உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

ஆன்டி - பயாட்டிக்! நோய்க்கிருமியான பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்டது, 'ஆன்டி - பயாட்டிக்' எனப்படுகிறது. உடலில் முறையான எதிர்ப்பு சக்தி குறையும் போது தான், நோய் உருவாகிறது. நோய்க்கு காரணமான பாக்டீரியாவை அழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேப்படுத்துகிறது, ஆன்டி - பயாட்டிக்.உச்சி முதல் பாதம் வரை நோயை பரப்பும் கிருமிகள் உடலில் உள்ளன. சக்தி அதிகம் இருக்கும் வரை அதன் செயல் எடுபடாது. சக்தி குறையும்போது, கிருமியின் வீரியம் அதிகரிக்கும்; நோய் தாக்கம் ஏற்படும்.நோய் தாக்கம் ஏற்பட்டு, மருத்துவரிடம் சென்றால், அவர் உடலை நன்கு பரிசோதிப்பார். எந்த கிருமி தாக்கியிருக்கிறது... அதை அழிக்க எந்த வகை ஆன்டி - பயாட்டிக் மருந்து-, எந்த அளவில், எத்தனை நாள் தேவை என தீர்மானித்து பரிந்துரைப்பார்.நோய் குறி சற்று குறைந்துவிட்டால், பலரும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவர். பாதியிலே மருந்தை நிறுத்தினால், நோய் கட்டுப்படாது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மருந்தை எதிர்க்கும் சக்தியை உருவாக்கி கொள்ளும் கிருமி.அதாவது, அரைகுறையாக அழிக்கப்பட்டிருக்கும் கிருமி, மீண்டும் முழுபலம் பெற்றுவிடும். அது, உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஆகிவிடும்.சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி, சுயமாக மாத்திரை மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். இதுபோல், தேவையற்ற ஆன்டி - பயாட்டிக் மருந்து உட்கொண்டால், நோய்க் கிருமி வீரியம் பெற வாய்ப்பு உண்டு. உணவை ஜீரணிக்கவும், உயிர்ச்சத்து தருவதற்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உடலில் உள்ளன. தேவையின்றி, ஆன்டி - பயாட்டிக் சாப்பிட்டால், அது போன்ற பாக்டீரியாக்கள் கொல்லப்படும். அலர்ஜி, வயிற்றுப் போக்கு, வாந்தி, போன்ற உபாதைகள் ஏற்படும். மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாமல் நோய்க்கிருமி பெருகும். மருத்துவர் பரிந்துரையில் மட்டுமே ஆன்டி - பயாட்டிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.மாணவர்களின் கூகுள்!தகவல் தேடித்தருவதில் முதன்மை இடத்தில் உள்ளது, கூகுள் இணையதளம். அலைபேசியில் இணைய வசதி வந்த பின், கூகுளில் தகவல் தேடுவோர் எண்ணிக்கை கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின், 'சர்ச் இன்ஜின்' என்ற தேடுபொறியில் உள்ள வசதிகளே இதற்கு காரணம்.இதை, தேடுபொறியாக மட்டுமின்றி, பலவகை பயன்பாட்டுக்கும் உபயோகிக்கலாம். முக்கியமாக, நொடியில் கணக்கு போடும், 'கால்குலேட்டர்' வசதியும் இதில் உள்ளது. கடினமான அறிவியல் கணிதத்தையும் சுலபமாக போட உதவுகிறது. இதற்காக, 'சயின்டிபிக் கால்குலேட்டர்' என்ற வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.இதில், கடின கணிதங்களுக்கு எளிதாக விடை காண முடியும். அலகுகளை மாற்றியமைத்து, துல்லியமாக விடை அறியும் வசதியும் உள்ளது.அதாவது, வெப்ப அளவான, 'செல்ஷியஸ்' என்பதை, 'பாரன்ஹீட்' முறையில் மாற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். கிலோ மீட்டர் அளவை, மைல் அளவாக மாற்றும் வசதியும் உள்ளது. இவை எல்லாம் மாணவ, மாணவியருக்கு பெரிதும் பயன்படும்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !