அக்னிமா!
இளவரசன் அக்னிமா, வேட்டையாடுவதில் மிகவும் விருப்பமுடையவன். வேட்டைக்கு அடிக்கடி செல்வான்.இளவரசன் தனியாக வேட்டைக்கு செல்வது அரசருக்கு பிடிக்கவில்லை. ''தகுந்த பாதுகாப்பு இன்றி, தனியாக வேட்டைக்கு செல்லாதே... எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு. அதன்படி செயல்படு,'' என்றார்.''நான் இளைஞன்... எனக்கு எதற்கு பாதுகாப்பு. என்னை பாதுகாத்து கொள்ள எனக்கு தெரியும்.'' என்று வீராப்புடன் சொன்னான் இளவரசன் அக்னிமா.'இளம் கன்று, பயம் அறியாது; பட்டு திருந்தட்டும்' என்று விட்டு விட்டார் அரசர்.ஒருநாள்- -இளவரசன் அக்னிமா, காட்டில் வேட்டையாட செல்லும் போது, வெகு தொலைவு சென்று விட்டான். திடீரென, ஒரு அழகான பெண்ணை அங்கு கண்டான்.அவளிடம், ''அழகிய இளம் பெண்ணே! இந்த நடுக்காட்டில், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டான் இளவரசன் அக்னிமா.''நான் வழி தவறி வந்துவிட்டேன். வீட்டிற்கு செல்ல எனக்கு உதவுவீர்களா?'' என்று கேட்டாள் அந்த பெண்.அந்த அழகியை அழைத்து செல்ல சம்மதித்து, குதிரையில் ஏற்றி, பயணத்தை துவங்கினான் இளவரசன் அக்னிமா.போகும் வழியில் அப்பெண், ''அங்கே பாருங்கள்! அழகான பூக்கள் இருக்கின்றன. நான் அவற்றை பறிக்க விரும்புகிறேன்,'' என்றாள்.அவள் பூப்பறித்து வருவதற்காக, காத்திருந்தான் இளவரசன்.வெகு நேரமாகியும், அப்பெண் திரும்பி வராததால், அவளை பார்க்க சென்றான். அவள் சென்ற வழியிலேயே, அவனும் போனான். அப்போது, ஒரு குரலை கேட்டான்.'குழந்தைகளே... இன்று அழகான சிறிய, இளவரசனை உங்களுடைய பகல் உணவிற்காக கொண்டு வந்துள்ளேன்; காத்திருங்கள். அவனை இங்கே அழைத்து வருகிறேன்' என கூறிய, கோர வடிவமுடைய அரக்கியை கண்டான். உண்மையை அறிந்து திடுக்கிட்டான் இளவரசன் அக்னிமா.கொடிய அரக்கியான இவள், அழகிய பெண் போல் தோற்றமளித்து, தன்னை ஏமாற்றியதை அறிந்தான். இளவரசன் வேகமாக திரும்பி வந்து, தன் குதிரை இருக்கும் இடத்தை அடைந்தான்.அந்த கொடிய அரக்கி திரும்பி வரும் போது, தன்னை மறுபடியும், ஒரு அழகான பெண்ணாக மாற்றி கொண்டாள். ஆனால், இளவரசன் அக்னிமா முட்டாளாக விரும்பவில்லை. அந்த கொடிய அரக்கி, அருகில் வந்ததும், கத்தியை வீசி அவளை கொன்றான் இளவரசன் அக்னிமா.அன்று முதல், 'இனி காட்டிற்கு தனியே சென்று சாகச செயல் எதையும் செய்ய கூடாது; தந்தை சொல்வதை கேட்க வேண்டும்; தன்னை விட வயதில் பெரியவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். எனவே, பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்' என்று முடிவு செய்தான் இளவரசன் அக்னிமா.அப்போ நீங்க எப்படி குட்டீஸ்?