரியவில்லை. இம்முறை சிறுபான்மையினர் ஓட்டுகள் பிரிந்து, த.வெ.க.,விற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓட்டுகள் இதுவரை தி.மு.க.,விற்கு சென்றவை. இது, 8 சதவீதம் என கணித்துள்ளனர். அதன்படி பார்த்தால், த.வெ.க., 5 சதவீத ஓட்டுகள் பெறலாம். ஆக, தி.மு.க., சென்ற தேர்தலில் வாங்கிய சிறுபான்மை ஓட்டுகளில் குறைந்தது, 5 சதவீதத்தையாவது இழக்கும். மேலும், விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதை பொருள் கலாசாரம், லஞ்சம் - ஊழல், ஹிந்துமத துவேஷம் மற்றும் அரசு ஊழியர்களின் கோபம் போன்ற காரணங்களால், தி.மு.க., கணிசமாக ஓட்டு இழப்பை சந்திக்கும். இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்தால், இந்த தேர்தல் அ.தி.மு.க., கூட்டணிக்கே சாதகமாக உள்ளது. தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைப்பது, இனி கனவிலும் நடக்காது! தி.மு.க.,வின் வியூகம் வெற்றி பெறுமா?
என்.ஏ.நாகசுந்தரம்,
குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதை கூட்டணி
கட்சியினர் உணர்ந்து விட்டனர். அதனால் தான், தி.மு.க., தந்த தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை வைத்ததோடு, தமிழகத்தில் பா.ஜ., வலுவாக
வளர்ந்து வருவதையும் சுட்டிக் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க., -
பா.ஜ., கூட்டணி, தி.மு.க., வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் பெரிய அளவில்
பாதித்துள்ளது. அக்கூட்டணியை எப்படியாவது முறித்து விட வேண்டும் என்று
கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர், தி.மு.க.,வினர்!இந்நிலையில்,
மதுரையில் நடந்த முருக பக்தர் மாநாட்டில், ஹிந்து அமைப்பினர் ஈ.வெ.ரா.,
அண்ணாதுரை குறித்து வீடியோ வெளியிட, 'பா.ஜ.,வினர் ஈ.வெ.ரா., அண்ணாதுரையை
அவமானப்படுத்தி விட்டனர். மேடையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க.,வினர் அதை
கண்டிக்கவில்லை' என கொளுத்தி போட்டனர், தி.மு.க.,வினர். அந்த தீ நன்றாகவே பற்றிக் கொண்டது, அ.தி.மு.க., தலைவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. ''எலி ஏன் வேட்டி கட்டிக் கொண்டு ஓடுகிறது'' என்பதை புரிந்து கொள்ளாமல், இஷ்டத்திற்கு பேசுகின்றனர் அ.தி.மு.க.,வினர். வலுவான
கூட்டணி இன்றி தி.மு.க.,வை தேர்தலில் தோல்வியுற செய்ய முடியாது. இந்த
உண்மையை உணர்ந்து,தி.மு.க.,வின் அரசியல் வியூகத்தை புரிந்து கொண்டு,
பழனிசாமி நடக்க வேண்டும். தி.மு.க., வுக்கு மாற்று அ.தி.மு.க., என மமதையில் நடந்தால், வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த கதையாகி விடும். பலவீனங்களை பலமாக மாற்றினால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! கட்டண உயர்வு பற்றி பேசலாமா?
ரா.கணேசன்,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று முதல் ரயில்
கட்டணம் உயரவிருப்பதால், மக்கள் மகிழ்ச்சி இழந்து விட்டதாக
அங்கலாய்த்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின். நீண்ட இடைவெளிக்கு
பின், அதாவது, 2020க்கு பின் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும்,
புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.நெடுந்துார ரயில்களுக்கும், 500 கி.மீ., வரை கட்டண உயர்வு இல்லை. 500 கி.மீ., மேல் என்றால் அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சென்னை - டில்லி இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தால்,100 ரூபாய் கூடுதல்! இதுவா கட்டண உயர்வு? இதற்கு சமூக வலைதளத்தில் ஒரு பதிவு; பிரதமர், ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கடிதம்.மின்கட்டணம்
முதல் பால் பாக்கெட் வரை நீங்கள் உயர்த்திய கட்டண உயர்வால், பொதுமக்களாகிய
நாங்கள் விழிபிதுங்கிப் போய் இருப்பது தெரியவில்லையா? சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் சென்றால், 95 ரூபாய் தான்; ஆனால், அரசு பஸ்சில் 155 ரூபாய் கட்டணம். -சென்னை
பல்லாவரத்தில், 2,400 சதுர அடி தொழிற்சாலைக்கு, 2021ல் கட்டிய சொத்து வரி,
25,534 ரூபாய். தற்போதோ, 48,566 ரூபாய். பாதாள சாக்கடை வரியோ, 9,000
ரூபாய். அதுமட்டுமா... -105 கிலோவாட் மின் இணைப்புக்கு, 2021ல் மாதாந்திர நிரந்தர கட்டணம், கிலோவாட்டிற்கு, 35 ரூபாய்; இப்போது, 362 ரூபாய்.நீங்கள் பேசலாமா கட்டண உயர்வு பற்றி! போதும் நாடக அரசியல்!
பி.எஸ்.ரங்கசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது நாட்டில், 18 சம்ஸ்கிருத பல்கலைகள் உள்ளன. அவற்றில், 17 பல்கலைகள், 2014க்கு முன் மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்டவை. இன்று சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக கூக்குரலிடும் தி.மு.க., 2014ல் காங்., கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில், அம்மொழிக்கு அதிக நிதி வழங்கப்பட்ட போது, அதுகுறித்து ஏன் பேசவில்லை? காரணம், ஒரு மொழிக்கு எத்தனை பல்கலை உள்ளனவோ, அதற்கேற்பத்தான் நிதி வழங்கப்படும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சம்ஸ்கிருத பல்கலைகள், 18 உள்ளன. ஆனால், தமிழ் பல்கலையோ ஒன்றே ஒன்று. அதுவும், 1981ல் எம்.ஜி.ஆர்., துவக்கியது.தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தி.மு.க., இத்தனை ஆண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனை தமிழ் பல்கலைகளை துவக்கியுள்ளது? இன்னும் எத்தனை நாளைக்கு தான் தி.மு.க.,வினர் நாடக அரசியல் நடத்துவர்?