உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: கர்நாடகா, தெலுங்கானா, பீஹார் போன்ற மாநிலங்களில், இரண்டு மாதங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்தனர். தமிழகத்தில் 2.50 லட்சம் அரசு ஊழியர்கள், 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால், இரண்டே மாதங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விட்டால், ஜாதி ரீதியில் எம்.எல்.ஏ., - எம்.பி., 'சீட்'களை அதிகம் கேட்பர் என்ற எண்ணத்தில் முதல்வர் நடத்தவில்லையோ என தோன்றுகிறது. இருக்கலாம்... ஜாதி கட்சி நடத்துறவங்க கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பாங்களே! தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு: தமிழக மக்கள், 'சாலை வசதி இல்லை; ரயில் வசதி இல்லை. படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை' என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். 2026 சட்டசபை தேர்தல், தே.மு.தி.க.,வுக்கான காலம். மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். 2026ல் யாருடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்கிறதோ, அவர்கள் தான் ஆட்சி அமைப்பர். இவங்க கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கிட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றால், அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க.,ன்னு வரிசை கட்டி நிற்பாங்களே! தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை அம்பேத்கர் எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலர் டி.மகிமைதாஸ் அறிக்கை: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினால், அரசுக்கு தற்போதைய சூழலில் ஆண்டுக்கு, 35,000 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். பழைய பென்ஷன் திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை மாதந்தோறும் அவர்களின் சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்து கொள்ளும். அரசின் பங்களிப்பு என, ஒரு பைசா கூட செலுத்தாது. புதிய பங்களிப்பு பென்ஷன் திட்டம் என்பது, மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மாநில அரசு கட்டுப்பட்டாக வேண்டும். இப்படி லாபம் கிடைக்கிற திட்டத்தை, அரசு ஏன் நிறைவேற்றாம இழுத்தடிக்குது... இவர் சொல்ற கணக்குல ஏதோ, 'உள்குத்து' இருக்கும் போல தெரியுது! ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இது, அவருக்கு ஊன்று சக்தியாக இருக்கும். அவர் சிறப்பாக செயல்பட்டால் முன்னேறலாம். அவருக்கு கூட்டம் சேர்வதால் அரசியல் எதிர்காலத்தை கூற முடியாது. அர சியலில் வெற்றி பெறுவது என்பது, அவரது செயல்பாடுகளை பொறுத்தே உள்ளது. அரசியலில் எப்படி செயல்படக் கூடாது என்பதை, ம.தி.மு.க., வரலாற்றில் இருந்து விஜய் கத்துக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை