காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கு என்று மக்களிடம் எப்போதும், ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நமக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவர் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேட்டி: சென்னை மேயராக போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை, கடந்த ஐந்தாண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சாதனைகளைச் சொல்லித்தான் ஓட்டு கேட்பேன். மக்கள் நிச்சயம் ஆதரவு தருவர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: தற்போது சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் யார் எனக் கேட்கும் நிலை உள்ளது. திராவிடக் கட்சிகளை தமிழகத்தில் இருந்தே, அப்புறப்படுத்திவிட்டு, மாற்று அணியை உருவாக்குவோம். தி.மு.க., ஆட்சியில் நடந்த குற்றங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் குறையவில்லை.
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பேச்சு: அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் விவகாரங்களில் மத்திய அரசு எவ்விதம் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ, அவ்விதம் நடக்கவில்லை. ஒவ்வொரு ஜனநாயக அரசும், சில மோசமாக சுவடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அது தான் மத்திய அரசுக்கும் நேர்ந்தது.
காங்கிரஸ் எம்.பி., அழகிரி பேச்சு: விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தும் பல அரசியல் கட்சியினர், தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தபோதெல்லாம், பயங்கரவாதம், ரவுடிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி வந்த ஜெ.,வும், மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியும், இவர்களுக்குத் துணை போவது வருத்தமளிக்கிறது.
இந்திய ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி நிறுவன இயக்குனர் ராம் விஸ்வகர்மா பேச்சு: கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவும், அங்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை இந்தியாவும், சீனாவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.