பூமிக்கு வந்த நட்சத்திரம்!
வானில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது. அதில் ஒன்று பூமியைப் பார்த்தது. உயரமான மலைகள், ஆறுகள் மற்றும் பச்சைப் பசேல் என காடு... இவை எல்லாம் அதன் கண்ணைக் கவர்ந்தன. பூமிக்கு செல்ல ஆசைப்பட்டது.மற்ற நட்சத்திரங்களிடம், 'கீழே பாருங்கள்... பூமி எவ்வளவு அழகாய் இருக்கிறது... அங்கு செல்வோமா...' என கேட்டது. 'நண்பனே... பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாக தான் இருக்கும். நாம் வானில் இருக்க வேண்டியவர்கள்; தெரியாத இடத்திற்கு சென்று ஆபத்தை சந்திக்க கூடாது; பூமியை துாரத்தில் இருந்து ரசிப்பதோடு நிறுத்தி கொள்வோம்...' என்றன நட்சத்திரங்கள்.தலையசைத்து அப்போது ஆமோதித்தது அந்த நட்சத்திரம். அவை கண் அசந்ததும், மெல்ல நழுவி பூமியை நோக்கி பயணித்தது.பூமியை நெருங்கியதும் அதன் சக்தி குறைய ஆரம்பித்தது. சிறிய நெருப்பு பந்து போல், உருமாறி காட்டில் சருகுகள் மீது விழுந்தது. அக்கணமே, காடு தீப்பற்றி எரிந்தது.'ஐயோ... இது என்ன புது சோதனை...'அழுதது நெருப்பு பந்து உருவில் இருந்த நட்சத்திரம்.திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. காட்டு தீ அணைந்தது. ஓடிச் சென்று அங்குள்ள குகையில் நுழைந்தது நட்சத்திரம். குகைக்குள் சிங்கம் ஒன்று வசித்து வந்தது; திடீரென குகை பிரகாசமாகியதைப் பார்த்து அது அச்சமுற்றது. உடனே, 'காட்டுக்குள் புதிதாய் ஒரு நெருப்பு மிருகம் வந்துள்ளது...' என, மிருகங்களுக்கு தகவல் அனுப்பியது.'அப்படி ஒரு மிருகத்தை கேள்விப்பட்டது இல்லையே... வாங்க போய் பார்ப்போம்...' வியந்து கூறியது நரி. குகையை நோக்கி வந்தன காட்டு மிருகங்கள். 'மினுக்... மினுக்...'மூலையில் ஒளிர்ந்தபடி இருந்தது நட்சத்திரம். 'சிங்க ராஜா... நெருப்பு மிருகம் எதுவும் இல்லையே... மூலையில் சிறு பொறி தானே இருக்கு...' என்றது நரி. 'நெருப்பு மிருகம் ஓடி ஒளிந்து இருக்கும்... எதுக்கும் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கணும்...'எச்சரிக்கை விடுத்தது சிங்க ராஜா.புவி ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, சிறிது சிறிதாய் சக்தியை இழந்த நட்சத்திரம், 'நண்பர்கள் பேச்சை கேட்காமல் பூமிக்கு வந்து அவதியில் கிடக்கிறோமே' என எண்ணி அழுதது. பின், மெல்ல குகையில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்தது. அப்போது அடுப்பு மூட்டுவதற்கு முயற்சி செய்தார் ஒரு பாட்டி. அவர் பக்கத்தில் நின்றது நட்சத்திரம்.'அடுப்பை பற்ற வைக்கும் முன், நெருப்பு இங்கு எப்படி தோன்றியது... இது என்ன அதிசயம்' என எண்ணி, நட்சத்திரத்தை அடுப்பிற்குள் தள்ளி, சுள்ளிகளை போட்டார் பாட்டி. எப்படி வெளியேறுவது என தெரியாமல் திக்குமுக்காடியது நட்சத்திரம்.பாட்டி கண் அசந்த சமயம், துள்ளி குதித்து குடிசையில் விழுந்தது. மறுகணம் குடிசை தீப்பற்றியது. கூச்சலுடன் தண்ணீரை ஊற்றினர் ஊர்மக்கள்.குளிர்ந்த தண்ணீர் வந்து விழுந்ததும், இருந்த சக்தியையும் இழந்தது நட்சத்திரம். 'தப்பிச்சா போதும்' என நினைத்து, குதித்து ஒரு பொந்துக்குள் புகுந்தது. உடல் எல்லாம் கறுத்து சிறிதாக நெருப்பு மட்டும் இருந்தது. வருத்தத்துடன், 'வீட்டுக்கு எப்போ போவோம்' என, எண்ணியது நட்சத்திரம்.இரவு வந்ததும், நட்சத்திரங்கள் கண்ணில் பட்டன. நண்பர்களை பார்த்து, தாவி குதித்து மேலே பறக்க முயற்சித்தது; முடியவில்லை. களைப்பு மிகுதியால் உறங்கியது.வானில் - கூட்டத்தில் இருந்த ஒன்று காணாமல் போனதால், கவலையுடன் தேடின நட்சத்திரங்கள். 'பூமிக்கு போயிருக்குமோ...' என்று ஒன்று கூறியது. மற்ற நட்சத்திரங்கள், 'சரி... வாங்க பூமிக்கு சென்று தேடலாம்...' என புறப்பட்டன.பூமியை நெருங்கியதும், சக்தியை இழந்து நெருப்பு பந்து உருவில் சிறிதாய் மாறின.தேடி கண்டுப்பிடித்து, பறக்க முயற்சித்தன.அச்சமயம் அங்கு வந்த பூச்சிகள், 'யாரு நீங்க... பார்ப்பதற்கு வெளிச்சமாய் இருக்குறீர்களே...' என கேட்டன.'நாங்க நட்சத்திரங்கள்; பூமியை பார்க்க வந்த போது, சக்தியை இழந்து விட்டோம்; மீண்டும் வான் நோக்கி பயணிக்க வேண்டும்; துாக்கி செல்ல முடியுமா...' என கேட்டன.சிறிது யோசனைக்கு பின், 'நட்சத்திரங்களை அழைத்து செல்லும் போது, நிலவை சுற்றி பார்த்துவிட வேண்டியது தான்' என எண்ணிய பூச்சிகள், 'சரி... வாங்க சுமந்து செல்கிறோம்...' என கூறி பறக்க ஆரம்பித்தன.எவ்வளவு தான் பறந்தாலும் வானத்தை எட்ட முடியவில்லை.நட்சத்திரங்களை சுமந்தபடி பறப்பவை மின்மினி பூச்சிகளாக காட்சி தருகின்றன. இன்றும் வானத்தை பார்க்கும் ஆசையில், நட்சத்திரங்களை சுமந்து பறக்கின்றன மின்மினி பூச்சிகள்.குழந்தைகளே... வானில் உலாவும் மின்மினிகளை ரசியுங்கள். இயற்கையின் அரிய ஆற்றலை உணருங்கள்!