உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'போதை பொருட்கள் இல்லாத தமிழகம்' என்ற புதிய இயக்கத்தை, தி.மு.க., அரசு துவங்கி, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், போதை பொருட்கள் நடமாட்டம் குறைவதற்கு மாறாக அதிகரித்து உள்ளது. போதை பொருட்கள் ஒழிப்பில், தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில், மாணவர்களிடையே போதை தடுப்பு உறுதிமொழி ஏற்பதை வெறும் சடங்காக செய்வதால், எந்த பயனும் இல்லை. அமைச்சர்கள் எல்லாம் நேர்மையா நடப்பேன்னு எடுக்கிற பதவி பிரமாணம் மாதிரி, இந்த உறுதிமொழியும் ஒரு சம்பிரதாய சடங்கு தான்!விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அறிக்கை: வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்து உலக நாடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன. பாதிக்கப்படும் ஹிந்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் முன் வர வேண்டும்.உலக நாடுகளை விடுங்க... உள்ளூர்ல, ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்கி ஆட்சி நடத்துற இங்குள்ள சில கட்சிகள் கூட வாய் திறக்கலையே!தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர்ஜி.கே.நாகராஜ் அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில் வனவிலங்குகளை கையாளக்கூடிய அனுபவமிக்க அதிகாரிகளும், பணியாளர்களும் இருந்தனர். ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்கும் வரும் வனவிலங்குகளை இலகுவாக கையாண்டு வனத்திற்குள் திருப்பியனுப்புவதில் திறமை பெற்றிருந்தனர். தி.மு.க., ஆட்சியில் வடமாநில உயர் அதிகாரிகள், திறனற்ற வன பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பதால், யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. வனவிலங்குகள் விவகாரத்துல, அ.தி.மு.க., தங்களுக்கு எதிர் முகாமில் இருப்பதை மறந்துட்டு பாராட்டுறாரோ?தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: செந்தில் பாலாஜி மீது ஊழல், மோசடி புகாரை தி.மு.க., அளித்தது. அ.தி.மு.க., அரசு வழக்கு பதிந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு, பண மோசடி வழக்கில் கைது செய்தது. ஆனால், பா.ஜ., பழி வாங்குகிறது என்கின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்து வழக்கு தொடர்ந்தது காங்கிரஸ். ஆனால், பா.ஜ., பழிவாங்குகிறது என்கின்றனர். இது தான் அரசியல்.இதுதான், அவங்க கையை வச்சே அவங்க கண்ணை குத்துறதா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ