'ஆழ்கடலில் மீன் பிடிக்கும் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்' என்ற பெருமைக்குரிய, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, சாவக்காடு பகுதியைச் சேர்ந்த ரேகா: உயிரை பணயம் வைக்கும் மீன்பிடித்தொழில், ஆண்களுக்கே மிகவும் சவாலானது. இந்த தொழிலில் தைரியமாக கடலில் இறங்கி கலக்கி வருகிறேன்.இந்த சாவக்காடு பகுதியானது, கடற்கரைக்கும் மீன்பிடி தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கழிமுகங்களிலும் ஆறுகளிலும் மீன் பிடிக்கின்றனர் என்பது உண்மை தான். ஆனால், நான் தான் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் முதல் பெண்.எனக்கு 50 வயது. சூரியன் உதயமாவதற்கு முன்பே சிறிய, ஒற்றை இன்ஜின் படகில் ஏறி, அரபிக்கடலில் மீன்களைப் பிடிக்கும் பயணத்தை நானும், கணவரும் துவங்கி விடுவோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவருடன் பணிபுரியும் இருவர், பணியிலிருந்து விலகிவிட்ட சூழலில், கணவருக்கு கைகொடுக்க மீன்பிடி தொழிலில் இறங்கினேன்.வேலையாட்களுக்கு கூலி கொடுத்து, கட்டுப்படியாகாத சூழலும், நான் இந்த பணியை மேற்கொள்ள முக்கிய காரணம். இருந்தும், மீன் பிடித்தலை ஆத்மார்த்தமாகவே செய்து வருகிறேன். வெளிச்சம் பரவும் வேளைக்கு முன்பாகவே எங்களின் பயணம் ஆரம்பமாகி விடும். பெரும் அலைகள் சின்னஞ்சிறு படகை அலைக்கழிக்கும் சமயங்களிலும், அஞ்சாமல் சமாளித்து, மீன் பிடிக்கும் பணியை தொடர்ந்து செய்கிறோம். 'கடலுக்கு சென்றிருக்கும் குடும்பத்து ஆண்கள், பத்திரமாக திரும்பி வரவேண்டும் என கரையில் இருந்து பிரார்த்திப்பது தான் மீனவப் பெண்களுக்கு உரிய செயல்' என்று ஊரார், என் கடல் பயணத்துக்கு முதலில் முட்டுக்கட்டை போட்டனர்.ஆனால், என் கணவரின் ஆதரவோடு, அவருக்கு உறுதுணையாக நானும் மீன்பிடிக்கச் செல்ல துவங்கினேன். எங்களை, தற்போது அவர்கள் வியந்து பார்க்கின்றனர்.என் கணவரிடம் இருந்துதான் மீன்பிடிக்கும் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொண்டேன். இப்போது அவருக்கேற்ற உதவியாளராய் மாறியிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் கடலுக்குள் சென்றபோது, 'சீ சிக்னெஸ்' என்ற பாதிப்பால் அவதிப்பட்டிருக்கிறேன்; ஆனால், அதையும் வெற்றிகரமாக சீக்கிரமே சமாளித்து விட்டேன். ஒருமுறை கண்ணயர்ந்த சமயம், பெரிய கப்பல் ஒன்று எங்கள் படகின் மீது மோதவிருந்தது. திடீரென கண்விழித்த நான், கூச்சலிட்டவாறே படகின் போக்கை திசை திருப்பியதால், மயிரிழையில் உயிர் பிழைத்தோம்.இன்னொரு சமயம், ஆழ்கடலில் எங்கள் படகின் இன்ஜின் செயலிழந்து போகவே, ஆறு மணி நேரம் கழித்தே மீட்கப்பட்டோம். இப்படி எங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யங்களுக்கும், சாகசங்களுக்கும் பஞ்சமே இல்லை.