உள்ளூர் செய்திகள்

சொல்கிறார்கள்

என் பையனுக்கு முஹமது துபாய்னே பேர் வைத்துள்ளேன்!எங்கு சென்றாலும், அரபி உடையிலேயே வலம் வரும், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த அல்லா பிச்சை: பரமக்குடியில், சைக்கிள் கடை வைத்திருந்தேன். 1982ல் துபாய்க்கு போயிட்டேன். அங்கு டிரைவராக இருந்தபோது அந்த ஊரில் பலர் இதே உடையில் இருப்பதை பார்த்தேன்.சிறிது சிறிதாக எனக்கும் அதன் மீது ஆசை வந்தது. என் சைசுக்கு ஏற்றாற்போல் ஒரு அரபி உடை வாங்கி போட்டுக்கிட்டேன்.அப்படி ஆரம்பித்து, இந்தியா வந்து கடந்த 25 ஆண்டுகளாக அப்படியே வாழ்ந்துட்டு இருக்கேன். நம் ஊரிலும் இந்த டிரஸ்சுக்கு தனி மரியாதை தான்.எங்கு போனாலும் நாலு பேர் என்னை ஆச்சரியமா பார்க்குறாங்க. என் கூட போட்டோ எடுக்குறாங்க.குறிப்பாக திருமணம் போன்ற விசேஷ வீடுகளுக்கு போனால், 'இவர் முக்கியமான ஆளா இருப்பாரோ'ன்னு விழந்து விழுந்து கவனிக்குறாங்க. என்னதான் அரபி டிரஸ்சில் இருந்தாலும், அக்மார்க் தமிழன் தான்.சாதாராணமா வீட்டில் இருக்கும் போதும் சரி, வேலை விஷயமா வெளியே போனாலும் சரி, நமக்கு இந்த அரபி உடை தான் லாயக்குப்பட்டு வரும். என்கிட்ட மொத்தமா 10 அரபி உடைகள் இருக்கு. எல்லாமே துபாயில் இருந்து கொண்டு வந்தது. புதுசு தேவைப்பட்டால் உறவினர்களிடம் சொல்லி விடுவேன். அவர்கள் வாங்கி வருவர். கறை படாம மெயின்டெயின் பண்றது தான் சவாலான விஷயம்.இந்தியாவிலேயே பாஸ்போர்ட், ஓட்டர் ஐடி, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு வரை அரபி உடையில் போட்டோ உள்ள ஒரே இந்திய குடிமகன் நான் மட்டும் தான். இந்தியாவில் வேறு எவருமே இல்லை.கடந்த 2019 தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் பண்ணப் போனேன். என் அரபு கெட் அப்பையும், கையில் இருந்த பெரிய சூட்கேசையும் பார்த்துட்டு உள்ளே விடமாட்டேன் என சொல்லிட்டாங்க. அதன்பின் சண்டை போட்டு, மெட்டல் டிடெக்டர் வைத்து என்னை பரிசோதித்து, பெரிய போராட்டத்துக்கு அப்புறம் தான் என்னை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.ராமநாதபுரம் தொகுதியில் எந்த தேர்தல் நடந்தாலும் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் பண்ணிடுவேன்.'தேர்தல் மன்னன்' என்று கூட எனக்கு பெயர் இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி சார்பாகவும் போட்டியிட்டுள்ளேன்.பல முறை சுயேச்சையாக போட்டியிட்டுள்ளேன். எல்லாமே படுதோல்வி தான். அதற்கெல்லாம் அசரவே மாட்டேன். தொடர்ந்து போட்டியிடுவேன்.என் மனைவியும் இந்த ஊர் தான். எனக்கு மூன்று பெண்களும், ரெண்டு மகன்களும் இருக்காங்க. என்னை வளர்த்து விட்ட துபாய் நினைவாக, என் ரெண்டாவது பையனுக்கு முஹமது துபாய்னே பேர் வைத்துள்ளேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !