உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  மனைவி தான் எங்கள் வீட்டின் நிதியமைச்சர்!

 மனைவி தான் எங்கள் வீட்டின் நிதியமைச்சர்!

தன் மனைவியின் நிதி நிர்வாக திறன் குறித்து கூறும், தஞ்சாவூரைச் சேர்ந்த, வெ.ஆசைத்தம்பி: மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்க, என் மனைவியின் நிதி நிர்வாகம் தான் காரணம். எங்களுக்கு இரண்டு மகள்கள். என் மனைவி தான், எங்கள் வீட்டின் நிதி அமைச்சர். ஆரம்பத்தில் வீட்டு நிதி நிர்வாகம் முழுதையும் நான் தான் செய்தேன். பெரிதாக யோசித்து திட்டமிட்டு, எதுவும் செய்யவில்லை. இதனால், கை நிறைய சம்பளம் வாங்கினாலும், செலவுகளுக்கே சரியாக போனது. நான், பணி ஓய்வு பெற ஏழு, எட்டு ஆண்டுகளே இருந்த நிலையில் தான், 'மகள்களின் திருமணத்துக்கு நகைகளோ, பணமோ சேர்க்கவில்லையே; எந்த விதமான சேமிப்பும் இல்லையே' என்ற கவலை வந்தது. அதன் பின், என் மனைவியிடம் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தந்தேன். தொடர்ந்து, எங்களுக்கு வாழ்வில் ஏற்றமும், மாற்றமும் ஏற்பட்டது. 'இந்த செலவை செய்யாவிட்டால், என்ன பாதிப்பு வரும்' என்ற கேள்வியை எங்களுக்குள் கேட்டு, அதற்கு சரியான பதிலை கண்டறிந்து, ஒவ்வொரு ரூபாயையும் செலவு செய்வோம். இப்படி, சிக்கனமாக குடும்பம் நடத்தி, சேமிப்பை அதிகப்படுத்தினார், என் மனைவி. நிதி வல்லுநர்கள் கூறும் பொன்மொழிகளை அடிக்கடி அவர் எங்களிடம் சொல்வார். அதாவது, 'மாதத்தில் முதல் செலவு, உங்களது சேமிப்பாக இருக்கட்டும்' என்பார். உறவினர் வீட்டுத் திருமணம், பயணம், பிறருக்கு உதவி போன்ற திடீர் செலவுகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் தனியாக பணத்தை எடுத்து வைத்து விடுவார். ஒவ்வொரு வருடமும், தீபாவளிக்கு முதல் மாதம், தபால் அலுவலகத்தில், 12 மாதங்களுக்கான சேமிப்பு கணக்கை துவக்குவார். மாதா மாதம் அதில் ஒரு தொகையை செலுத்துவார். அடுத்த வருடம் தீபாவளிக்கு முன் அந்த பணத்தை எடுத்து, பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். 'கடன் வாங்கக் கூடாது' என்பது, என் மனைவியின் தாரக மந்திரம். எங்களிடம் கடன் அட்டை எனப்படும், 'கிரெடிட் கார்டு'கள் கிடையாது. இதுவரை கடனுக்கு தவணை முறையில் பொருட்கள் வாங்கியதில்லை. என்னுடன் பணியாற்றிய பலரும் சரியான திட்டமிடுதல் இல்லாததால், ஓய்வு காலத்தில் கஷ்டப்படுகின்றனர். ஆனால், என் மனைவியின் சரியான திட்டமிடுதலால், இரண்டு மகள்களின் திருமணத்தையும் கடனில்லாமல் சிறப்பாக நடத்த முடிந்தது. எல்லாவற்றுக்கும் மனைவியின் திட்டமிடுதல் தான் உதவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை