பிறவியிலேயே இரு கைகள் இல்லாத சூழலிலும், நீண்ட சட்ட போராட்டம் நடத்தி கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கியுள்ள, கேரளாவை சேர்ந்த 32 வயது பெண் ஜிலுமோள் மாரியட் தாமஸ்:இடுக்கி மாவட்டம், கரிமண்ணுார் நெல்லானிக்காடு தான் என் சொந்த ஊர். ஆசியாவிலேயே, இப்படிப்பட்ட உடற்குறையோடு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் முதல் பெண் நான் தான். பிறவியிலேயே எனக்கு இரு கைகளும் இல்லை. எனக்கு நான்கு சக்கர வாகன ஓட்டும் உரிமம் பெற வேண்டும் என்பது நெடுநாள் விருப்பம்.துவக்கத்தில் என் விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, 'நீங்கள் ஆசைப்படுவது எட்டாக்கனி. எனவே, உங்களுக்கென்று ஓர் ஓட்டுனரை அமர்த்திக் கொள்ளுங்கள்' என, அறிவுறுத்தினர். ஆனால், அதை ஏற்க எனக்கு மனமில்லை.எர்ணாகுளத்தில் உள்ள ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி தான் எனக்கு வாகனம் ஓட்டும் பயிற்சியளிக்க முன்வந்துள்ளது. 2014ம் ஆண்டு, தொடுபுழா மண்டலப் போக்குவரத்து அலுவலரிடம் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தேன்.அந்த அலுவலரின் ஆலோசனைப்படி, கால்களால் மட்டுமே இயக்கத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்ட, 'மாருதி செலரியோ' தானியங்கி வாகனத்தை, 2018ம் ஆண்டு வாங்கினேன். கொச்சியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று, என் தேவைக்கேற்ப மின்னணு சாதனங்களைப் பொருத்தி, அந்த காரை வடிவமைத்தது.அதே ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தை நாடி, எனக்கு ஓட்டுனர் உரிமம் அளிக்க உத்தரவிட கோரினேன். என் வழக்கறிஞரான ஷைனி வர்கீஸ், என் தனித்திறமைகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். கோர்ட் நடவடிக்கைகளின்போது ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் காலால் காரை ஓட்டும் வீடியோ ஒன்றையும் போட்டுக் காட்டினோம்.அவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்த நீதிமன்றம், எனக்கு ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பிக்க அனுமதி அளித்து, கேரள மோட்டார் வாகனத் துறை பரிசீலிக்கவும் உத்தரவிட்டது. நீண்ட கால சட்டப் போராட்டத்துக்குப் பின்தான், 'லேனர்ஸ் சர்டிபிகேட்' கிடைத்தது.என் தொடர் போராட்டத்துக்கு சமீபத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. எனக்கான ஓட்டுனர் உரிமத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கி, பாராட்டினார்.ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்வது எனக்குப் பெரும் சவாலாகவும், இடையூறாகவும் இருந்து வந்தது. ஆனால், தற்போது எனக்கு கிடைத்திருக்கும் வாகன ஓட்டும் உரிமத்தால், சுயமாக வாகனத்தை ஓட்டி, விருப்பப்பட்ட இடங்களுக்கு என்னால் செல்ல முடியும்.தற்போது, 'கிராபிக் டிசைனராக' வெற்றிகரமாக பணியாற்றி வரும் எனக்கு, ஓவியங்கள் வரைவதிலும் தீராக் காதல் உண்டு. என்னைப் போல குறைபாடு உடையவர்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.