உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அதிகாரிகளை மிரட்டி கோடிகளை குவிக்கும் உதவியாளர்!

அதிகாரிகளை மிரட்டி கோடிகளை குவிக்கும் உதவியாளர்!

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''அதிகாரியை கவனிச்சா தான் அனுமதி தர்றாங்க பா...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''எந்த ஊர் விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திருவள்ளூர் மாவட்டத்தில், பிரபல முருகன் கோவில் ஊர் தாலுகாவுல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு, விவசாயிகள் மனு குடுத்தா, கணிசமான தொகையை கறந்துடுறாங்க... ''அதே நேரம், ரியல் எஸ்டேட் தொழில் செய்றவங்க நிலத்தை சமன்படுத்தவும், சாலை விரிவாக்க பணிக்கு மண் கேட்கிற ஒப்பந்ததாரர்களுக்கும் வாய்மொழியா அனுமதி குடுத்து, பெரும் தொகையை வாங்கிடுறாங்க பா... ''இவங்களது வசூல் வண்டவாளங்கள் பத்தி, கலெக்டர், ஆர்.டி.ஓ., வுக்கு பல புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் இல்ல... இதுக்கு இடையில, இவங்களது ரெகுலர் பதவிக்காலம் முடிஞ்சும், மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்யாம இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய். தெருவில் சென்ற சிறுமியை நிறுத்திய பெரியசாமி அண்ணாச்சி, ''மலர், உங்கப்பா ஊர்ல இருந்து வந்துட்டாரா தாயி...'' என கேட்க, சிறுமி, 'ஆம்' என, தலையை அசைத்தபடி சென்றாள். நண்பர்கள் பக்கம் திரும்பிய அண்ணாச்சி, ''என்கிட்டயும் ஒரு வசூல் மேட்டர் இருக்குல்லா...'' என்றபடியே தொடர்ந்தார்... ''திருச்சி மாவட்டம், லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு ஏட்டு இருக்காரு... இதுக்கு முன்னாடி கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் ஸ்டேஷனில் இருந்தப்ப, போலி மது விற்றவங்களிடம் மாமூல் வாங்கி மாட்டிக்கிட்டாரு வே... ''அதுவும் இல்லாம, போதை பொருள் விற்ற வடமாநில நபர்களை லாட்ஜ்ல அடைச்சு வச்சு, அவங்களிடம் இருந்த லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் பண்ணிய புகார்லயும் சிக்கினாரு... இதனால, அவரை ஆயுதப்படைக்கு துாக்கி அடிச்சாவ வே... ''அப்புறமா திருவெறும்பூர் ஸ்டேஷன், அடுத்து லால்குடின்னு வந்துட்டாரு... சீக்கிரமே, எஸ்.பி.சி.ஐ.டி.,க்கு போக போறதாகவும், உயர் அதிகாரி ஒருத்தர் தனக்கு சிபாரிசு பண்ணிட்டதாகவும், சக போலீசாரிடம் மிரட்டல் பாணியில சொல்லிட்டு இருக்காரு... ''சக போலீசாரோ, 'போற இடத்துல எல்லாம் வசூல் மன்னனா வலம் வந்தவரை உளவுத்துறையில் போட்டா, வெளங்குன மாதிரி தான்'னு புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''மகாதேவன், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''கோடிகள்ல புரண்டுண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே தொடந்தார்... ''தமிழக அரசுல இருக்கிற சீனியர் முக்கிய புள்ளிக்கு, சென்னை மயிலாப்பூர்ல ஒரு ஆபீஸ் இருக்கு... இந்த ஆபீஸ்ல, 'சின்னதம்பி' நடிகரின் பெயர்ல ஒரு உதவியாளர் இருக்கார் ஓய்... ''இவர், தமிழகத்தில் இருக்கும், 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் பணிபுரியும் நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர்களிடம், 'லே அவுட் அப்ரூவல் மற்றும் மூன்று குடியிருப்புக்கு மேல எத்தனை வரைபட அனுமதி குடுத்திருக்கேள்'னு தினமும் கணக்கு கேட்டு, குடைச்சல் குடுக்கறார் ஓய்... ''அதிகாரிகள் விளக்கம் கேட்டா, 'முக்கிய புள்ளியை கவனிக்கணும்'னு சொல்லி, பல லட்சம் ரூபாயை கறந்துடறார்... இப்படியே மாசத்துக்கு பல கோடிகளை வசூல் பண்றார்... 'இதெல்லாம், முக்கிய புள்ளிக்கு தெரியுமா அல்லது அவர் பெயரை பயன்படுத்தி இவர் வாரி குவிக்கறாரா'ன்னு தெரியாம அதிகாரிகள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பி னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
செப் 16, 2025 18:42

அட, அதிகாரிகளே இவ்வளவு கோடிகள் ‘சம்பாதிக்கிறார்களா’? நம் கட்டிங் கமிஷன் percentage ஏற்றிவிடவேண்டும் என்று அமைச்சர்கள் ‘ஆய்வுக்கூட்டம்’ நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று அந்தப்புர முதல்வர் உத்தரவு போட்டுவிடுவார்


Anantharaman Srinivasan
செப் 16, 2025 15:07

அதிகாரிகள் லஞ்சம் வாங்கி மேல் மட்டம் வரை கொடுப்பதென்பது திராவிட கட்சிகளில் புரையோடி விட்டது. மேல் மட்டத்துக்கு ஒழுங்க பங்கு போகும் வரை எத்தனை புகார்கள் போனாலும் அந்த பேப்பர்கள் பஜ்ஜி போண்டா மடித்து கொடுக்கவே பயன்படும். தில்லா லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்து பிடி பட்டால் மட்டுமே 5% குறைய வாய்ப்பு.


KOVAIKARAN
செப் 16, 2025 12:04

தமிழக அரசு அதிகாரிகளை இனிமேல் வாசகர்களாகிய நாம் தமிழக லஞ்ச அதிகாரிகள் என்று அழைப்போம். தினமலரும் தினந்தோறும் அரசின் பல துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி செய்திகளையும், டீக்கடை பெஞ்ச் பகுதியிலும் பெயரிட்டும் கூறி வருகிறார்கள். ஆனாலும் லஞ்சம் வாங்குவது ஒழியவில்லை அதிகாரிகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கிறதே தவிர குறையவும் இல்லை. இந்தப் பழக்கம் எந்த திராவிடக் கட்சிகள் ஆட்சிற்கு வந்தாலும் தொடரும். Incorrigible Fellows. திருத்தமுடியாத ஜென்மங்கள்.


S.V.Srinivasan
செப் 16, 2025 07:44

தமிழகத்தில் தலை முதல் கால் வரை லஞ்சம், லஞ்சம், லஞ்சம். இந்த லட்சணத்தில் முக்கிய மந்திரி தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று வீர வசனம் வேற விட்றாரு.


Raghavan
செப் 16, 2025 16:27

தலை குனிய விடமாட்டார் ஆனால் படுக்கவைத்துவிடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை