உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / காப்பி அடிப்பது தடுக்கப்படுமா?

காப்பி அடிப்பது தடுக்கப்படுமா?

அ.குணசேகரன், வழக்கறிஞர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபகாலமாக, மாணவர்கள் இடையே காப்பி அடிக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது. காரணம், தனியார் ஆங்கிலப் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதில் ஏற்பட்ட முறைகேடு இது!சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற ஒரு தனியார் பள்ளியில், பொதுத்தேர்வில், விடைகளை நகல் எடுத்து மாணவர்களுக்கு கொடுத்தது குறித்து, அப்பள்ளி மாணவர் ஒருவரின் பெற்றோர் வாயிலாக, கலெக்டருக்கு புகார் சென்றது.கலெக்டர் திடீர் ஆய்வு செய்து, அப்பள்ளியில் தேர்வு நடத்த தடை விதித்தார். தனியார் பள்ளிகள் போன்று, தற்போது அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுப் பள்ளி தேர்வு மையங்கள் பலவற்றிலும் மாணவர்கள் காப்பி அடிக்க உதவுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. அத்துடன், இப்போது பல அரசுப் பள்ளிகளில், போதுமான மாணவர்கள் இல்லாததால், தனியார் ஆங்கிலப் பள்ளி தேர்வு மையங்களில் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு வெளியே, மாணவர்கள் வீசி செல்லும், 'பிட்' பேப்பர்களே, அவர்கள் எப்படி தேர்வு எழுதியிருப்பர் என்பதை படம்பிடித்து காட்டும்!தேர்வு அறை கண்காணிப்பாளராக செல்லும் நேர்மையான ஆசிரியர்கள், மனம் வெறுத்துதான் பணி செய்கின்றனர். இதற்கு ஒத்துழைக்காத ஆசிரியர்களுக்கு, தேர்வுப்பணி சரியாக கொடுக்கப்படுவது இல்லை. காப்பி அடித்து குறுக்கு வழிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியை மட்டும் எப்படி நேர்மையாக எழுதுவர்? இந்த குறுக்குவழி மாணவர்களால் நேர்மையாக தேர்வு எழுதும் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். காப்பி அடிக்கும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றால், தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு எழுதுவதை பதிவு செய்ய வேண்டும்; அதை, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.எப்படி தேர்தல் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படுகிறதோ அதுபோன்று, தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமாராக்கள் வாயிலாக பதிவு செய்யப்படும் காட்சிகள், தலைமை ஆசிரியர் அறையில், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர், கல்வியாளர் மற்றும் காவல் துறை அதிகாரியால் கண்காணிக்கப்பட வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்தாவிட்டால், வருங்காலத்தில், நேர்மையும், உழைப்பும் அற்ற, குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் மாணவச் சமுதாயம் உருவாகி விடும். எனவே, பொதுத் தேர்வு நடக்கும் மையங்களில், 'சிசிடிவி' பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளலாம்!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பன்னீர்செல்வம் என்றைக்கு கட்சி அலுவலகத்தை உடைத்தாரோ, அப்போதே அவர் அ.தி.மு.க.,வில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர் ஆகிவிட்டார். அவரை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை' என்று கூறியுள்ளார், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி. கடந்த 1977- சட்டசபை தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளராக ஐசரி வேலனை அறிவித்தார், எம்.ஜி.ஆர்., இதை எதிர்த்து, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் வண்ணை பாண்டியன் ஆதரவாளர்கள், ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் ரகளை செய்தனர். மாடியில் இருந்து இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கீழே இறங்கி வந்து, அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். கேட்கவில்லை; ரகளை அதிகமானது.உடனே, தன் சர்ட் கையை மடக்கி விட்டு, வேட்டியை மடித்துக்கட்டி, அங்கே இருக்கும் கீற்றுக் கொட்டகையில் இருந்த, ஒரு பெரிய கட்டையை இழுத்து எடுத்தபடி எம்.ஜி.ஆர்., ஓடி வருவதை கண்டதும், ரகளை செய்தோர் தலை தெறிக்க ஓடிவிட்டனர். உடனே, அலுவலக நிர்வாகி துரையை அழைத்து, 'ஏதோ ஓர் உரிமையில் இப்படி செய்துவிட்டனர்; பாண்டியன் மீதோ, அவரது ஆதரவாளர்கள் மீதோ காவல் நிலையத்தில் புகார் ஏதும் தர, வேண்டாம்' என்று பெருந்தன்மையாக கூறினார், எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தது. 1988, ஜனவரி 30ல் ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது. இத்தகவல் ஜெயலலிதாவுக்கு வந்தவுடன், 31ஆம் தேதி காலை, கட்சி அலுவலகத்தை மீட்க வியூகம் அமைத்தார். இத்தகவல் காவல்துறை உயர் அதிகாரி வாயிலாக, ஜானகிக்கு தெரியவரவே, பொருளாளர் மாதவனை அழைத்து, கட்சி அலுவலகத்தை பூட்டி, சாவியை வைத்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார். மறுநாள் காலை நெடுஞ்செழியன், சோமசுந்தரம், திருநாவுக்கரசு, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் வந்து, கட்சி அலுவலக வாசலில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டம் செய்தார், ஜெயலலிதா. போராட்டம் செய்தவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு, போயஸ் கார்டன் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். அலுவலகத்தை மாதவன் பூட்டி வைத்ததால், அன்று கட்சி அலுவலகம் தப்பியது; இல்லையென்றால், ஜெயலலிதா என்ன செய்திருப்பார் என்று கூற முடியாது. 'மாஸ்டர் பிளான்' அமைத்து, 32 எம்.எல்.ஏ.,க் களை தன் வசம் வைத்து, ஜானகி ஆட்சியை கலைத்து, தலைமை அலுவலகத்தை அபகரிக்க வந்த ஜெயலலிதாவை, தலைவியாக பழனிசாமி ஏற்கவில்லையா... அவரது அமைச்சரவையிலும், கட்சியிலும் முக்கிய பதவிதான் வகிக்கவில்லையா?கடந்த 1990ல் தி.மு.க., ஆட்சியின்போது, மீண்டும் தலைமை அலுவலகத்தில் ரகளை... ஜெயலலிதாவுக்கு எதிராக, போட்டி பொதுக்குழுவை கூட்டி, தலைமை அலுவலகத்தை அபகரிக்க, தன் ஆதரவாளர்களுடன் வந்தார், அப்போதைய கட்சி பொருளாளர், திருநாவுக்கரசு. அந்த ரகளையில் பிரமுகர் ஒருவர் ஜெயலலிதா படத்தை எடுத்து வெளியில் வீசியதுடன், படத்தில் உள்ள ஜெயலலிதா முகத்தின் மீது, தன் காலை வைத்து மிதித்தார். இதற்காக அவர்கள் அனைவரும் அ.தி.முக.,வில் இருக்க தகுதியில்லை என்று கூறவில்லை ஜெயலலிதா. மாறாக, ரகளை செய்த அனைவரையுமே பின்னாளில் அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொண்டதுடன், தன் படத்தின் மீது கால் வைத்த பிரமுகரையும் எம்.பி., ஆக்கினார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை விட பழனிசாமி ஆளுமைமிக்க தலைவரும் இல்லை; மற்றவர்கள் செய்யாத தவறை பன்னீர்செல்வம் செய்துவிடவும் இல்லை.அதனால், பன்னீர்செல்வம் உட்பட அனைவரையும் நிபந்தனையுடன் அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்வதே, கட்சி வளர்ச்சிக்கு நல்லது! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை