உள்ளூர் செய்திகள்

டீ கடை பெஞ்சு

நாய்க்கு போடும் உணவில் கூட கைவரிசை...! ''நில ஆக்கிரமிப்பு வழக்குல, ஐ.ஜி.,யே சிக்கிட்டாராம் பா...'' என, குண்டைத் தூக்கிப் போட்டார் அன்வர்பாய்.

''விவரமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''நில அபகரிப்பு முயற்சியில ஈடுபட்டதா, அவர் மேல கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷன்ல, எப்.ஐ.ஆரே பதிவு பண்ணிட்டாங்க பா... பண்ணை வீட்டோட சேர்ந்த நான்கு ஏக்கர் நிலத்தை, 'சுட்டுட்டாங்க'ன்னு ஏப்ரல் மாசமே புகார் கொடுத்திருக்காங்க... குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க முகாந்திரம் இருந்ததால, இப்போ எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்க பா... எப்படியாவது, திரும்பவும் அம்மா மனசுல இடம் பிடிச்சுடணும்னு ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருந்தாரு... எல்லாம் போச்சு பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''சிவனேன்னு இருந்திருந்தா, விஷயம் இப்படி, 'ஆன்ட்டி' ஆகியிருக்காதுல்ல...'' என்றார் அந்தோணிசாமி.

''நாடு விட்டு, நாடு போன முன்னாள் துணை மேயர், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், எங்க இருக்காருன்னே தெரியாத அளவுக்கு, 'சைலன்ட்டா' இருக்காரு வே... ஆனா, அவரோட ஆதரவாளர் ஒருத்தர், இப்போ, 'பவர்புல்லா' மாறிக்கிட்டு இருக்காரு வே...'' என, அடுத்த தகவலை சொன்னார் பெரியசாமி அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சென்னையில முன்னாள் துணைமேயரா தியாகராஜன் இருந்தப்ப, அவருக்கு உதவியாகவும், பினாமியாகவும் இருந்தவர், இப்போ, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வை பிடிச்சு, கார்டன் இருக்கற பகுதியிலேயே வட்டச் செயலர் பதவி வாங்கியிருக்காருங்க... இதுக்கு பின்னால ஏதோ சதி திட்டம் இருக்குன்னு, உளவுத்துறை போலீஸ் சந்தேகப்படுதாவ...'' என்றார் அண்ணாச்சி.

''நாய்க்கு போடற சாப்பாட்டுல கூட கை வைக்கறா ஓய்...'' என, வருத்தப்பட்டார் குப்பண்ணா.

''என்ன நடக்குதுன்னு முழுசாம சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.

''சென்னையில இருக்கற, 'டாக் ஸ்குவாட்'ல, 32 நாய்கள் இருக்கு ஓய்... சிறைத் துறைக்காக எட்டு நாய்களை வாங்கி பழக்கப்படுத்திண்டிருக்கா... இந்த நாய்களுக்கு தினமும், 200 கிராம் சைவ உணவு, அரை கிலோ மாட்டுக்கறி, அரை லிட்டர் பால் கொடுக்கணும்னு, 'ரூல்ஸ்' வச்சிருக்கா... அதுக்கு உண்டான தொகையையும் நாய்களை பராமரிக்கற பொறுப்புல இருக்கறவருக்கு கொடுத்துடறா... ஆனா, அந்த தொகையை முழுசா செலவழிக்காம அவர் சுருட்டிடறதா புகார் வருது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''அதுல, எப்படி கை வைக்க முடியும்... பசி எடுத்தா நாய் குரைக்கும்ல...'' என்றார்அண்ணாச்சி.

''முழுசா பட்டினி போட்டா தான சிக்கல்... ஒரு வேளைக்கு, 16 லிட்டர் பால், 16 கிலோ மாட்டிறைச்சி வாங்கணும்... ஆனா, ஒன்பது கிலோ மாட்டிறைச்சி, ஒன்பது லிட்டர் பால் வாங்கிட்டு, 16 கிலோ, 16 லிட்டர் வாங்கியதா, 'டூப்ளிகேட் பில்' வச்சுடறா...'' எனக் கூறிவிட்டு எழுந்தார் குப்பண்ணா; பெஞ்சில் அமைதி திரும்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை