இதெல்லாம் சகஜமப்பா!
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் கல்வியறிவு இல்லாதவர்; ஆனால், அனுபவத்திலும், விவசாயத்திலும் சிறந்த ஞானமும், திறமையும் கொண்டவர்.அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவனை விவசாயி ஆக்காமல் ஒரு கல்வியாளனாக்க விரும்பிய அவர், அவனை பள்ளியில் படிக்க வைத்து, கல்லூரியில் சேர்த்தார். அவன் கல்லூரிக்கு சரியாக போகாமல், புகைப் பிடிப்பது, மது அருந்துவது, சூது ஆடுவது ஆகிய தீய பழக்கங்களுக்கு அடிமையானான்.இந்த விஷயம் ஒருநாள் விவசாயிக்குத் தெரியவர, அவர் மிகவும் கவலை கொண்டார். அவனைக் கண்டிக்காமல் அன்பான வார்த்தைகளால் அவனைத் திருத்த முடிவு செய்தார். அவன் விடுமுறையில் கிராமத்துக்கு வந்தபோது, அவனைத் தன் வீட்டுத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.''மகனே! உனக்கிருக்கும் தீய பழக்கங்களை அறிந்தேன். அவை முதலில் உன் நற்சிந்தனைகளையும், நற்செயல்களையும் கெடுக்கும். அடுத்து உடல் உறுப்புகளைப் பாதிக்கும். அதன்பின், எதிர்கால வாழ்க்கையே பாழாகும். இறுதியில் உயிருக்கே ஆபத்தாய் முடியும். உன் நல்லத்திற்குதான் சொல்கிறேன். தந்தை சொல் கேள். தீய பழக்கங்களை விட்டுவிடு!'' என்று அன்பாக எடுத்துக் கூறினார்.மகன் அவரை முறைத்துப் பார்த்தான்.''தந்தையே! உலகம் தெரியாமல் பேசுகிறீர்கள். படிக்கிற வயதில் சில தீய பழக்கங்கள் இருப்பது இயல்புதான். அவற்றை இந்த வாலிப வயதில் தவிர்க்க முடிவதில்லை. இன்னும் சற்று வயதாகும் போது அவை தானே சரியாகிவிடும். ஆகவே, தாங்கள் கவலைப்படத் தேவையில்லை!'' என்றான்.விவசாயி பேசவில்லை. மகனை அழுத்தமாய்ப் பார்த்தார்.''சரி! இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுவோம். அதோ... நீண்டு வளர்ந்திருக்கும் அந்தப் புல்லைப் பிடுங்கு!'' என்று கட்டளையிட்டார் விவசாயி.மகன் மிக எளிதாக அந்தப் புல்லைப் பிடுங்கினான்.''சரி! அதோ அந்த செடியைப் பிடுங்கு!'' என்றார் விவசாயி.''எதற்கு இப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான் மகன்.''நீ முதலில் நான் சொன்னதைச் செய். அதற்கான காரணத்தைப் பிறகு சொல்கிறேன்!'' என்றார் விவசாயி.மகன் அந்தச் செடியையும் எளிதாகப் பிடுங்கினான்.''அதோ... அந்தக் கொடியைப் பிடுங்கு!''மகன் முயன்றான். புல், செடி ஆகியவற்றை எளிதாகப் பிடுங்கியதைப் போல் அந்தக் கொடியை எளிதாகப் பிடுங்க முடியவில்லை. வேர்கள் பூமியில் ஆழமாக பதிந்திருந்ததால் அதைப் பிடுங்குவதற்கு சற்று சிரமப்பட வேண்டிவந்தது. தன் முழு பலத்தையும் பிரயோகித்து தன் இரு கைகளாலும் அதைப் பிடித்து இழுத்தான். கொடி பிய்த்துக் கொண்டு மேலே வந்தது.''அப்பாடா! பிடுங்கிவிட்டேன். ஆமாம்... என்னைக் கொண்டே இந்தத் தோட்டத்தை சுத்தம் செய்யப் போகிறீர்களா?'' என்று கேட்டான் மகன்.''இல்லை! இப்போது... அதோ அந்த சிறு மரத்தைப் பிடுங்கு!'' என்றார் விவசாயி.மகன் முயன்றான். தன் முழுப் பலத்தையும் பிரயோகித்தான். தூக்க முயன்றான். அசைத்துப் பார்த்தான். மரத்தைப் பிடுங்க முடியவில்லை. மீண்டும் முயன்றான்.இறுதியில், ''முடியவில்லை தந்தையே!'' என்றான்.''மகனே! மனிதனிடம் உருவாகும் தீயப் பழக்கங்களை ஆரம்பத்திலேயே முயன்றால் ஓர் எளிய புல்லைப் பிடுங்கியதுபோல் எளிதில் மனதை விட்டு அகற்றிவிடலாம். தீயப் பழக்கங்கள் நன்கு வளர்ந்து முற்றிவிட்டால் மரத்தைப் பிடுங்க இயலாததுபோல் அவற்றை மனதிலிருந்து அகற்றவே முடியாது!'' என்றார்.மகன் அசைவற்று நின்றான். யோசித்தான். படிப்பறிவு இல்லாத தன் தந்தை, தன்னிடமிருக்கும் தீயப்பழக்கத்தை நீக்க அறிவுப்பூர்வமாக செய்து காட்டிய செயல்முறையை எண்ணி வெட்கப்பட்டான்.அந்த இடத்திலேயே தன் தீய பழக்கங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தான்.***