மெட்ரோ பணியால் மழைநீர் வடிகால் சேதம் கோடம்பாக்கத்திற்கு வெள்ள அபாயம்
கோடம்பாக்கம், மெட்ரோ ரயில் பணியின்போது, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளதால், கோடம்பாக்கம் பகுதியில் மீண்டும் வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், 132வது வார்டுக்கு உட்பட்ட அஜீஸ் நகர், பராங்குசபுரம், ரயில்வே பார்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ரயில்வே பாடர் சாலை வழியாக, கோடம்பாக்கம் ரயில் நிலைய சாலை மற்றும் ஆற்காடு சாலை மழைநீர் வடிகால்வாய் வழியாக, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் கால்வாயில் வெளியேறி வருகிறது. ஆனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், இப்பகுதியில் மழைநீர் தேங்கி வந்தது. இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு கோடம்பாக்கம் ரயில்வே பாடர் சாலையில் 1.30 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி கட்டப்பட்டது. கோடம்பாக்கம் பகுதியில் தேங்கும் மழைநீர், இந்த கீழ்நிலை நீர்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு. அங்கிருந்து, 340 மீட்டர் துாரத்திற்கு குழாய் வாயிலாக கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள மழைநீர் வடிகாலில் வெளியேற்றப்பட்டது. தற்போது, கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் நடக்கும் மெட்ரோ ரயில் வழித்தட பணியின்போது, மழைநீர் வடிகால்வாய்கள் சேதமடைந்துள்ளன. எனவே, மழைநீர் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோடம்பாக்கம் அஜீஸ் நகர், பராங்குசபுரம் பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. பாதிப்புகளை தவிர்க்க, இதற்கான முன்னேற்பாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'மோட்டார்' துணை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்த பகுதியில், மின் மோட்டார் அமைத்து, டிரஸ்ட்புரம் கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்றப்படும். மேலும், ரயில்வே சிறு பாலம் துார்வாரப்பட்டு, அதன் மறுபுறம் மின் மோட்டார் அமைத்து, தி.நகர் ஆனந்தம் நகர் வழியாக மாம்பலம் கால்வாயில் விடப்படும். இதனால், பாதிப்புகள் அதிகம் இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.