தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: தமிழக தொழில்
வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ள மின் வாரியத்தில், 1,000த்துக்கும்
மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. குறைந்த பணியாளர்கள் இருப்பதால்
வாரியத்தில் குளறுபடி ஏற்படுகிறது. அரைகுறை வேலை தெரிந்தவர்களை ஒப்பந்த
தொழிலாளர்களாக பணியில் ஈடுபடுத்துவதால், மின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு இறப்பவர்களை மின்வாரியத்தில் பணிபுரியவில்லை என, கைகழுவுகின்றனர்.மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களை வைத்தே காலத்தை ஓட்டுவதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கோ?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 1 டி.எம்.சி., வீதம் தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், 'தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை. நல்ல மழை பெய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியிருக்கிறார். கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பது பெரும் அநீதி. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு நீதியை எதிர்பார்க்க முடியாதுன்னு இவருக்கு தெரியாதா?தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'அண்ணாமலை வீட்டை முற்றுகையிட போகிறோம்' என, தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முதலில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க முயற்சிக்கவும். இப்படி தான் பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட போவதாக சொல்லி, பல மாதங்களாகி விட்டன. அப்போது உங்களுக்கு உணவளிப்பதாக கூட அண்ணாமலை கூறினார். 'ஓசி சோறு' பட்டம் ஏற்கனவே ஒருத்தருக்கு கொடுத்தாகி விட்டது. வேறு பட்டம் அளிப்பது குறித்து சிந்திக்கிறோம்.இப்படி கலாய்க்கிறாரே... இதுக்காகவாச்சும் காங்கிரசார் பெரும் படையை திரட்டி, 'கெத்து' காட்டுவாங்களா?தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக கையாளப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த, 10 ஆண்டுகளில் இந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது, கொலை, கொள்ளை தமிழகத்தில் குறைந்து உள்ளது. காவல்துறைக்கு பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு இன்டலிஜென்ஸ் டி.எஸ்.பி., இருக்க வேண்டும்.உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு பாடம் எடுக்கிறாரோ?