ஆர்.எஸ்.பீமன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டத்தில்பங்கேற்று உரையாற்றிய பா.ம.க., தலைவர் அன்புமணி, 'தமிழகத்தில் பட்டியலின சமுதாயம், பா.ம.க.,வுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை முதல்வர் ஆக்குவோம். 'அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரை 1998ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பா.ம.க.,தான்' எனப் பேசி இருக்கிறார்.இத்தனை ஆண்டுகளாக பா.ம.க., தலைமையில் ஆட்சி, அன்புமணி தான் முதல்வர் என்று மேடைதோறும் முழங்கிக் கொண்டிருந்தவர், முதல் முறையாக, பட்டியலின சமுதாயம் பா.ம.க.,வுக்கு ஆதரவளித்து, சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் வெற்றி பெற்று விட்டால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என, கதையளந்து இருக்கிறார்.அந்த கதைக்கு துணைக்கதையாக,1998ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பா.ம.க., தான் என்று வேறு புளுகி இருக்கிறார்.கடந்த, 1998ம் ஆண்டு பா.ஜ.க., தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், இன்றைக்கு 'இண்டி' கூட்டணியில் உள்ளது போல, 27க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்று தேர்தலை எதிர்கொண்டன; வெற்றியும் பெற்று விட்டன. ஆனால், அந்த தேர்தலின்போது, அன்புமணி அரசியலிலேயே இல்லை.முதன்முறையாக, 2004ம் ஆண்டு தான், தேர்தலில் நிற்காமல், புறவாசல் வழியாக ராஜ்யசபாவில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் ஆனார்.கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபாதேர்தலில் பா.ம.க., சார்பாக வெற்றி பெற்று, பார்லி.,யில் நுழைந்தவர், சென்னை தலைமை அஞ்சலகத்தில் எழுத்தராக பணியாற்றி, அரசியலில் நுழைந்த தலித் எழில்மலை.தலித் எழில்மலை -1999 வரை மத்தியஅமைச்சராக கோலோச்சினார். அந்த தேர்தலில் அன்புமணி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றிருந்தால், அவர் தான் அமைச்சராகி இருப்பாரே தவிர, தலித் எழில்மலைக்கு வாய்ப்பு வழங்கி இருக்க மாட்டார்.தலித் எழில்மலையை மத்திய அமைச்சராக்கியது, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த, பா.ஜ., அரசு தானே தவிர, பா.ம.க.,வோ, அன்புமணியோ, ராமதாசோ அல்ல!ஒரு பேச்சுக்கு, பட்டியலினத்தவர்கள் ஆதரவளித்து, 2026 சட்டசபை தேர்தலில்,117 இடங்களில் வெற்றியும் பெற்று விட்டால், முதலமைச்சராக ஆக்கும் தலித்தை, சுயமாக இயங்க விடுவாரா?எல்லாம் பதவி வெறி படுத்தும் பாடு! கிரிக்கெட்டுக்கு நிகரான முக்கியத்துவம்!பி.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய'இ - மெயில்' கடிதம்: நடப்பாண்டு ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி பதக்கம் மற்றும்ஐந்து வெண்கலப்பதக்கம் பெற்று, 71வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்று இந்த பதக்கங்களை கொண்டு வந்து சேர்த்த நம் வீரர்களை மனமாற பாராட்டுவோம்.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனாவிற்குப் பின், ஐந்தாவது பெரிய நாடாக வளர்ந்துள்ள நம் இந்தியா, ஆறு பதக்கங்களை பெறவே கஷ்டப்படுவதைப் பார்த்தால், இன்னும் விளையாட்டு துறையில் நம் அரசுகள் உரிய கவனத்தை செலுத்தவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.கடைசி நேரத்தில் சில விளையாட்டு வீரர்களைத்தேர்ந்தெடுத்து, ஒலிம்பிக்போட்டிக்கு அனுப்புவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த ஒலிம்பிக் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. அதற்காக விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதுடன், பயிற்சி அளிப்பதையும் இப்போதே ஆரம்பிக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் கோடிக்கணக்கில் கிடைக்கும் சன்மானத்திற்கு நிகராக மற்ற விளையாட்டுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.'பதினொரு முட்டாள்கள் விளையாடும் ஒரு விளையாட்டை பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கின்றனர்' என்று பெர்னாட்ஷா சொல்லிஇருக்கிறார்.அதற்காக, நாம் கிரிக்கெட் விளையாட்டை வெறுக்க வேண்டாம். மற்ற விளையாட்டுகளிலும் தீவிர கவனம் செலுத்தி, நல்ல வீரர்களை உருவாக்க வேண்டாமா? நாம் பயிற்சி கொடுக்கும் வீரர்கள் நுாற்றுக்கணக்கில் இருந்தால் தான், 50 பதக்கங்களையாவது நாம் ஒலிம்பிக் விளையாட்டில் அள்ள முடியும். எந்த விளையாட்டு துறையிலும் அரசியல் கலக்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்காமல் அலைக்கழிப்பதும் இருக்கக் கூடாது. கிரிக்கெட் மட்டுமல்ல மற்ற விளையாட்டுகளுக்கும் நம் நாட்டில் சிறந்த பயிற்சியும், சன்மானமும் அளித்தால், ஒலிம்பிக்கில் இன்னும்பல பதக்கங்களை வெல்ல முடியும்.என்ன சொல்ல போகிறார் மம்தா? வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரசு மருத்துவமனை டாக்டர் கொலை விவகாரத்தில், சி.பி.ஐ., வசம் வழக்கை ஒப்படைத்ததில் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.* கோல்கட்டா அரசு மருத்துவமனையில்,டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டதை, முதலில் தற்கொலை என நாடகமாடியது யார்? சொல்லலாமே மம்தா?* கல்லுாரி முதல்வர், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு முதலில்தகவல் தெரிவிக்கவே இல்லை; போலீசிடமும் புகார் கொடுக்கவில்லை. ஏன்? மம்தாவிடம் பதில் உள்ளதா?* விஷயம் விபரீதம் ஆனதும், கோல்கட்டா உயர் நீதிமன்றம் தலையிட்டு, சி.பி.ஐ., வசம் விசாரணையை ஒப்படைத்தது. அதுவரை மம்தா வாயை மூடிக் கொண்டிருந்தது ஏன்?* விசாரணையை சொந்த மாநில போலீசாரிடம் ஒப்படைக்க, மம்தாவுக்கு தயக்கம் ஏற்பட்டது ஏன்?* மேற்கு வங்க பெண்கள், நள்ளிரவில் தானாகவே 32 இடங் களில் திரண்டு, தீயிட்டு ஊர்வலம் நடத்தினர். என்ன செய்து கொண்டிருந்தார் மம்தா?* இதோ... தற்போது நாடு முழுதும் இந்த விவகாரம் பற்றி எரிகிறது. என்ன சொல்லப் போகிறார்மம்தா? மணிப்பூரில்ஒரு பெண், மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது, வாயை மூடி மவுனம் காத்த ஆட்சியாளர்கள் மீது, மம்தா கொதித்தெழுந்தாரே? இப்போது ஏன் மவுனம் காக்கிறார்?* இதையெல்லாம் தாண்டி, சூடு சுரணை உள்ள, 'இண்டி' கூட்டணி கட்சியினர்சிலர், மம்தாவை நேரடியாக கேள்வி கேட்கத் துவங்கி உள்ளனர். என்ன பதில் சொல்லப் போகிறார் மம்தா?