இயற்கை விவசாயத்தில் அசத்தி வரும், சென்னை பெருங்குடியில் வசித்து வரும், ஆடிட்டர் பார்த்தசாரதி: துபாய், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில், 16 ஆண்டுகளும், சென்னையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தில், 15 ஆண்டுகளும் பணியாற்றிய நான், தற்போது செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள இரும்புலிசேரியில் 5 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.என்னோட பூர்வீகம், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பக்கத்தில் உள்ள சிவராமபுரம் கிராமம். விவசாயத்துக்கும், எங்க குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. கடந்த 1996ல் இங்க நிலம் வாங்கினேன். ஆண்டிற்கு ஒரு முறை, வெளிநாட்டில் இருந்து சென்னை வரும்போது இந்த தோட்டத்துக்கு வந்து பார்வையிட்டு போவேன்.நாமளே நேரடியாக நிலத்தில் இறங்கி விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்து. 2017ம் ஆண்டு, அத்தி, மாதுளை, சப்போட்டா, சிவப்பு கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் நட்டோம்; எல்லாமே நல்லா செழிப்பாக விளைஞ்சு வந்திருக்கு. பலாவை தவிர மற்ற அனைத்து மரங்களுமே மகசூல் கொடுத்துட்டு இருக்கு.ஆத்துார் கிச்சலி சம்பா, துாயமல்லி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களும், மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனமும் பயிர் பண்ணிட்டு இருக்கோம். எங்ககிட்ட ஐந்து காங்கேயம் இன மாடுகள் இருக்கு.இயற்கை விவசாயத்தாலும், இந்த ஊரை சுற்றி நாலு பக்கமும் ஓடிட்டு இருக்குற பாலாற்று தண்ணியோட வளத்தாலும், எங்கள் தோட்டத்தில் விளையுற பொருட்கள் கூடுதல் சுவையோடு இருக்கு.இங்க விளையுற தேங்காய், வாழைத்தார்கள் தவிர, வேறு எந்த ஒரு பொருளையுமே வெளியில் விற்பனை செய்றதில்லை. எங்களோட சொந்த தேவைக்கு பயன்படுத்திக்குவோம்.பாரம்பரிய அரிசி வகைகளை பொறுத்தவரைக்கும் மருத்துவமனை மற்றும் ஆசிரமத்துக்கு கொடுத்துட்டு, மீதியிருந்தால் எங்கள் வீட்டு தேவைக்கு பயன்படுத்திக்குவோம். பல ஆண்டுகளாக ரசாயன இடுபொருட்கள் பயன்படுத்தாததால், சிலந்தி, பட்டாம்பூச்சி, வண்டு, கிளி, குருவி, வவ்வால் உள்ளிட்ட பலவிதமான உயிரினங்களோட வருகை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே இருக்கு.எதிர்காலத்தில் இதை ஒரு நவீன தொழில்நுட்ப பண்ணையாக மாத்தணும்கிறது தான் என் லட்சியம்.தொடர்புக்கு: 94446 12012.