| ADDED : ஆக 05, 2024 11:52 PM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், 15 பேரின் நீதிமன்ற காவல், வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 67 பேர் இறந்தனர்.இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கள்ளச்சாராயம் விற்றது, சப்ளை செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 24 பேரில் கவுதம்சந்த், பன்ஷிலால், கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப், கதிரவன் உட்பட 15 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.இதனையடுத்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 15 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 15 பேரின் நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.--ஒரு நபர் ஆணையம் விசாரணைகள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.இதற்காக, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று திரும்பியவர்களை வரவழைத்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 124 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது.இந்த வார இறுதிக்குள் விசாரணை முடிந்துவிடும். வரும் 9ம் தேதியில் இருந்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடமும், அரசு அலுவலர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.இதற்காக தினமும் 10 பேர் வீதம் விசாரணை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட உள்ளனர்.