உள்ளூர் செய்திகள்

தேவதை தந்த வரம்! (3)

சென்றவாரம்: வன தேவதை அருளால், பறவை, மிருகங்கள் பேசுவதை அறிந்தான், ஏழை சுப்பன். அதன் மூலம், அந்த நாட்டு இளவரசனை இரண்டு முறை காப்பாற்றி, அரசவை ஆலோசகனாக பதவி பெற்றான். இனி -சுப்பனை அழைத்த மன்னர், 'உன்னிடம் உள்ள ரகசியத்தை கூறு... நாட்டில் பாதியை தருகிறேன்...' என்று ஆசை காட்டினார்.வனதேவதையின் எச்சரிக்கையை நினைவில் கொண்டிருந்த சுப்பன், 'அது ஒன்றுமில்லை மன்னா... எல்லாம் வனதேவதையின் அருள்; அவ்வளவு தான்...' என்று பொதுவாக கூறி சமாளிக்க முயன்றான்.ரகசியத்தை மறைப்பதாக குற்றம் சாட்டிய மன்னர், 'சுப்பா... ரகசியத்தை கூறாவிட்டால், மரண தண்டனைக்கு உள்ளாக நேரிடும்...' என்று எச்சரித்தார்.ரகசியத்தை கூறினால், வனதேவதை எச்சரித்தபடி மரணம் நேரும்; அதே சமயம், மன்னர் கட்டளையை மீறினாலும் மரண தண்டனை கிடைக்கும். சுப்பனின் மனம் குழம்பியது.ரகசியத்தை சொல்வதா... உயிரை விடுவதா... அவனுக்குள் பெரும் பேராட்டம் நடந்தது. இறுதியில், 'மன்னா... எனக்கு உயிர் முக்கியம் அல்ல; நாக்கும், வாக்கும் தான் முக்கியம்; என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். மரண தண்டனையை ஏற்கிறேன்...' என்று தீர்க்கமாக கூறினான்.மன்னர், மரண தண்டனை விதித்தார்; தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது. ஒரு துாணில், சுப்பனைக் கட்டி, கழுத்தை வெட்ட, வாளோடு தயாராக நின்றான் கொலையாள்.'ம்... தண்டனையை நிறைவேற்று...' என்று, குரலை உயர்த்தி, உத்தரவிட்டார் மன்னர். வாளை ஓங்கிய கொலையாள், அதிர்ந்து நின்றான்!'நிறுத்து...' என்ற குரல் கேட்டது. ஒன்றும் புரியாமல் திரும்பினான் கொலையாள்.மன்னரும், மக்களும் திகைப்புடன், சுற்றும், முற்றும் பார்த்தனர்.அங்கே... ஒளி வீசும் கண்களோடு, வனதேவதை நின்றாள். அவளை, எல்லாரும் வணங்கினர்.'மன்னுயிர் காக்கும் மன்னரே... ஒரு உயிரை பலி கொள்வது தர்மம் இல்லை; மரண தண்டனைக்கு உள்ளாகி நிற்கும் இளைஞன், மன உறுதி மிக்கவன் என்பதை நிரூபித்து விட்டான். அவன் உயிரை, சுயநலத்துக்காக பலி கொள்ள நினைக்கும் உன் ஆட்சி மங்குவதாக...' என்று சாபமிட்டாள்.மனம் கலங்கிய மன்னர், வன தேவதையை வணங்கி, 'மதியிழந்து இந்த காரியத்தை செய்ய துணிந்தேன். சுப்பனைப் போன்ற இளைஞர்கள், இந்த மண்ணின் மாபெரும் பெருமை. அவர்களை வாழ வைப்பதே என் கடமை என்பதை உணர்ந்து கொண்டேன்... ரகசியம் காப்பதே மேலானது என்பதை போதித்து விட்டாய். என்னை மன்னித்து, சாபத்தை திரும்ப பெற்றுக் கொள்...' என்று கெஞ்சினார்.வனதேவதை மென்மையாக சிரித்தாள். சாபத்தை திரும்ப பெறுவதாக கூறி மறைந்தாள். தன் மூடச் செயலுக்காக வருந்தி, சுப்பனுக்கு அரசவையில் பதவி உயர்வு வழங்கினார் மன்னர். மக்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்; நாடு செழித்தது.குட்டீஸ்... மனத்துணிவு தான் லட்சியத்தை அடைய உதவுகிறது. நற்செயல்களை செய்ய, மனத்துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.முற்றும்- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !