உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  துணை முதல்வர் உதயநிதியை புறக்கணித்தாரா அமைச்சர்?

 துணை முதல்வர் உதயநிதியை புறக்கணித்தாரா அமைச்சர்?

பெஞ்சில் அமர்ந்ததுமே , ''குளத்துக்கு பூட்டு போட்டுட்டா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''குளத்தை எப்படிங்க பூட்ட முடியும்...'' என, வியப்பாக கேட்டார் அந்தோணிசாமி. ''கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தறால்லியோ... இதுல, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பக்கத்துல, நடுவச்சேரி ஈஸ்வரன் கோவில் அருகேயுள்ள குளத்தையும் இணைச்சிருக்கா ஓய்... ''இதுக்காக, குழாய் போட்டு, குளத்துல தண்ணீரை நிரப்பறா... சமீபத்துல பெய்த மழையால, இந்த குளத்துல தண்ணீர் ஓரளவுக்கு நிரம்பியிருக்கு ஓய்... ''போன வருஷம் குளம் காய்ஞ்சு கிடந்தப்ப, பக்கத்துல இருக்கிற குடியிருப்புகளுக்கு போக வசதியா, விதிகளை மீறி குளத்தை ஒட்டி அவிநாசி ஒன்றியம் சார்பில் தார் ரோடு போட்டிருந்தா... இப்ப, தண்ணீர் நிரம்பி, அந்த ரோடு சேதமாயிடுத்து ஓய்... ''இந்த சூழல்ல, அத்திக்கடவு திட்ட குழாய்லயும் தண்ணீர் வந்து, குளம் இன்னும் நிரம்பிட்டா, ரோடு முழுதும் பாழாகிடும்னு நினைச்ச ஒன்றிய அதிகாரிகள், அந்த குழாயை அடைச்சி, அதுக்கு பூட்டும் போட்டுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''போலீசார் காட்டுல பணமழை கொட்டுது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப் பட்ட ஊர்ல, ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கு... இங்க, குறுகிய காலத்துல நிறைய சம்பாதிக்க முடியும்கிறதால, போலீசார் மத்தியில இங்க பணிபுரிய போட்டியே நடக்கும் பா... ''சில போலீஸ் அதிகாரி கள், லட்சக்கணக்குல செலவு பண்ணி, இங்க மாறுதல் வாங்கிட்டு வராங்க... இங்க இருக்கிற தொழிற்சாலைகள்ல நடக்கிற பல விபத்துகள், குற்ற சம்பவங்கள் வெளி யில தெரியிறது இல்ல பா... ''ஏன்னா, தொழிற்சாலை நிர்வாகிகள், போலீசாரை நல்லாவே கவனிச்சிடுறாங்க... இந்த மாதிரி சம்பவங்களை எல்லாம், எஸ்.பி., கவனத்துக்கு எடுத்துட்டு போக வேண்டிய, தனிப்பிரிவு போலீஸ்காரரும், இதுக்கெல்லாம் உடந்தையா இருந்து, மாமூல் மழையில குளிக்கிறாரு பா...'' என்றார், அன்வர்பாய். ''சுரேஷ், தள்ளி உட் காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''உதயநிதியை புறக்கணிச் சிட்டார்னு சொல்லுதாவ வே...'' என்றார். ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''மதுரையில், சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், துணை முதல்வர் உதயநிதி கலந்துக் கிட்டாரு... சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வர்றதா இருந்தவர், திடீர்னு பயண திட்டத்தை மாத்திட்டாரு வே... ''அதாவது, திருச்சிக்கு விமானத்துல வந்தவர், அங்க ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, கார்ல மதுரைக்கு வந்துட்டாரு... உதயநிதி முதல்ல வர்றதா இருந்த மதுரை விமானத்துல தான், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜனும், குடும்பத்துடன் மதுரைக்கு வந்தாரு வே... ''மதுரையில இறங்கிய அமைச்சர், சோழவந்தான் பக்கத்துல இருக்கிற தன் குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டாரு... மதுரைக்கு உதயநிதி வர்றார்னு தெரிஞ்சிருந்தும், அவரை வரவேற்காமலும், அவரது நிகழ்ச்சியில கலந்துக்காம போயிட்டதாலும், 'திட்ட மிட்டே உதயநிதியை தியாகராஜன் புறக்கணிச்சிட்டாரா'ன்னு மதுரை தி.மு.க.,வினர் முணுமுணுத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பேச்சு முடிய பெரியவர் கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ