உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி:

தமிழக சட்டசபை நிகழ்வுகளை, நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் அச்சப்பட்டனர். அவர்களுக்கு மத்தியில் எந்தவித அச்சமும் இல்லாமல், சட்டசபை நிகழ்ச்சிகளை முதல்வர் விஜய் நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படுகிறது. இதைவிட இந்தியாவில் ஜனநாயகம் எங்கும் இருக்காது. வாஸ்தவம் தான்... சட்டசபை நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பை, பலரும் ஆர்வமா பார்க்கிறாங்க... 'டிவி'க்களில் அழுது வடியும், 'சீரியல்'களை பார்த்து கண்ணீர் வடிச்சிட்டு இருந்த தமிழக பெண்களுக்கு, சட்டசபை நேரடி ஒளிபரப்பு நல்ல பொழுது போக்காகவும் அமைஞ்சிருக்குது!

தி.மு.க., இளைஞரணி செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி பேச்சு:

நாங்கள் எல்லாம் சட்டசபைக்கு வந்திருக்கோமா அல்லது 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. இதற்கு முன்னர் சபையில் கேள்வி கேட்பர்; அதற்கு பதில் சொல்வர். இப்போதும் கேள்வி கேட்டால் பதில் சொல்ல லாம். ஆனால், பாட்டு பாடினால் பதிலுக்கு பாட்டு பாடுவதா? உங்க ஆட்சியில் நடந்த சட்டசபை கூட்டங்கள்ல, உங்க தாத்தா கருணாநிதிக்கும், அப்பா ஸ்டாலினுக்கும் புகழாரங்களா சூட்டிட்டு இருந்ததை விட, பாட்டு பாடுறது பரவாயில்லையே!

பா.ஜ., தமிழக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:

பிரிட்டன் உட்பட உலகின் பல நாடுகள், ஹிட்லரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை, 'நாஜி' என அழைத்தனர். இப்படித்தான் இப்போது வலதுசாரி தேசியவாதிகளை, 'சங்கி' என அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர். தேசிய எண்ணம் கொண்ட, ஹிந்து மனோபாவம் கொண்டவர்கள், தங்களை சங்கி என அழைத்துக் கொள்வதில் சந்தோஷப்படுகின்றனர்; பெருமிதம் கொள்கின்றனர். நாஜி என்பது ஆதிக்கம்; சங்கி என்றால் முன்னேற்றம். 'மதச்சார்பற்றவர்கள்' என்ற பெயர்ல ஊழல்வாதிகளா இருப்பதை விட, 'சங்கி'களா இருப்பது எவ்வளவோ மேலானது!

வி.சி., கட்சியைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேச்சு:

பழங்குடியின மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற, மத்திய அரசு வன பாதுகாப்பு திருத்த சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதை நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும். பழங்குடியினர் பெயரை சொல்லி, வனங்களை சூறையாடுறவங்க மீது முதல்ல நடவடிக்கை எடுக்க பாருங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி