உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சர்க்கஸ் நடத்த ஒரு நாள் செலவு ரூ.40,000!

சர்க்கஸ் நடத்த ஒரு நாள் செலவு ரூ.40,000!

அழிவு நிலையிலும் தொழிலை இன்னமும் கெட்டியாகப் பிடித்தபடி, சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தும், 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' மேலாளர் நாசர் அலி:ஒரு காலத்தில், இந்தியாவில் மட்டும் கேளிக்கைக்காக உருவாக்கப்பட்ட சர்க்கஸ் கம்பெனிகளின் எண்ணிக்கை, 40க்கும் மேல் இருந்தன. ஆனால், இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய சில கம்பெனிகள் மட்டுமே இருக்கின்றன. அவையும் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரின் வயோதிகத்தை போல நலிவடைந்து கிடக்கின்றன. சர்க்கஸ் தொழில் நசிந்து போனதற்கு முதல் காரணம், விலங்குகள் தடை. விலங்குகள் செய்யும் சாகசங்களையும், எல்லா விலங்குகளையும் ஒன்றாக பார்க்கிற ஆவலுக்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக குழந்தைகளை அழைச்சிட்டு வருவாங்க. குறைந்தபட்சம் 30 சாகசங்கள் இடம்பெறும். அதில் பாதிக்கும் மேற்பட்டவை, விலங்குகள் செய்யும் சாகசங்கள் தான்.விலங்குகளை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளும், காட்டு விலங்குகளை பயன்படுத்த என்றைக்கு தடை சட்டமும் கொண்டு வந்தாங்களோ, அப்பவே இந்த தொழில் முழுசாக முடங்கியது.அரசு விதிகளின்படி, தற்போது எங்களுடைய சர்க்கஸ் குழுவில் ஒட்டகம், குதிரை, போமரேனியன் நாய் குட்டி மட்டும் தான் இருக்கின்றன. வேறு சில கம்பெனி களில் அனுமதிக்கப்பட்ட பறவை இனங்களும் இருக்கின்றன. எனவே, 'ஜிம்னாஸ்டிக்' மட்டும் பிரதானப்படுத்தப்பட்டு, சர்க்கசை சுவாரசியப்படுத்தி வழங்குகிறோம்.இடத்தின் வாடகை, தண்ணீர், மின்சாரம், மளிகைப் பொருட்கள், ஜெனரேட்டர்களுக்கு டீசல், விளம்பர ஆட்டோக்களுக்கான வாடகை, டிரைவர் சம்பளம், விலங்குகளுக்கான லைசென்ஸ், நாளிதழ் விளம்பரம், கலைஞர்களுக்கான சம்பளம் என, ஒரு நாளைக்கே, 40,000 ரூபாய் தேவைப்படுகிறது.ஒரு ஊரில் குறைந்தபட்சம், 30 நாட்கள் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்துவது கட்டாயம். அப்போது தான் முதலீடு செய்த பணத்தையாவது திரும்ப எடுக்க முடியும். மக்கள் வரவேற்பும், சூழ்நிலையும் ஒத்துழைத்தால் மட்டும் மேலும் சில நாட்கள் அதே ஊரில் நடத்துவோம். மாத முடிவில் சர்க்கஸ் கூடாரத்தைப் பிரித்து, வேறொரு ஊருக்குச் செல்ல பொருட்களைத் தயார்படுத்துவதற்கே நான்கு நாட்கள் ஆகிவிடும்.சர்க்கஸ் லாபமான தொழில் என்பதற்காக நடத்திக் கொண்டிருக்கவில்லை. இதை விட்டுவிட்டால், தென்மாநிலங்களில் சர்க்கஸ் கம்பெனிகளே இல்லை என்ற நிலை உருவாகிடும். அழிந்துவரும் இந்தத் தொழிலைப் பாதுகாப்பதற்கு அரசின் ஆதரவுக் கரங்கள் தேவை.வட மாநிலங்களில், அரசுக்குச் சொந்தமான இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தும்போது அந்த இடத்திற்கான வாடகையில், 50 சதவீதம் தள்ளுபடி தருவர். அதேபோல, தென்மாநிலங்களிலும் சலுகை அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை