உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இந்த காடு நீடித்து நிலைத்திருக்கும்!

இந்த காடு நீடித்து நிலைத்திருக்கும்!

புதுச்சேரி ஆரோவில் பகுதியில் தரிசாக கிடந்த, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான பாறை நிலத்தை, பசும் சோலையாக மாற்றும் பணியில், 1994ல் களமிறங்கி வெற்றி கண்ட பெர்னார்டு மற்றும் தீபிகா குண்டாஜி: பெர்னார்டுஎன் ஆன்மிக குருவான, ஸ்ரீ அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பெல்ஜியத்தில் இருந்து புதுச்சேரிக்கு, 1965-ல் வந்தேன். அப்போது, குயிலாப்பாளையம் பண்ணையை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. கார்த்திகை சம்பா, சிவப்புக்கார் உள்ளிட்ட நெல் வகைகள் குறித்தும், அவற்றை சாகுபடி செய்யும் முறைகள் குறித்தும், உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து அறிந்து கொண்டேன்.தமிழகம் முழுதும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று, 75 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்தேன். தமிழக விவசாயிகள் பெரிதும் போற்றி புகழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், என்னிடம் இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டார். 'பெர்னார்டு என் குரு' என, பல தருணங்களில் வெளிப்படையாக அவர் அறிவித்ததை அறிந்து நெகிழ்ந்து போனேன்.தீபிகா குண்டாஜிநான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. வரலாறு மற்றும் தொல்லியல் படித்தேன். பெர்னார்டை சந்திக்கும் வரை, விவசாயத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதன்பின், விவசாயத்தை தவிர, என் வாழ்வில் வேறு எதுவும் இல்லை. நாங்கள் இங்கு வந்தபோது, இந்த நிலத்தின் மேற்பரப்பில் சிறிதளவு கூட மண் கிடையாது.நீண்டகால மண்ணரிப்பால், கடின பாறைகளும், கூழாங்கற்களும் மட்டுமே மிச்சமிருந்தன. கடினமான நிலங்களிலும் வளரக்கூடிய தாவரங்களை இங்கு வளர்ப்பதன் வாயிலாக, உயிர் சூழலை உருவாக்கி, பூமிக்குள் இருக்கும் மண்ணை மேலே கொண்டு வர முடியும் என்ற முடிவுக்கு வந்தார் பெர்னார்டு. விராலி, குதிரை மசால், ஆஸ்திரேலியன் அகாசியா உள்ளிட்ட இன்னும் சில செடிகளின் விதைகளை துாவினோம்.கூழாங்கற்களுக்கு இடையே உள்ள சிறு இடைவெளியில் விழுந்த விதைகள் உயிர் பிடித்து, ஒரே ஆண்டில் பெரிய செடிகளாக வளர்ந்தன. மழைநீர் பூமிக்குள் இறங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமான மண் புழுக்களையும் காண முடிந்தது.பல்லுயிர் பெருக்கம் நன்கு நடைபெற்று, விவசாயம் செய்யக்கூடிய சூழல் உருவானதும் மூலிகைகள் மற்றும் காய்கறி செடிகளை பயிரிட துவங்கினோம். மரங்களில் தஞ்சமடைந்த பறவைகளின் எச்சங்களில் உள்ள விதைகள் வாயிலாக, ஏராளமான தாவரங்கள் உருவாகின.தற்போது இங்கு ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 75-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், நரிகள், முள்ளம் பன்றிகள், காட்டு பூனைகள், உடும்புகள், பல வகையான பாம்புகளின் வசிப்பிடமாக மாறியிருக்கும் இந்த காடு, பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும்.

பயிற்சிக்கு பின் தான் தொழிலில் இறங்கணும்!

ரோஜா பூக்களில் இருந்து, 'ரோஸ் வாட்டர்' எனும் பன்னீர் தயார் செய்து, விற்பனை செய்து வரும் கோவையைச் சேர்ந்த தனலட்சுமி:எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜியும், எம்.பில்.,லும் படித்து முடித்து, அண்ணா பல்கலையில பயோ டெக்னாலஜி துறையில் முனைவர் பட்டம் படித்தேன். தாவர அறிவியல் தொடர்பான விஷயங்களில், எனக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம்.அதனால், ரோஜா பூக்களில் இருந்து தயாரிக்கிற ரோஸ் வாட்டருக்கு விற்பனை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிந்ததால், இந்த தொழிலில் இறங்க முடிவு செய்தேன்.இதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ரோஸ் வாட்டர் தயாரிப்பு தொழிலில் இறங்கினால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.அதை தயார் செய்ய, 3.50 லட்சம் ரூபாய் செலவில், இயந்திர கட்டமைப்புகளை ஏற்படுத்தி, உற்பத்தியை துவங்கினேன்.சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் மட்டும், அதுவும் சில விவசாயிகள் தான், 'டமாஸ்க்' ரக ரோஜா சாகுபடி செய்கின்றனர். இதனால், எப்போதும் இந்த ரகத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாதத்திற்கு, 50 கிலோ பூக்கள் கிடைப்பதே மிகவும் சிரமம்.மழைக் காலங்களில், 1 கிலோ பூக்கள் கூட கிடைக்காது. ஆண்டுக்கு, 10 மாதம் தான் டமாஸ்க் ரகம் கிடைக்கும். வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், விலை எப்போதுமே அதிகம் தான். கிலோ 200- - 250 ரூபாய் என்று வாங்கி, ஆண்டுக்கு, 700 லிட்டர் ரோஸ் வாட்டர் தயார் செய்கிறேன்.மொத்த விலையில், 1 லிட்டர் 850 ரூபாய் என, விற்பனை செய்கிறேன். இதன் வாயிலாக, ஆண்டுக்கு 5.95 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லா செலவுகளும் போக, 2.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.இது, சவாலான தொழில் தான்; ஆனாலும், இதை மிகவும் நேசித்து செய்கிறேன். 'ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?' என்று, 'யு டியூப் சேனல்'களில் ஏராளமான வீடியோக்கள் வருகிறது; அதில் நிறைய தவறான தகவல்கள் இருக்கிறது. அதை நம்பி சிலர், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, இயந்திரங்களை வாங்கி, நஷ்டத்தை சந்திக்கின்றனர்.அரசு நிறுவனங்கள் அல்லது சில நேர்மையான தனியார் நிறுவனங்கள் வழங்கக்கூடிய பயிற்சிகளில் நேரடியாக பங்கேற்று தான், இந்தத் தொழிலில் இறங்கணும். முழு ஈடுபாட்டோடு செய்தால், நிச்சயம் வெற்றி அடையலாம்.தொடர்புக்கு: 99403 21385


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை