அதிமேதாவி அங்குராசு!
கனிவும் கல்வியும்!மாணவ, மாணவியர் அனைவரும், புத்தி கூர்மை மிக்கவர்கள் தான்; பாடங்களைப் புரிந்து கொள்ளவும், நினைவில் பதிக்கவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழி முறைகள் உண்டு. ஒன்றை, சிலர் விரைந்து கற்பர்; சிலர் சிறிது தாமதமாக கற்பர்.கற்கும் திறனில் உள்ள மாறுபாடுகளுக்கு, பல காரணங்கள் உண்டு. சிலருக்கு, கருத்துகளையோ, உணர்வுகளையோ முறையாக வெளிப்படுத்த தெரியாது; அவர்களுக்கு, குடும்பத்திலோ, சமூகத்திலோ பிரச்னைகள் இருக்கலாம்.சிலருக்கு, ஆசிரியர் செயல் பிடிக்காமல் போகலாம்; பாடத்தை ஆசிரியர் விளக்கும் முறை, புரியாமல் இருக்கலாம். ஏழ்மையும், ஊட்டச்சத்துக் குறைபாடும் கூட, கற்கும் திறனில் குறைபாட்டை ஏற்படுத்தலாம்.குழந்தைகள் விரும்பியதை மறுத்தாலும், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும். பார்வைக் குறைபாடு போன்ற உடல்நலக் குறைவு, பெற்றோரின் கல்விநிலை மற்றும் பய உணர்வு போன்றவையும், கற்கும் திறனில் மாறுபாட்டுக்கு காரணமாகலாம். சூழ்நிலையை மாற்றினால், திறன் அதிகரிக்க வாய்ப்புண்டு.சிலருக்கு, போதுமான ஞாபக சக்தியும், பொது அறிவும் இருந்தாலும், கற்றல் திறன் குறைவாக இருக்கும். கற்பிக்கும் முறையில் உள்ள குறைகளே, இதற்கு காரணமாக இருக்கலாம். பெற்றோர், இதை புரிந்து கொள்ள வேண்டும்.கற்கும் திறனில் குறை உள்ளோருக்கு, கவனச் சிதறல் அதிகமாக இருக்கும்; சிக்கலான பிரச்னைகளை தீர்க்க முடியாமல் திணறுவர். நீண்ட கால இலக்குகளை, கற்பனை செய்யும் ஆற்றலும் குறைவாக இருக்கும். நேர நிர்வாகத்திலும், குறை இருக்கும்.இது போன்ற மாணவர்களை, கவனமாக கையாள வேண்டும். 'முட்டாள்... தண்டம்... பகல் கனவு காண்பவன்...' என்றெல்லாம் அவநம்பிக்கை ஏற்படும் விதமாக பேசக் கூடாது. கற்பதில், அவர்களுக்கு உள்ள பிரச்னைகளை கண்டுபிடிக்க வேண்டும். கவனத்தை, படிப்பில் குவிப்பதற்கான உத்திகளை வகுத்து, முறையாக பயிற்சி கொடுக்க வேண்டும்.கற்றலில் பிரச்னை உள்ளவர்களை மீட்க, தன்னம்பிக்கை ஊட்டுவது தான், சிறந்த வழி. ஆசிரியர் நல்ல நண்பராக இருந்து உதவ வேண்டும்.கற்கும் திறனை வளர்க்க...* தனிமையிலோ, பொது இடங்களிலோ, மாணவர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது* கற்பதற்கு ஏற்ற, அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்* சிறு சிறு பகுதிகளாக கற்பிக்க வேண்டும்; உரிய ஓய்வு கொடுக்க வேண்டும்* பொறுமையுடன் பாடங்களை, திரும்ப திரும்ப விளக்குவதும், எழுத வைப்பதும், நினைவில் பதிய உதவும்* சிறிய முன்னேற்றத்தையும் கொண்டாடி, உற்சாகப்படுத்த வேண்டும்* புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப, வழிகாட்ட வேண்டும்; அடிப்படைகளை விளக்கிய பின், கடின பாடங்களை சொல்லித் தர வேண்டும்* இலக்கு நிர்ணயித்து, பின்பற்ற வேண்டியவற்றை வரிசைப்படுத்த, பயிற்சி அளிக்க வேண்டும்* வகுப்பில் முன் வரிசையில் அமர வைத்து, கண்காணிக்க வேண்டும் * பாடத்தை புரிந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்* உற்சாகமான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தலாம்* பிடித்த விஷயங்களை ஊக்குவிப்பதன் மூலம், தன்னம்பிக்கையை வளர்க்கலாம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.