தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: முதல் கட்ட
தேர்தலில், தமிழகத்தில் துவங்கிய மோடி எதிர்ப்பு அலை, நாடு முழுதும் வீசிக்
கொண்டிருப்பதை உணர்ந்ததன் விளைவு தான், மோடியின் இஸ்லாமியர் வெறுப்பு
பேச்சு. இதன் வாயிலாக, நவீன கோயபல்ஸ் மோடிக்கு மக்கள் உரிய பாடம்
கற்பிப்பர் என்பது உறுதி.இவர் சொல்ற மாதிரி மோடி எதிர்ப்பு அலை வீசுதோ, இல்லையோ... இப்போதைக்கு நாடு முழுக்க வெப்ப அலை தான் வேகமா வீசுது! தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: தஞ்சாவூர், கும்பகோணம் தேர் திருவிழாக்களில் அதிகாரிகள் கவனக்குறைவு, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தேர் மின் கம்பங்களில் சிக்கியது. சாலைகள் சீரமைக்காததால் தேர் பள்ளத்தில் சிக்கி மிகப்பெரிய இடையூறு மற்றும் வேதனையை மக்களுக்கு ஏற்படுத்தியது. துறை அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான், இனி வரும் காலங்களில் திருவிழாக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்.ஹிந்துக்கள் மனம் புண்படும்படி நடந்துக்கிற அதிகாரிகளுக்கு திராவிட மாடல் அரசு புரமோஷன் வேணும்னா தரும்!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு, லோக்சபா தேர்தல் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச மைய கட்டுமான பணிகள், தற்போது போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் துவங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வள்ளலாரின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பா.ம.க., மாதிரி இந்த விஷயத்துல களத்துல இறங்கி போராடாமல், பெயருக்கு அறிக்கை மட்டும் விடுறாருன்னு தோணுது!த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்தியதால், மனைவி, மாமனார் கொலை, கல்லுாரி மாணவி மரணம், பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் என, அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை தமிழக அரசு உணர வேண்டும்.தமிழகம் போற போக்குல, போதை பொருள் நடமாட்டத்துல ஆப்ரிக்க நாடுகளையே மிஞ்சிடும் போலிருக்கே!