''வாங்குற பணம் எங்க போகுதுன்னு தெரியலை பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''யாருகிட்ட, யாருங்க பணம் வாங்குறது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்துக்கு தினமும் புதிய லைசென்ஸ் வாங்கவும், புதுப்பிக்கவும், 100க்கும் மேற்பட்டவங்க வர்றாங்க... போட்டோ எடுக்கிற இடத்துல, கொடி நாள் பணமா, தலா 100 ரூபாய் வசூலிக்கிறாங்க பா...''ஆனா, கொடின்னு எதையும் தர மாட்டேங்காவ... கேட்டா, 'கொடி புத்தகம் முடிஞ்சு இரண்டு மாசமாயிட்டு... கடைசி நேரத்துல புத்தகம் வர்றப்ப, விற்பனை செய்றது சிரமம்... அதான், இப்பவே வசூல் பண்ணி, புத்தகம் வந்ததும் பணத்தை கட்டிடுவோம்'னு விளக்கம் சொல்றாங்க... தினமும் வசூலிக்கிற பல ஆயிரம் ரூபாய் எங்க போகுதுன்னு தெரியலை பா...'' என்றார், அன்வர்பாய்.''அப்பா - மகனை கண்டுக்காம இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''திருநெல்வேலி, பாளையங்கோட்டை தி.மு.க., நிர்வாகி, தனக்கு கான்ட்ராக்டர்கள் கட்டிங் தரலைன்னா, அவங்க சாலையில கொட்டி வச்சிருக்கிற மணலை அள்ளிட்டு போயிடுதாரு... மக்கள் நல்வாழ்வு துறையில தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தர்றேன்னு 'செல்லமா' பேசி, நிறைய பேரிடம் லட்சக்கணக்குல வாங்கி, அல்வா குடுத்துட்டாரு வே...''சமீபத்துல, 'புல் மப்பு'ல கட்சி தலைமையை தாறுமாறா இவர் திட்டிய ஆடியோ வெளியாகி, பரபரப்பாச்சு... இவரது மகன் மாணவர் அணியில நிர்வாகியா இருக்காரு வே...''இவர் பெண்கள் மாதிரியும், திருநங்கையர் மாதிரியும் தொழில் அதிபர்களிடம் பேசி மோசடியில ஈடுபட்டாரு... சென்னையில ஒரு திருட்டு வழக்குல இவரையும், இவரது கூட்டாளியையும் கைது பண்ணி, புழல் ஜெயில்ல தள்ளியிருக்காவ வே...''தி.மு.க., நிர்வாகியின் தில்லுமுல்லுகள் மேலிடத்துக்கு போகாம, மாவட்ட உளவுத்துறையில 10 வருஷமா கோலோச்சுற அதிகாரி தான் தடுத்துட்டு இருக்காரு... 'அப்பா - மகன் அடாவடியால, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுறது தலைமைக்கு தெரியாதா'ன்னு தொண்டர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''மரங்கள் வெட்டறதுல நன்னா சம்பாதிக்கறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''நீலகிரி மாவட்டத்துல, மரங்களை அழிக்கற பணி நடக்கறது... 195 கூப்புகள்ல பல ஆயிரம் சீகை மரங்களை வெட்டி, தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு அனுப்பணும் ஓய்...''ஆனா, வெட்டறதுல பாதி மரங்கள் தான் காகித நிறுவனத்துக்கு போறது... மீதி மரங்கள் நீலகிரியில் உள்ள முக்கியமான டீ எஸ்டேட் பேக்டரிகளுக்கு போயிடறது ஓய்...''இதுல, மரம் வெட்டற கான்ட்ராக்டரும், முதுமலை வன அதிகாரி யும் கூட்டணி போட்டுருக்கா... அதிகாரி ஏற்கனவே கொடைக்கானல்ல இருந்தப்ப, 30 ஆயிரம் மரங்களை வெட்டியதுல பிரச்னையாகி, இங்க மாத்தினா... அங்க, தனக்கு நட்பான திண்டுக்கல் கான்ட்ராக்டரையே இங்கயும் அழைச்சுண்டு வந்துட்டார் ஓய்...''சென்னையில நிர்வாக பொறுப்புல இருக்கற அதிகாரி தயவுல, தமிழகம் முழுக்க வன அதிகாரிகள் டிரான்ஸ்பர்லயும் புகுந்து விளையாடறார்... இப்படி சம்பாதிக்கற பணத்துல, கோவை, திருப்பூர் மாவட்டங்கள்ல நிலங்கள் வாங்கி, ரியல் எஸ்டேட் தொழில் பண்றார்... கோவையில பிரமாண்ட பங்களாவும் கட்டிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.