ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''இந்த முறை ஜெயிக்க முடியாதுன்னு சொல்றாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை மேற்கு தொகுதியில், 2011, 2016, 2021 ஆகிய மூணு தேர்தல்லயும் ஜெயிச்சவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு... பத்திரப்பதிவு துறை அமைச்சரான மூர்த்தி, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரா இருக்காரு பா...''இவரது மாவட்டத்துல ஏற்கனவே மூணு சட்டசபை தொகுதிகள் இருந்தும், நாலாவதா மேற்கு தொகுதியையும் தலைமை குடுத்திருக்கு... ராஜுவை எப்படியாவது தோற்கடிக்க திட்டமிட்டிருக்கும் மூர்த்தி, மேற்கு தொகுதியில பல நலத்திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்காரு பா...''சமீபத்துல ஒரு கூட்டத்துல மூர்த்தி பேசுறப்ப, 'மேற்கு தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்கள் செய்திருக்கோம்... இந்த தொகுதியில் இந்த முறை தி.மு.க.,வே போட்டியிட முதல்வரிடம் வலியுறுத்துவோம்'னு சொன்னாரு பா...''மூர்த்தி வழியில் நடக்கிற அரசு அதிகாரிகளும், மேற்கு தொகுதி மக்கள் எந்த கோரிக்கையுடன் வந்தாலும், உடனுக்குடன் செஞ்சு குடுத்துடுறாங்க... இதனால, '2026 தேர்தல்ல, செல்லுார் ராஜுக்கு சிக்கல் தான்'னு தி.மு.க.,வினர் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''ஓய்வெடுங்கன்னு பதிவு போட்டுட்டு இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பா.ம.க., நடத்திய சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு பிறகு ராமதாஸ் - அன்புமணி மோதல் முடிவுக்கு வந்துடும்னு அந்த கட்சியினர் எதிர்பார்த்தாங்க... ஆனா, நிலைமை முன்னைவிட மோசமாகிடுச்சுங்க...''கட்சியின் இளைஞர் அணி தலைவரா நியமிக்கப்பட்ட முகுந்தனுக்கு, அன்புமணி எதிர்ப்பு தெரிவிச்சாரு... ஆனா, அந்த முகுந்தன் கையை பிடிச்சுட்டு தான் மாநாட்டு மேடைக்கே ராமதாஸ் வந்தாருங்க...''மாநாட்டுல, அன்புமணி பத்தி எதுவும் பேசாத ராமதாஸ், 'ஓய்வறியா உழைப்பாளி, தியாக செம்மல்'னு கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியை ஏகத்துக்கும் பாராட்டினாரு... இதனால, கடுப்பான அன்புமணி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்கள்ல ஜி.கே.மணியை கடுமையா திட்டிட்டு இருக்காங்க... அதோட, 'ஓய்வெடுங்க அய்யா'ன்னு ராமதாசுக்கும் சேர்த்து வேண்டுகோள் விடுத்துட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''முதல்வர் நிகழ்ச்சிக்கே வராம போயிட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்துல பல திட்டங்களை துவங்கி வச்சாருல்லா... இதுக்காக, வனத்துறையின் முக்கிய அதிகாரிகள் பலரும் சென்னையில் இருந்து வந்திருந்தாவ வே...''ஆனா, நீலகிரி மாவட்டத்துல ஒரே இடத்தில் மூணு வருஷத்துக்கு மேலா பணியில் இருக்கும் வன அதிகாரி ஒருத்தர் மட்டும் விழாவுக்கு வரல... இத்தனைக்கும் அந்த அதிகாரி, பதவி உயர்வுடன் தொடர்ந்து நீலகிரியில் பணியாற்ற காய் நகர்த்திட்டு இருக்காரு... அப்படியிருந்தும், முதல்வர் விழாவை அவர் புறக்கணிச்சது, வனத்துறை வட்டாரங்கள்ல சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''அருண்குமார் வரார்... பில்டர் காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.