உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சில்மிஷ அதிகாரியை காப்பாற்றுவது யார்?

சில்மிஷ அதிகாரியை காப்பாற்றுவது யார்?

மெதுவடையை தேங்காய் சட்னியில் தோய்த்தபடியே, ''மானிய நிதி எங்க போறதுன்னு தெரியல ஓய்...'' என, மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரு, எதுக்கு மானியம் தர்றாவ வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வருஷா வருஷம் பராமரிப்பு செலவுகளுக்கு மானியம் தரா... நடப்பு 2023 - 24 கல்வியாண்டுக்கு, மாநில திட்ட இயக்குன ரகம் மூலமா, 126.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு பண்ணா ஓய்...''இந்த தொகை, சென்னையில இருக்கற கனரா வங்கியில இருந்து, ஒவ்வொரு மாவட்ட தலைமை வங்கிக்கும் வரும்... அங்க இருந்து, அந்தந்த பள்ளிகளின் வங்கி கணக்குக்கு பணம் போகும் ஓய்...''வருஷா வருஷம் கல்வியாண்டு துவங்கும் ஜூன், ஜூலையில இந்த பணத்தை விடுவிப்பா... ஆனா, இப்ப எல்லாம் கல்வியாண்டின் கடைசியில தான் பணத்தை விடுவிக்கறா ஓய்...''ஆனா, ஒரு வருஷமா வங்கியில கிடக்கற பணத்துக்கு வட்டி தருவால்லியோ... அந்த வட்டி தொகை எந்த கணக்குல, யாருக்கு போறதுன்னு தெளிவான விபரங்கள் இல்ல... 'இந்த வட்டியையும் பள்ளிகளுக்கு பிரிச்சு குடுத்தா, பராமரிப்பு பணிகளை இன்னும் நன்னா பண்ணலாமே'ன்னு தலைமை ஆசிரியர்கள் அலுத்துக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பார்க்கிறதுக்கு காலேஜ் பையன் மாதிரி இருக்கார்... வாயை திறந்தா கூவம் தோத்துடுதுல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''கோவை, வணிகவரி துறையில இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருத்தர் இருக்காரு... பெண் ஊழியர்களிடம், 'எந்த வழிக்கல்வியில் படிச்சீங்க'ன்னு கேட்கிறாரு... அவங்க, 'தமிழ்வழியில படிச்சேன்'னு சொன்னா போதும், அவருக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துடுது வே...''உடனே, 'தமிழ்ல படிச்சிட்டு, கவர்மென்ட் வேலைக்கு வந்துட்டோம்னு திமிரா'ன்னு கேட்டு தேவையில்லாம திட்டுதாரு... இதை கேட்டு சில பெண்கள் கண்ணீர் விட்டாலும், அதிகாரி அசராம தொடர்ந்து திட்டுதாரு வே...''சின்ன பசங்களை கூட அய்யா, சாமின்னு மரியாதையா கூப்பிடுற கொங்கு மண்டலத்துல, இப்படி மட்டு, மரியாதை இல்லாம பேசுற அதிகாரியை பார்த்து, துறையில பலரும் மனம் குமுறிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''வாங்க, முருகந்தர் லால்...'' என, வடமாநில நண்பரை வரவேற்ற அன்வர்பாயே, ''சில்மிஷ அதிகாரி மேல நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என்றார்.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஈரோட்டுல, பொருளாதார மோசடிகளை விசாரிக்கிற போலீஸ் அதிகாரி ஒருத்தர், தன் ஆபீஸ்ல ஒரு பெண் போலீசிடம் அத்துமீறியிருக்கார்... அவங்க, 'விசாகா' கமிட்டியில புகார் குடுத்தாங்க பா...''பல மாசமா நடந்த விசாரணையின் முடிவுல, அதிகாரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர் மேல நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தாங்க... ஆனா, அவர் மேல இன்னைக்கு வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல பா...''இதுக்கு மத்தியில, பல மோசடி வழக்குகள்ல முறையான ஆவணங்களை இணைக்காம, கணிசமா வசூல் நடத்திட்டாரு... இதனால, அவரை காத்திருப்போர் பட்டியல்ல போட்டாங்க...''ஆனாலும், தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மறுபடியும் அதே இடத்துக்கு வந்துட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''ரகுபதி, ஊர்ல இருந்து எப்ப வந்தேள்...'' என, நண்பரிடம் குப்பண்ணா விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ