உள்ளூர் செய்திகள்

அரிகோ! (10)

அந்த ஆவி அப்படி என்னதான் செய்தது?அரிகோ கார் விபத்தில் அகால மரணம் அடைந்த பிறகு, அடுத்த நபரைத் தேடி அலைந்தது ஆவி. அதற்கு வாகாக அமைந்தது அரிகோவின் சகோதரர் ஆஸ்கார்.ஆஸ்காரும், அரிகோவைப் போலவே மருத்துவ சிகிச்சைகளைச் சுத்தம் செய்யப்படாத கத்தியைக் கொண்டு செய்ய முற்பட்டார். ப்ரிட்ஸின் ஆவி தன்னை இவ்வாறு செய்யத் தூண்டுவதாகவும் அவர் கூறினார்.இந்நிலையில் ஆஸ்காரும் வெகு விரைவில் கோரமான கார் விபத்து ஒன்றில் அகால மரணத்தை அடைந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த அதிர்ச்சியில் இருந்து அப்பகுதி மக்கள் விடுபடுவதற்கு முன்பாக இன்னுமொரு அதிர்ச்சி அவர்களை ஆட்டுவித்தது.அரிகோவின் இன்னொரு சகோதரர் எடிவல்டோ வில்டி என்பவர், கையில் மட்டமான கத்தியுடன் புறப்பட்டார். ப்ரிட்ஸின் ஆவி அவரைப் பிடித்து ஆட்டுவதாக நம்பப்பட்டது.அவரும் மருத்துவ சிகிச்சைகளை அரிகோவைப் போலவே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். அதில் முரட்டுத் தனமும், மனித நேயமும் இருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.இந்நிலையில் வில்டியும் ஒரு மோசமான, பயங்கர கார் விபத்தில் சிக்கி மரணத்தைத் தழுவ நேரிட்டது.டாக்டர் ப்ரிட்ஸின் ஆவி ஆட்கொண்டதாக நம்பப்பட்ட அரிகோவும், அவரது இரு சகோதரர்களும் இவ்வாறு கோர விபத்தில் இறந்தது அனைவரையும் வியப்படையச் செய்தது.அடுத்து ப்ரிட்ஸின் ஆவி ஆட்கொண்டதாகப் புறப்பட்டவர் பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் எடிசன் க்யூரியோஸ்.இவரும் அரிகோவைப் போன்றே நம்பவே முடியாத, புதிய நுணுக்க முறையோடு சிகிச்சைகளை செய்யத் தொடங்கினார். இவரிடம் ஆயிரக் கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று பலனடைந்தனர்.ப்ரிட்ஸின் ஆவியால்தான் இப்படிப்பட்ட மகத்தான சேவைகளைத் தன்னால் செய்ய முடிவதாகக் கூறிய இவரின் ஆயுளும் விரைவில் முடிந்தது. அதுவும் ஒரு மிகக் கோரமான வடிவில் நிகழ்ந்தது.ஒருநாள்- அவரது எதிரி ஒருவன் பயங்கரமான கத்தியால் அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திக் கொலை செய்தான்.இதன்பின்னர் 'ரூபன்ஸ் பாரியாஸ்' என்பவரை ஆட்கொண்டது டாக்டர் ப்ரிட்ஸின் ஆவி. அவரும் மரணத்தையே அடைய நேரிட்டது.இவ்வாறாக ப்ரிட்ஸின் ஆவி ஆட்கொண்டதாகக் கூறி மருத்துவ அதிசயங்களைச் செய்து வந்த அனைவருமே கோரமான விபத்தில் அகோர மரணத்தை அடைந்தது உண்மை என்றாலும் அது வியப்பையே அளித்தது.இது எப்படி சாத்தியமாயிற்று என்பதற்கு இன்றுவரை பதில் கிடையாது.யார் அந்த டாக்டர் ப்ரிட்ஸ்?அரிகோதான் இவரைப் பற்றி அவ்வப்போது சில விவரங்களைத் தெரிவித்து வந்தார். தமது கனவில் வந்து அவர் சொன்னதாகத் தான் அவரது தகவல்கள் இருந்தன. இப்போது டாக்டர் ப்ரிட்ஸைப் பற்றிப் பார்ப்போம்.ஜெர்மனியின் 'மூனிச்' நகரில் பிறந்தார் டாக்டர் ப்ரிட்ஸ். இவர் பிறந்த சமயத்தில் இவரது தந்தை ஆஸ்துமா நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.மூனிச் நகரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நல்ல காலநிலை உள்ள ஒரு இடத்திற்கு மாறினால், இந்த ஆஸ்துமா தொந்தரவில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்று யோசனை தெரிவித்தார். இதனையெடுத்து, அவரது குடும்பம் அருகிலுள்ள போலந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தது.அப்போது, ப்ரிட்ஸுக்கு வயது நான்கு. பின்னர் சில ஆண்டுகளில், அதாவது ப்ரிட்ஸ் சிறுவனாக இருந்தபோது அவரது தந்தை, பின்னர் தாய் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதன்பிறகு சொந்த முயற்சியாலேயே ப்ரிட்ஸ் மருத்துவப் படிப்பைப் படித்தார்.பட்டம் பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒருநாள், ஒரு மோசமான சம்பவம் அவருக்கு நடந்தது. ராணுவ அதிகாரி ஒருவர் தனது மகளைத் தோளில் சுமந்தபடி இவரது வீட்டிற்கு வந்தார். அந்தப் பெண் உடம்புக்கு முடியாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். அவளுக்கு ஏதாவது முதலுதவி அளித்துக் காப்பாற்றுமாறு அந்த மேஜர் கேட்டுக் கொண்டார்.ப்ரிட்ஸும் தனக்குத் தெரிந்த மருத்துவ சிகிச்சையை செய்தபோது, ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த அந்தப் பெண் இறந்து போனாள். இதனால் கோபமடைந்த மேஜர், அவரது மகளை ப்ரிட்ஸ் கொன்றுவிட்டதாகக் களேபரம் செய்தார். அத்துடன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை ராணுவச் சிறையிலும் அடைத்துவிட்டார்.சிறையில் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார். தினம், தினம் சித்ரவதை தாங்க முடியாத அவலம். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் அடி, உதைகளைத் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. சிறையில் இருந்து 1914ம் ஆண்டு தப்பி வெளியே வந்தார் ப்ரிட்ஸ். பின்னர் எஸ்டோனியாவை அடைந்து அங்கேயே 1918ம் ஆண்டு வரை வசித்து வந்தார்.இப்படித்தான் டாக்டர் ப்ரிட்ஸ் என்பவரைப் பற்றி அரிகோ கூறியிருந்தார்.மேலும், அவர் பத்திரிகையாளர் ஒருவரிடம் நோயாளிகளிடம் அவர்களின் நோயைப் பற்றிக் கேட்காமலேயே எவ்வாறு சிகிச்சை அளிக்க முடிகிறது என்பது பற்றி விரிவாகக் கூறியிருந்தார்.'நோயாளி என் அருகே வந்தவுடனேயே டாக்டர் ப்ரிட்ஸின் ஆவி அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதையும், என்ன மருந்து எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதையும் என்னிடம் தெளிவாகக் கூறுகிறது. அப்படியே நான் செய்கிறேன். பிரச்னைக்குரிய நோயாளிகள் வருகிற போதுதான் ஆவி என்னை முற்றிலுமாக ஆட் கொள்கிறது. நான் தன்னிலை மறந்து போகிறேன். ஆவியே என் மூலமாக சிகிச்சைகளை மேற்கொள்கிறது.சில நேரங்களில் மருந்துகளின் பெயர்களை ஆவி கூறுவது என்ன இடது காதில் கேட்கும். அந்த நேரத்தில் நோயாளிகளின் கூச்சலும், இரைச்சலும் அதிகமாக இருந்தால் என் காதில் சரியாகக் கேட்காது. அதுபோன்ற நேரத்தில்தான், 'சப்தம் போடாதீர்கள்' என்று எரிச்சலுடன் அவர்களை அதட்டுவேன்.எனக்கு ஜெர்மன் மொழி தெரியாது என்பதால் ஆவியானது, போர்த்துக்கீசிய மொழியில்தான் என்னோடு சம்பாஷிக்கிறது. ஆனால், நோயாளிகள் யாராவது ஜெர்மன் மொழியில் பேசினால், உடனடியாக டாக்டர் ப்ரிட்ஸின் ஆவி அதற்கான பதிலை எனக்குச் சொல்ல, அதனைக் கிளிப்பிள்ளை போல நானும் ஒப்பிப்பேன்,'' என்று அரிகோ சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக டாக்டர் ப்ரிட்ஸ் என்பவரைப் பற்றி அரிகோ கூறிய விஷயங்கள் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.அது புரியாத புதிராக இருந்தது.இதனையடுத்து ஜெர்மானிய கோப்புகள் அலசி ஆராயப்பட்டன. ப்ரிட்ஸ் என்ற பெயரில் டாக்டர் யாராவது இருந்திருக்கிறாரா என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்தும் ஒன்றும் கண்டு பிடிக்கப்படவில்லை.அப்படியானால் அரிகோ சொல்லும் நபர் உண்மையில் கிடையாது என்றும். அது கற்பனையான நபர் என்றும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.அதாவது பொய்யான ஒரு பெயரைச் சொல்லி அரிகோ நாடகமாடி வருவதாகத் தான் அவர்கள் நினைத்தனர். ஏதோ ஒரு விதமான மன நோயால் அரிகோ பாதிக்கப் பட்டிருக்கலாம் என்று அவர்கள் நம்பினர்.ஆனால், மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர், எவ்வாறு இத்தகைய மகத்தான மருத்துவ சாதனைகளைச் செய்ய முடியும்?சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தி கண் மற்றும் புற்று நோய் அறுவை சிகிச்சைகளை எவ்வாறு சாதாரணமாகச் செய்து சுகப்படுத்த முடியும்?சாதாரண ரக மருந்துகளின் மூலமாக எப்படி மிகக் கொடிய நோய்களைக் கூட அவரால் குணப்படுத்த முடியும்?எதுவும் புரியவில்லை.இவையெல்லாம் பிரிட்ஸ்சின் ஆவியின் உதவியால்தான் செய்யப்பட்டது என்பது உண்மையாகிறது. கடைசியில் இந்த ஆவி புகுந்தவர்களுக்கு ஏற்பட்ட அகால மரணத்தில் இருந்து என்ன தெரிகிறது... ஆவி, பூதம், போன்ற அமானுஷ்ய காரியங்களில் எல்லாம் மனிதர்கள் ஈடுபடக்கூடாது என்பது புரிகிறதா? உண்மையான தெய்வத்தின் மீது மாத்திரமே நம்பிக்கை வைக்க வேண்டும். அமானுஷ்ய சக்திகளால் என்றைக்கும், எப்போதுமே ஆபத்து என்பது புரிகிறதா குட்டீஸ்...முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !