உதயநிதி பிரதிநிதிக்கு மாவட்ட செயலர் முட்டுக்கட்டை!
''அரசை விமர்சித்து பேசிட்டார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சவுத் இந்தியன் சினி 'டிவி' ஆர்ட்டிஸ்ட் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் கட்டடத்தை, கடந்த மார்ச் மாசம் சீல் வச்சா... சங்கத்தின் தலைவரா, பா.ஜ.,வுல இருக்கற நடிகர் ராதாரவி இருக்கார் ஓய்...''அதை கட்டடமாகவே விலைக்கு வாங்கியிருந்தா... ஆனா, இடத்தை மட்டும் தனியா வாங்கி, அப்பறமா கட்டடம் கட்டியதா கணக்கு எழுதியிருக்கா... இது பத்தி கணக்கு கேட்ட உறுப்பினர்கள் சிலரை சங்கத்தை விட்டே நீக்கிட்டா ஓய்...''இதை எதிர்த்து, அவா வழக்கு போட, கோர்ட் உத்தரவுப்படி தான் சீல் வச்சா... இப்ப, பிரச்னையை முடிச்சு சங்கத்தை புதுப்பித்து, சமீபத்துல திறப்பு விழா நடத்துனா ஓய்...''இதுல ராதாரவி,'கவர்மென்ட், வேணும்னே சங்க கட்டடத்தை சீல் வச்சிடுத்து'ன்னு பேசியிருக்கார்... 'பெப்சி' சங்கத்தின் நிர்வாகியான ஆர்.கே.செல்வமணி, 'அரசுக்கு எவ்வளவு வேலைகள் இருக்கு... அதை விட்டுட்டு, கட்டடத்துக்கு சீல் வைக்கற வேலை எல்லாம் செய்யலாமா'ன்னு ஆவேசமா பேசியிருக்கார் ஓய்...''பெப்சிக்கு ஆதரவா, அரசு நிறைய விஷயங்களை செய்து குடுத்திருக்காம்... 'அதை எல்லாம் மறந்துட்டு, அரசை விமர்சிக்கறதா'ன்னு தி.மு.க., ஆதரவு நிர்வாகிகள், முதல்வருக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''நன்றி மறந்துட்டார்னு சொல்லுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''அரியலுார்ல சமீபத்துல மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட செயலரான அமைச்சர் சிவசங்கர் தலைமையில நடந்துச்சு... இதுல, கொள்கை பரப்பு துணை செயலர் பெருநற்கிள்ளி பேச, அமைச்சரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாவ வே...''ஏன்னா, பெருநற்கிள்ளி, பா.ம.க.,வுல மாநில துணை பொதுச் செயலரா இருந்துட்டு, சில வருஷங்களுக்கு முன்னாடி தான் தி.மு.க.,வுக்கு வந்தாரு... இவரது மகளின் மருத்துவமனையை, திருச்சி டோல்கேட் பகுதியில சமீபத்துல அமைச்சர் நேரு திறந்து வச்சிருக்காரு வே...''இதுக்கான அழைப்பிதழ், விளம்பரம், பேனர்ல எங்கயும் மாவட்ட செயலரான அமைச்சர் சிவசங்கர் பெயர், படத்தை போடல... பெருங்கிள்ளியின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு சிவசங்கர் நிறைய உதவிகள் செஞ்சும், அவரை புறக்கணிச்சது தான், சிவசங்கரின் ஆதரவாளர்கள்கோபத்துக்கு காரணம்...''என்றார், அண்ணாச்சி.''உதயநிதியின் பிரதிநிதிக்கே முட்டுக்கட்டை போட்டிருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறதால, உள்ளாட்சிகள் நிர்வாகத்தை, உதயநிதி கவனிக்கிறாரு... அந்த வகையில, ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்காணிக்கும்படி, ஈரோடு எம்.பி., பிரகாஷுக்குஉதயநிதி உத்தரவுபோட்டாரு பா...''சமீபத்துல நடந்த ஈரோடு மாமன்ற கூட்டத்துல கலந்துக்க முடிவு செஞ்ச பிரகாஷ், முதல் நாளே நிர்வாகத்துக்கு தகவல் தந்திருக்காரு... இது, மேயர் நாகரத்தினத்தின் கணவரும், மாநகர செயலருமான சுப்பிரமணியத்துக்கு தெரியவர, அவர் அதிருப்தியாகிட்டாரு பா...''எம்.பி.,யை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்காம தடுக்க, பல முட்டுக்கட்டை போட்டிருக்காரு... எம்.பி.,க்கு தனியா சீட்டும் ஒதுக்காம இருந்திருக்காங்க பா...''இதுல, எம்.பி.,கடுப்பானாலும், மாமன்ற கூட்டத்துல கலந்துக்கிட்டு பேசிட்டு தான் போனாரு... அதோட, மாநகர செயலர் முட்டுக்கட்டை பத்தி, உதயநிதி கவனத்துக்கும் கொண்டு போயிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.