உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

கயிறாட்டம்!

உடல் பருமனில் துவங்கி, மன அழுத்தம் வரை, பல உபாதைகளுக்கு தீர்வளிக்கிறது கயிறாட்டம் பயிற்சி. இது, முழு உடலையும் செயல்பட வைக்கிறது; செலவில்லாதது. எங்கும், எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.கயிறாடுவதால்...* உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை குறையும்* உடல் உள் உறுப்புகளும், நரம்பு மண்டலமும் சீரடையும்* மன அழுத்தம் நீங்கும்* இதயம், நுரையீரல் வலுப்பெறும் * தண்டு வடம் சீராகி, உடல் உயரமான தோற்றம் பெறும்* இடுப்பு வலி குறைவதுடன், எலும்புகள் பலம் பெறும் * கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும்* ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவி, உடலை சமநிலையாக பேணும்* பெண்களை தாக்கும், 'ஆஸ்டியோ போரோசிஸ்' என்ற எலும்பு மென்நோயை தடுக்கும்.

கவனிக்க வேண்டியவை:

கயிறு ஆட்டத்துக்கு பயன்படுத்தும் கயிற்றின் நீளம் மிக முக்கியம். உடல் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நீளத்தை தேர்வு செய்ய, கயிற்றை சமமாக மடித்து, மத்தியில் கால்களால் மிதித்து, இரு முனைகளையும் உயர்த்தி பிடிக்க வேண்டும்; அது, வயிற்றுப் பகுதிக்கு மேல் வரை இருந்தால் சரியான அளவாக கொள்ளவேண்டும்.கயிற்றின் நுனியை பிடித்து ஆடக்கூடாது. அது, பயிற்சியை கடினமாக ஆக்கிவிடும். தரம் மிக்க கயிறை பயன்படுத்த வேண்டும். அது, பயிற்சியின் போது, ஊக்கத்தைக் கொடுக்கும்.அதிக உயரம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலியால் அவதிப்படுவோர், எலும்பு முறிவு மற்றும் சுளுக்கால் பாதிக்கப்பட்டோர் கயிறாட்ட பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் பயிற்சியை மேற்கொள்வது நலம் பயக்கும்.

பந்தும் பிஞ்சும்!

இரண்டாம் உலகப் போரின் போது, கால்பந்து விளையாட்டு மூலம், பலநுாறு குழந்தைகளைக் காப்பாற்றியவர் ஜார்ஜஸ் லாய்ங்கார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றிய வீரர். சமீபத்தில், 108ம் வயதில் காலமானார்.பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்திருந்தது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி. ஜெர்மனியின் நாஜி படையிடம் பிடிபட்டு மயிரிழையில் தப்பினார். அத்துடன், நுாதன உத்தியை கையாண்டு நுாற்றுக்கணக்கான யூத இனக் குழந்தைகளை, நாஜிக்களிடம் இருந்து காப்பாற்றினார்.ஒரு பேட்டியின் போது, 'யூத இனக் குழந்தைகளை பிரான்ஸ் எல்லையில் உள்ள கால்பந்து மைதானத்துக்கு அழைத்துச் செல்வேன். எல்லை வேலி, குறைந்த உயரத்தில் தான் இருந்தது; காவலுக்கும் யாரும் இருக்க மாட்டார்கள்.'வேலியை தாண்டிச் செல்லும் வகையில், நான் பந்தை உதைப்பேன். பந்தை எடுத்து வர, எல்லை தாண்டி ஓடும் குழந்தைகள் தப்பிப்பர். இப்படி, 350 பேரை எல்லையைக் கடக்க வைத்தேன்...' என்று கூறினார்.நாஜி படையிடம் தப்பிய குழந்தைகள், ஐரோப்பிய நாடான சுவிச்சர்லாந்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த பணிக்காக பிரான்ஸ் நாட்டு குடி மக்களுக்கு அளிக்கப்படும், 'தி லெஜியன் டி ஹானர்' என்ற உயரிய விருது, 2005ல் ஜார்ஜசுக்கு வழங்கப்பட்டது.- என்றும் அன்புடன்,அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !