தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் அறிக்கை: மாநில அரசுகளுக்கு
உட்பட்ட அனைத்து இளநிலை, முதுநிலை, பட்டய பல் மருத்துவ படிப்புகளில்
ஓ.பி.சி., வகுப்பினருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக, 2021 முதல் 2025ம் ஆண்டு வரை, 20 ஆயிரத்து
88 பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை உறுதி
செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை போராட்டத்தை நிகழ்த்திக் காட்டியவர் நம்
முதல்வர் ஸ்டாலின். அவரது வழியில் சாதனை பயணத்தை தொடர்வோம். இவங்க கேட்டு,
மத்திய அரசு செய்யாத எத்தனையோ திட்டங்கள் இருக்கே... அந்த தோல்விக்கான
பொறுப்பையும் இவங்க ஏத்துக்குவாங்களா? அ.ம.மு.க., பொதுச்செயலர் தி னகரன் அறிக்கை : ராமநாதபுரம் மாவட்டம், செட்டியத் தெருவில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது, அடையாளம் தெரியாத கும்பல், வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளது. நாமக்கலில் நடந்த சட்டவிரோத சிறுநீரக திருட்டை தடுக்க முடியாத தி.மு.க., அரசு, அதை முறைகேடு எனக் கூறி சமாளிக்கிறது. அதுபோல், ரேஷன் அரிசி திருட்டு சம்பவத்திற்கும், ஏதேனும் வினோத விளக்கத்தை அளிக்கப் போகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வாஸ்தவம் தான்... 'ரேஷன் அரிசி இடமாற்றம்' என்று சொல்லி சமாளித்தாலும் சமாளிப்பாங்க! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சென்னை குரோம்பேட்டையில், 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில், பரந்தாமன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். சென்னை ஐ.சி.எப்., பகுதியில் நண்பர்களோடு மது அருந்திய விஜயகுமார் என்பவரை, அதே நண்பர்களே கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் இப்படி போதையால் கொலைகள் நடப்பது வெட்கக்கேடு. இந்த சமூக சீர்கேட்டை அரசு சாதாரணமாக கடந்து போக நினைப்பது சரியல்ல. இதுபோன்ற கொலைகளை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கிடும்' என்பது மாதிரி, 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடினாலே, தமிழகத்துல முக்கால்வாசி குற்றங்கள் குறைஞ்சிடும்! தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்பது, மாறி மாறி பேசுவது தான். பிரதமரை பார்த்தாலே பெரிய பாக்கியம் என்று சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியவர், பார்க்கவில்லை என்ற கோபத்தில் மத்திய அரசை எதிர்க்க துவங்கி இருக்கிறார். மத்திய அரசை எதிர்த்தால், உங்க அணியில் இடம் தருவீங்கன்னு நினைச்சிருப்பாரோ?