அரசு நிலத்தை மீட்கக்கோரி வருவாய் துறையிடம் மனு
பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லால்பகதுார் சாஸ்திரி தெருவில், விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஒட்டியுள்ள சாலை வழியாக, லால்பகதுார் சாஸ்திரி தெருவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், பிரதான சாலையான பக்தவச்சலம் சாலைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், இக்கோவில் அருகில் உள்ள சாலையின் ஒரு பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் எனவும், நேற்று லால்பகதுார் சாஸ்திரி தெருவை சேர்ந்த குடியிருப்புவாசிகள், பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேர்முக உதவியாளர் செல்வகுமாரிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:லால்பகதுார் சாஸ்திரி தெருவில் இருந்து பக்தவச்சலம் பிரதான சாலைக்கு செல்ல, 2.60 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்க, மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.இச்சாலையை ஆக்கிரமித்துள்ள தனிநபர்கள் சிலரால் அப்பணி நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் உள்ள பகுதியை தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.