உள்ளூர் செய்திகள்

அடாவடி செயல்!

சென்னை, தி.நகர், வெங்கட நாராயணா சாலை உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 11ம் வகுப்பு படித்தபோது, நடந்த சம்பவம்!தமிழாசிரியர் கணபதி, மொழி மீது அலாதி பற்று உடையவர். அரையாண்டு தேர்வில் தமிழில் மட்டும், மிக குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தேன். வகுப்பில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.இதனால், கடும் கோபத்தில், 'வேண்டுமென்றே ஆசிரியர் பாரபட்சமாக நடக்கிறார்' என எண்ணி, பழி தீர்க்கும் வன்மத்துடன், சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்தேன். அன்று வகுப்பு முடிந்து வெளியே சென்றவரை பின் தொடர்ந்தேன். என் பேனாவை திறந்து, அவர் சட்டையின் பின்புறம் மையை தெளித்து ஓடிவிட்டேன். அன்று மதியம் நண்பனிடம் விசாரித்து, என் செயலை அந்த ஆசிரியர் கண்டுபிடித்து விட்டதாக அறிந்தேன். பயத்தில், 'என்ன தண்டனை தர போகிறாரோ' என, மன உளைச்சல் ஏற்பட்டது. பிரமை பிடித்தாற் போல் இருந்தேன். கடைசி வகுப்பின் போது, தமிழாசிரியர் அழைப்பதாக பீயுன் சொன்னார். பயத்தில் உடல் வியர்க்க, கிலியுடன் சென்றேன். சற்றும் எதிர்பாராத வகையில் புன்னகைத்தவாறே, 'அடுத்த வாரம் பள்ளிகளுக்கு இடையிலான இலக்கியப் போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க உன்னை தேர்வு செய்துள்ளேன். பள்ளிக்குப் பெருமை சேர்...' என வாழ்த்தினார்.என் அடாவடி செயல் பற்றி, ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவரது பெருந்தன்மை கண்டு, கண்கள் குளமாயின. போட்டியில் முழு மனதுடன் முயன்று முதல் பரிசு வென்றேன்.தற்போது, என் வயது, 63; மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த அந்த ஆசிரியரை போற்றுகிறேன்!- எஸ்.பாஸ்கரன், சென்னை.தொடர்புக்கு: 98406 18801


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !