உள்ளூர் செய்திகள்

ஏப்ரல் சபதம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஜெயலட்சுமி விலாஸ் நடுநிலைப் பள்ளியில், 1978ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...தலைமை ஆசிரியர் ராகவாச்சாரியார், கண்டிப்பால் புகழ் பெற்றவர்; வகுப்பு ஆசிரியை பவானி மிகவும் கனிவானவர். ஏப்ரல் முதல் நாள் ஒருவரை ஒருவர் முட்டாளாக்கும் எண்ணத்தில், 'உங்க தாத்தா பைக்கில் வரும் போது மாடு முட்டிடுச்சு...' என்று ஒரு மாணவன் கூறினான். இதை கேட்டதும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான் மற்றொருவன்.செய்வதறியாது திகைத்தபடி, வகுப்பு ஆசிரியையிடம் விபரம் கூறினேன். விரைந்து வந்து முதல் உதவி அளித்தார்.அவனை விழிக்க வைத்து, 'தாத்தாவுக்கு ஏதும் ஆகவில்லை' என தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. குறும்பு செய்தவனை கடிந்து அறிவுரை கூறினார் வகுப்பு ஆசிரியை; தண்டனை தந்து திருத்தினார் தலைமையாசிரியர்.எந்த சூழ்நிலையிலும், யாரையும் ஏமாற்ற கூடாது என்று அன்றே சபதம் மேற்கொண்டேன்.என் வயது, 54; தென்மேற்கு ஆசிய நாடான ஓமன், மஸ்கட் நகரில் பணிபுரிகிறேன். வாழ்வில் படிப்பினை தந்த நிகழ்வை, ஒவ்வொரு ஏப்ரல் முதல் நாளிலும் நினைவில் கொண்டு சபதத்தை புதுப்பித்து வருகிறேன்.- ப.ராஜகோபால், திருவாரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !