ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'பட்டப்
படிப்புகள் திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை' என, ஆர்.எஸ்.பாரதி பேசி
உள்ளார். 'பட்டியல் இனத்தவர்கள் நீதிபதியானது திராவிட இயக்கம் போட்ட
பிச்சை' என, ஏற்கனவே பேசினார். இவருக்கு, திராவிட இயக்கம், 'பிச்சை நாயகர்'
என்ற விருது கொடுக்கலாம். திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாக,
தமிழகத்தில் பட்டம் படித்தவர்களே இல்லையா?'கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சையே, எங்க தயவால தான் அந்த பதவிக்கு போனார்'னு ஆர்.எஸ்.பாரதி சொன்னாலும் சொல்லுவார் போலும்! அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: செங்கோல் குறித்து பார்லிமென்டில் பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன், 'செங்கோல் வைத்திருந்த மன்னர்கள், அந்தப்புரத்தில் பெண்களை அடிமைப்படுத்தினர்' என கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. இவர் எப்படி புத்தகங்கள் எழுதினார் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. எதற்கு, எதை பற்றி பேசுவது என்று கூட தெரியாதவருக்கு, மக்கள் ஓட்டு போட்டது வேதனையே.இவரெல்லாம் தனியா நின்னா, 'டிபாசிட்' கூட வாங்க மாட்டாரு... 'திராவிட மாடல்' தயவுல ஜெயித்தவரிடம், வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்?விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில பொதுச் செயலர் சந்திரசேகரன் பேட்டி: கோவை சி.எஸ்.ஐ., பாதிரியார் ஒருவர் தன் மதத்தை பற்றியும், சடங்கை பற்றியும் பேசாமல், ஹிந்து மத சடங்குகளை இழிவுபடுத்தியும், ஹிந்து மக்களை இழிவுபடுத்தியும் பிரார்த்தனை கூட்டத்தில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதெப்படி...? அவர் மீது நடவடிக்கை எடுத்தால், 'சிறுபான்மையினர் விரோத அரசு' என்ற பட்டம் வந்துடுமே!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'சட்டப்படி நான் பட்டியலினத்தை சேர்ந்தவன். என் குடும்பத்தில் பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், இப்போதும் என் மீது தலித் என்ற முத்திரை குத்தப்படுகிறது' என, தி.மு.க., - எம்.பி., ராஜா தெரிவித்துள்ளார். அப்படி உண்மையில் அவர் கருதினால், பொதுத் தொகுதியில் போட்டியிட்டிருக்கலாம். தனி தொகுதியில் போட்டியிட்டு, அவரே அவர் மீது தலித் முத்திரையை குத்திக் கொண்டு, சமுதாயத்தின் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.நியாயமான கேள்வி... ஆனா, அவரே விரும்பினாலும், அவரது கட்சி தலைமை அதற்கு அனுமதிக்குமா என்பது கேள்விக்குரியது!