உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அடுத்தடுத்து திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!

அடுத்தடுத்து திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!

''சொன்ன வாக்கை காப்பாத்தாதவாளுக்கு ஓட்டு போடணுமான்னு யோசிக்கறா ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில், 2,137 ஏக்கரில் மிகப்பெரிய ஏரி இருக்கு... சுத்துப்பட்டு 50 கிராமங்கள்ல விவசாயம் செழிக்க ஒத்தாசையா இருந்துது ஓய்...''முறையா பராமரிக்காம விட்டதால, 10 வருஷத்துக்கும் மேலா தண்ணீர் இல்லாம, புதர்மண்டி கிடக்கறது... 2019ல் சேலம் எம்.பி., யான தி.மு.க.,வின் பார்த்திபன், '2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையா இந்த ஏரியை துார்வாரி, மேட்டூர் உபரி நீரை நிரப்புவோம்'னு வாக்குறுதி தந்தார் ஓய்...''ஆனா, தி.மு.க., ஆட்சிக்கு வந்து வருஷம் மூணாகியும், ஏரியை யாரும் கண்டுக்கல... இதனால, சுத்தியுள்ள கிராம மக்கள், 'லோக்சபா தேர்தல்ல தி.மு.க.,வுக்கு ஓட்டு போடணுமா'ன்னு யோசனை பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஆள் போட்டு மாமூல் வசூல் பண்ணுதாங்கல்லா...'' என்று பெரிய சாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார், செய்யூர், சூணாம்பேடு, அணைக்கட்டு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில, 24 மணி நேரமும் கள் விற்பனை சூப்பரா நடக்கு... தேர்தல் நேரத்துல, கள் வியாபாரிகள் மேல நடவடிக்கை எடுத்தா, ஆளுங்கட்சி மேல அதிருப்தி ஏற்படும்கிறதால, போலீசார் இதை கண்டுக்கல வே...''அதுக்காக சும்மா இருந்துடுவாங்களா... கள் இறக்குற ஒரு வியாபாரியை செலக்ட் பண்ணி, வியாபாரிகளிடமும் வாரத்துக்கு தலா, 2,000 ரூபாய் வசூல் பண்ணிடுதாவ வே...''இந்த வகையில மட்டும் வாரத்துக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வசூல் செஞ்சிடுதாவ... இது போக, மதுவிலக்கு போலீசாரும் தனியா ஒரு பக்கம் வசூல் பண்ணுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''என்ன போராட்டம் நடத்தினாலும், அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சென்னை, ஆவடி அடுத்த பட்டாபிராம், சி.டி.எச்., சாலையில் உள்ள தாமோதர பெருமாள் கோவில் எதிர்ல, போன வருஷம் டிசம்பர் மாசம் புதுசா டாஸ்மாக் கடை திறந்தாங்க... இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, அப்பவே அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க பா...''ஆனாலும், அதிகாரிகள் அசைஞ்சு கொடுக்கல... சமீபத்துல, இந்த கடையை அகற்ற வலியுறுத்தி, ஆண்கள், பெண்கள்னு 50 பேர் அந்த கடை முன்னாடி கருப்பு கொடியுடன் திரண்டாங்க பா...''அங்க வந்த பட்டாபிராம் போலீசார், 'தேர்தல் நேரத்தில், கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த உங்க மேல, வழக்கு போட்டு உள்ள தள்ளினா என்ன செய்வீங்க'ன்னு கேட்டதும், 'கட்சி மீட்டிங்னு தான் சொல்லி கூட்டிட்டு வந்தாங்க'ன்னு சொல்லிட்டு, நைசா நழுவிட்டாங்க பா...''அந்த டாஸ்மாக் கடை வழக்கம் போல செயல்படுது... ஏற்கனவே, அந்த பகுதியில ரெண்டு கடைகளும், பார்களும் இருக்குது... ஆனாலும், வருவாயை குறி வச்சு அடுத்தடுத்து கடைகளை திறக்கிறதால, அந்த பகுதி மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 17, 2024 06:38

காசு வேண்டும், தங்கள் மது ஆலைகள் லாபத்தில் கொழிக்க வேண்டும் என்றால் கோவிலுக்கும் பள்ளிகளுக்குள்ளும் கூடக் கடை திறப்பார்கள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ