உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / விழுந்தாலும் எழுந்து நிற்கும் உறுதி வேண்டும்!

விழுந்தாலும் எழுந்து நிற்கும் உறுதி வேண்டும்!

'புட் அண்டு புராடக்ட்' புகைப்பட நிபுணரான, சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா: முதலில், கேக் செய்யும் 'பேக்கிங்'கில் தான் எனக்கு ஆர்வம் இருந்தது. அதற்காக, 'பிளாக்' என்ற வலைப்பதிவை துவக்கி, சமையல் குறிப்புகளை பகிர்ந்து வந்தேன். நான் செய்யும் ரெசிப்பிகளை ரசித்து, புகைப்படம் எடுப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும், என் ஆர்வமும், கவனமும் பேக்கிங்கை விட்டு, சிறிது சிறிதாக படம் எடுப்பதில் திரும்பியது.அதன்பின், பேக்கிங் மட்டுமல்லாமல், எல்லா உணவு வகைகளையும் படம் எடுப்பது என்று, சிறிது சிறிதாக தனியாகவே சுயபயிற்சி செய்தேன். இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் வித்தியாசமான புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.புதிதாக ஏதாவது உணவுகளை அறிமுகம் செய்ய, அதுகுறித்த விபரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் முதலில் தருவர். விதவிதமான உணவு பண்டங்கள் தயாரித்து, அவற்றை போட்டோ ஷூட் செய்வதற்கு எங்களை அணுகுவர். உணவகங்களிலும் அணுகுவர். மசாலா பொருட்களின் பேக்கேஜிற்காகவும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்துள்ளேன்.அடிப்படையில், நான் தகவல் தொழில்நுட்ப இன்ஜினியர். ஆனால் என் ஆர்வம் இதில் திரும்பியதால், உணவு வகைகளை புகைப்படம் எடுக்க, பிளாஷ்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து, ஆன்லைனில் ஒரு கோர்ஸ் முடித்துள்ளேன்.என் வாடிக்கையாளர்கள், பொதுவாக சொல்லும் விஷயம் இதுதான்... 'இதற்கு முன் யாரும் இத்தனை பொறுமையாக எங்கள் எதிர்பார்ப்புகளின்படி புகைப்படம் எடுத்துத் தந்ததில்லை' என்பர். வாடிக்கையாளர்கள் திருப்திதான் என் போன்று அக்கறையுடன் உழைப்பவர்களுக்கு அவசியத் தேவை.பன்னாட்டு ஆர்டர்களுக்கும் செய்து வருகிறேன். முதன்முதலாக, பிரிட்டனில் இருந்து எனக்கு ஒரு ஆர்டர் கிடைத்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இப்போதுகூட அவர்களின் நுாடுல்ஸ் பேக்கேஜ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.எப்போதுமே வெற்றி என்பது வாழ்க்கை இல்லை. சில நேரங்களில் இழப்புகளையும், தோல்விகளையும் பிசினசில் சந்தித்துதான் ஆக வேண்டும். அதுபோன்ற நேரங்களில் மன உறுதி அதிகம் தேவை. அந்த சமயங்களில் பேக்கிங், சுயமாய் சில புராஜெக்ட்கள் என, என் கவனத்தை திசை திருப்பிக் கொள்வேன்.வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு, 'கியாரண்டி' இல்லை. எப்போதும், எந்த சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்; சோர்வடையக் கூடாது. விழுந்தாலும் எழுந்து நிற்கும் உறுதியை ஒருபோதும் கைவிடக்கூடாது.

மூலிகை வாசமே நோயற்ற சுவாசம்!

மதுரை மாவட்டம், பூலாங்குளத்தைச் சேர்ந்த, வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக பணிபுரிந்து வரும், சுபஸ்ரீ:நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், என் தந்தையை பாம்பு தீண்டியது. அப்போது, மூலிகை மருந்து கொடுத்து தான் அவரது உயிரைக் காப்பாற்றினர்.அப்போதுதான், மூலிகைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. அன்று முதல் பாரம்பரிய மூலிகைச் செடிகளை வீட்டில் சிறிய இடத்தில் வளர்க்கத் துவங்கினேன்.உயர்கல்வி படித்து, அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து, அங்கும் அதைத் தொடர்ந்தேன். திருமணமாகி, குழந்தைகள் வளர்ந்த பின்னரும் என் ஆர்வம் அதிகரித்தது. அதற்கு கணவர், மகள், மகன் ஒத்துழைப்பு கொடுத்தனர். மூலிகைகளின் பயன்பாட்டை அனைவரும் அறிந்து கொள்வதற்காக, எங்கள் வீட்டில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள நாட்டார்மங்கலத்தில், 40 சென்ட் இடம் வாங்கி, 'சுபஸ்ரீ பாபு மூலிகை தேடல்' எனப் பெயரிட்டு, மூலிகைத் தோட்டம் ஒன்றை அமைத்தோம்.நிலத்தை முழுமையான மூலிகை சரணாலயமாக மாற்றவும், பராமரிக்கவும் எனக்கும், கணவருக்கும் நேரம் போதவில்லை. எனவே, மூலிகை தேடலுக்காக, கணவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். எங்கள் பிள்ளைகளும் ஒத்துழைப்பு தந்ததால், தற்போது மூலிகை சரணாலயம், முழுமை பெற்றுள்ளது.இங்கு கருமஞ்சள், பேய்க்கரும்பு, கருநொச்சி, பூனை மீசை உட்பட 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் உள்ளன.கல்லுாரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மூலிகை ஆர்வலர்கள் மற்றும் தோட்டக்கலை ஆர்வலர்கள் என, பலரும் தினமும் வந்து, பார்வையிட்டுச் செல்கின்றனர்.தோட்டத்தில் உள்ள செடிகள் ஒவ்வொன்றிலும் ஒரு அட்டை பொருத்தப்பட்டிருக்கும். அதில், அவற்றை விளைவிக்கும் முறை, பராமரிப்பு, எந்தெந்த நோய்களுக்கு நிவாரணமளிக்கும் என்பதுவரை, முழு விபரங்களையும் தொகுத்து வைத்துள்ளேன்.இன்றைய தலைமுறைக்கு மூலிகைகளின் பயன்பாட்டை தெரியப்படுத்தவும், மூலிகைகளை மீட்டெடுக்கவும், எங்கள் மூலிகைத் தோட்டம் பெருமளவில் உதவி வருகிறது.செப்டம்பர் 29ம் தேதி ஒலிபரப்பான நம் பிரதமரின், 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், என்னை பற்றி குறிப்பிட்டு பேசியது, உலக அளவில் என்னை பிரபலப்படுத்தியது. பிரதமரின் பாராட்டு, என் சேவையை மேலும் ஊக்கமடையச் செய்து உள்ளது.மூலிகை வளர்ப்பின் வாயிலாக நான் அறிந்த விஷயங்களில் இருந்து கூறுவது ஒன்றே ஒன்று தான்... அது, மூலிகை வாசம், நோயற்ற சுவாசம்!தொடர்புக்கு: 79048 15040.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !