உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / கூட்டு குடும்பம் தான் ஆரோக்கியமானது வலிமையானது!

கூட்டு குடும்பம் தான் ஆரோக்கியமானது வலிமையானது!

கடந்த 50 ஆண்டுகளாக, தொழிலாளர் மற்றும் சிவில் சட்டங்களை கையாளும், முன்னணி சட்ட நிறுவனங்களில் ஒன்றான, 'டி.எஸ்.கோபாலன் அண்டு கோ' நிறுவனர், 86 வயதாகும் டி.எஸ்.கோபாலன்: கடந்த 1961-ல் துவங்கிய என் வக்கீல் பணி, 63 ஆண்டுகளாக இன்றும் தொடர்கிறது. பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் என் வாடிக்கையாளர்கள். அந்த கம்பெனிகளின் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்னிடம் வரும்.கார்ப்பரேட் நிர்வாகத்துக்காக நான் வாதாடினாலும், தொழிலாளர்கள் சட்டப்படி அவர்களின் பிரச்னைகளை வெளியே கொண்டு வருவது தான், என் முக்கிய நோக்கம்.எனக்கு பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், புலிவலம். என் அப்பா, 99 ஆண்டுகள், 10 மாதங்கள் வாழ்ந்தார். அசிஸ்டென்ட் லேபர் கமிஷனராக வேலை செய்தவர்.நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். இந்த குடும்பத்தை என் அம்மா, அவர் வாழ்ந்த, 95 வயது வரை சிறப்பாக நிர்வகித்தார்.'ஆறு மணி நேரம் துாங்கினால் போதும்... விழித்திருக்கும் நேரமெல்லாம் வேலை பார்க்க வேண்டும்' என்பது தான் அப்பாவின் கொள்கை; அதை நானும் பின்பற்றுகிறேன். பட்டியலிட்டு தான் வேலை செய்கிறேன்.கடந்த 2006ல், பெரியபாளையம் அருகே சில ஏக்கர் நிலத்தை வாங்கினேன். விடுமுறை நாட்களில் அங்கு சென்று விடுவேன்.அங்கு விளைவதில் பாதிக்கும் மேல் பண்ணையில் வேலை செய்கிறவர்களுக்கு கூலியாகவும், வீட்டு தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன். மீதியை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து விடுகிறேன். மீதி இருப்பதை தான் விற்பனை செய்வேன்.'சாப்பாடு போடுவதைவிட கல்விக்கு முக்கியம் தர வேண்டும்' என்பார் என் மனைவி. எங்கள் ஊர் புலிவலத்தில் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஒன்று நடத்துகிறோம். எங்களின் டிரஸ்ட் வாயிலாக நிறைய மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்கிறோம்; அவர்களில் பலர் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்.பலர் இன்று கூட்டுக் குடும்பத்தை விரும்புவது இல்லை. ஆனால், என்னை பொறுத்தவரை கூட்டுக் குடும்பம் தான் ஆரோக்கியமானது; அழகானது; வலிமையானது. என், 95 வயது மாமியாரும் என் வீட்டில் தான் இருக்கிறார்.என் மூளைக்கு பலம் கொடுப்பதற்கு புதிர் போட்டிகளும் ஒரு காரணம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிர் போட்டி கட்டங்களை பூர்த்தி செய்து விடுவேன். உடல் ரீதியாக, முதுமைக்கான சில இயலாமைகள் எட்டிப் பார்க்கும். அவற்றை தவிர்க்க சிறு சிறு உடற்பயிற்சிகளும், நடைப்பயிற்சியும் உதவுகின்றன.எல்லா பத்திரிகைகளையும் படிப்பேன். சாப்பாட்டு விஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கிடையாது; ஆனால், நிறைய சாப்பிட மாட்டேன். துாக்கம் வரும்போது துாங்கி விடுவேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை