முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'அ.தி.மு.க.,
பிளவுபட்டபோது, ஜானகி அம்மாள் எப்படி செயல்பட்டாரோ, அதேபோல் சசிகலா
செயல்பட வேண்டும்' என, பழனிசாமி கூறியுள்ளார். ஜானகி அம்மாள் போல் விட்டு
கொடுப்பதற்கு, பழனிசாமி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே. 10 தேர்தல்களில் தோற்று,
டிபாசிட் இழக்கும் அளவுக்கு கட்சியை படுகுழியில் தள்ளி விட்டவர் தான்,
விட்டு கொடுத்து விலகி இருக்க வேண்டியவர்.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி வந்துட்டா மட்டும், வெற்றிகளை வாரி குவிச்சிடுவீங்களாக்கும்! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: பணி நிரவல் கலந்தாய்வு என்ற பெயரில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் நிலையிலான பணியிடங்களை குறைக்கும் முயற்சியில், பள்ளிக்கல்வி துறை ஈடுபட்டிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது, அப்பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.'நாங்க ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் அரசு பணி வழங்குவோம்'னு சொன்னவங்க, அதுக்கு நேர்மாறா அல்லவா செயல்படுறாங்க!தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: போதைப் பொருட்கள், கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும். அதே வேளையில் டாஸ்மாக் மது போதையும், கொலைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றன. தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கு ஒன்றுதான் இதற்கான நிரந்தர தீர்வு. இது சாத்தியம் இல்லையெனில், தமிழகம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை. 'பூரண மதுவிலக்கு அமல்ல இருக்கிற குஜராத்துலயும், பீஹார்லயும் கொலைகளே நடக்கலையா'ன்னு திராவிட மாடல் ஆட்சியாளர்கள் திருப்பி கேட்பாங்களே!அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின், தமிழக இணை செயலர் விஜயராகவன் அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு அக்கறையாக அறிவுரை வழங்குவது போல், தன் அரசியல் செல்வாக்கை உயர்த்தும் வகையில், நடிகர் விஜய், மாணவர்களுக்கு தவறான கருத்துக்களை கூறுவதை ஏ.பி.வி.பி., கண்டிக்கிறது. அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம், 'நீட்' தேர்வு குறித்தும், தமிழினம், ஒன்றிய அரசு என்றும் அரசியல் பேசி வன்முறையை துாண்டுகிறார்.இதுவே விஜய், 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக பேசியிருந்தால், 'மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட்டார்'னு துள்ளி குதிச்சிருப்பீங்களே!