ஆ... வலி போச்சே!
அவர், புகழ்பெற்ற மருத்துவர். ஒரு மருந்தை சோதிக்க விரும்பி, தன்னையே சோதனைக்கு உட்படுத்தினார். மனைவி, சகோதரிகளை அருகில் அமர்த்திக் கொண்டார்.அன்று, இரவு சாப்பாடு முடிந்தது - சிறிது நேரத்தில், ஒரு கண்ணாடிப் புட்டியிலிருந்த, தெளிந்த திரவத்தை, கோப்பையில் ஊற்றி, முகர்ந்தார் மருத்துவர்.'இப்போது, எனக்கு என்ன ஏற்படுகிறது என்பதை, பயப்படாமல் கவனியுங்கள்...' என்றார்.கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த போதே, திரவத்திலிருந்து பறந்த ஆவி, மூக்கில் புகுந்தது. அவர் நிலை கொள்ளாமல் எழுந்த போதே, திடீர் என மயங்கிச் சாய்ந்தார்.மனைவிக்கு, பீதியில் முகம் வெளுத்தது. பரபரப்புடன் கணவர் அருகே ஓடினார். சகோதரிகள் இருவரும், மருத்துவரை துாக்கி, படுக்கையில் கிடத்தினர். நினைவிழந்து கிடந்தார்; மூச்சு ஓடிக் கொண்டிருந்தது. அவரது, கை, கால்களை தேய்த்து, சூடு உண்டாக்கினர். சிறிது நேரத்தில், மயக்கம் தெளிந்து, விழித்தார்; அவர் முகத்தில் களிப்பு.'நான் நினைத்தப்படி, மருந்து வேலை செய்கிறது; பல ஆண்டுகளாக, ஆராய்ச்சி செய்த அற்புத மருந்து இது. இதன் பெயர், 'குளோரோபாம்!' இதை பயன்படுத்தி, நோயாளிகள், வலியை உணராதபடி, அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்...' என்றார், மருத்துவர் ஜேம்ஸ் சிம்ஸன். மயக்க மருந்தை, மருத்துவ உலகுக்கு அளித்தவர் இவர் தான்.முதல் சோதனை முடிந்து, சில வாரங்களுக்குப் பின், நவ., 4, 1847ல், இதே சோதனையை மீண்டும் நடத்தினார். இந்த முறை, இவருடன், மேலும், இரண்டு மருத்துவர்கள். மூவரும், ஒரு மேஜையை சுற்றி அமர்ந்தனர். வாயகன்ற, சற்றே குழிவான கண்ணாடித் தட்டுக்களில், நிறமற்ற அந்த மாயத்திரவம் ஊற்றப்பட்டது. மூவரும் குனிந்து, அதிலிருந்து எழுந்த ஆவியை ஆழ்ந்து முகர்ந்தனர்; சிறிது நேரத்தில், ஒவ்வொருவராக மயங்கினர். 'க்ளோரிக் ஈதர்' என்ற குளோரோபாம், அதன் அற்புத சக்தியை நிரூபித்து விட்டது. அந்த மருந்தால், மனிதர்களை நினைவிழக்க செய்ய முடியும் என்பது உறுதியாயிற்று. பல ஆண்டுகள் செய்த ஆராய்ச்சி, அடுத்தடுத்த ஏமாற்றங்களுக்குப் பின், வெற்றியாக மாறியது. இங்கிலாந்தில் உள்ள, எடின்பரோ நகரை அடுத்த, சிற்றுார் பாத்கேட். இங்கு, 1811ல் பிறந்தார் ஜேம்ஸ் சிம்ஸன். இவரது அப்பா ரொட்டி தயாரிப்பவர். சிறுவன் ஜேம்ஸ், தாவர இயல், மண் இயல் ஆகியவற்றில் ஆர்வமாக, ஊரை அடுத்த மலைப்பகுதியில், அபூர்வமான பாறைகளையும், தாவரங்களையும் தேடி அலைந்து கொண்டிருப்பார். மருத்துவ அறிவியல் மீதான ஆர்வத்தால், எடின்பரோ பல்கலைகழகத்தில், மருத்துவப் பயிற்சியில் சேர்ந்தார்.ஐரோப்பா கண்டத்தில் உள்ள, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, பிரபல உடல் கூறு நிபுணர் ராபர்ட் நாக்ஸ், இவரது பேராசிரியர். அவர், அறுவைச் சிகிச்சை செய்யும் போது, உடனிருந்து கூர்ந்து கவனிக்கும் வாய்ப்புப் பெற்றார் ஜேம்ஸ். அக்காலத்தில், அறுவைச் சிகிச்சையின் போது, நோயாளியை உணர்விழக்க செய்ய, போதை தரும் விஸ்கியைக் கொடுப்பர். அது, அவ்வளவு சரியாக வேலை செய்வதில்லை. அதை விட்டால் சர்ஜன்களுக்கு, வேறு வழி இல்லை.ஆப்ரேஷன் தியேட்டர்களின், நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜேம்ஸ், அதில் சீர்திருத்தம் செய்ய உறுதி பூண்டார். 19 வயதில், 'எடின்பரோ ராயல் காலேஜ் சர்ஜன்கள்' சங்க உறுப்பினரானார். உடனே, ஆய்வுகளை ஆரம்பித்தார்.சிறிது காலத்தில், எடின்பரோவில் விரிவுரையாளராக அமர்த்தப்பட்டார். இதன் பின், நகர மருத்துவமனை ஒன்றில் ரெசிடென்ட் மருத்துவரானார். கடும் பிராக்டீஸ்; நல்ல வருவாய்; நோய்கள் பற்றிய விவாதங்கள், துாங்க நேரமின்றி உழைத்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின், திருமணம் செய்து கொண்டார். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டது. பிரபுக்கள், பெருஞ் செல்வந்தர்களின் குடும்ப மருத்துவரானார். பொருளும், புகழும் குவிந்தன. மகப்பேறு மருத்துவத்தில் கைராசியுள்ளவராக விளங்கினார். ஏராளமான பெண் நோயாளிகள், ஜேம்சுக்கு இருந்தனர். ஹிப்னாடிச முறையில், அவர்களை நினைவிழக்க செய்ய முயன்றார்.அது, நினைத்தபடி பலன் தரவில்லை. அதனால், 1847ல், ஈதரை உபயோகித்து ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த, ஒரு பல் மருத்துவர், ஈதரை பயன்படுத்தி, வெற்றிகரமாக, அறுவை சிகிச்சை செய்வதாக அறிந்திருந்தார். ஆனால், ஈதர், தீப்பிடிக்கும் தன்மை உடையது. அந்த காலத்தில், ஆப்ரேஷன் தியேட்டர்களில், காஸ் விளக்குகளும், மெழுகுவர்த்திகளும் தான் வெளிச்சத்துக்கு பயன்படுத்தப்பட்டன. ஈதரோ, மிகச் குறைந்த வெப்ப நிலையில், ஆவியாகக் கூடியது. அந்த ஆவி, எளிதில் தீப்பற்றக் கூடியது. இதனால், நோயாளிக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, வெறும் ஈதரை பயன்படுத்துவதைக் கை விட்டார். பல்வேறு ரசாயனப் பொருட்களை பற்றி ஆராய்ந்தார். ஒரு நிலையில், ஹைட்ரோக் க்ளோரிக் அமிலத்துடன், ஈதரைக் கலந்து ஒரு திரவத்தைத் தயாரித்தார். அதுதான், 'குளோரோபாம்' இது நிறமற்றது.இதன் தன்மையை, சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்டார். எடின்பரோவில் உள்ள மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில், புதிய கண்டுபிடிப்பை நோயாளிக்குச் செலுத்தி, வெற்றிகரமாக ஆபரேஷன் செய்வதை, பொதுமக்களும் காணச் செய்தார். புதிய மருந்தின் புகழ், இங்கிலாந்து முழுவதும் பரவியது. எல்லா மருத்துவ மனைகளிலும் பயன்படுத்தினர். ஆனால், மதகுருக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 'இயற்கையின் நியதியில் தலையிடுவது தகாது' என்பது அவர்கள் வாதம். ஆனால், கண்டனத்தை பொருட்படுத்தவில்லை. விக்டோரியா மகாராணி, 1866ல் இவரது சேவையை பாராட்டி கவுரவித்தார். வலியை மறக்கடிக்கும் மகத்தான தொண்டு செய்ததற்காக, ஜேம்ஸ் சிம்ஸனை பாராட்டாதவர் இல்லை. மருத்துவ உலகில் இன்றும் வரப்பிரசாதமாக விளங்குகிறது குளோரோபாம்!