கூண்டோடு பாஸ்!
துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு, கருங்குளம், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், 1967ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த காலத்தில், 8ம் வகுப்பு வரை, 'அனைவரும் பாஸ்' என்ற நடைமுறை கிடையாது. ஆண்டு இறுதி தேர்வு விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்தது. தேர்ச்சி அறிவிப்புக்காக வழிபாட்டு கூடத்தில் நின்றிருந்தோம். ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி பெற்றவர்களை அறிவித்துக் கொண்டிருந்தார், தலைமை ஆசிரியர் சங்கர நாராயணன்.உடன்படித்த சுப்பிரமணியன், குடும்ப சூழல் காரணமாக இறுதி தேர்வு எழுதியிருக்கவில்லை. அதனால், அவன் தேர்ச்சி பெறுவானா என்ற சர்ச்சை செய்தபடி சலசலப்புடன் நின்றிருந்தோம். எங்கள் வகுப்பு வரிசைக்கு வந்ததும், 'கூண்டோடு பாஸ்...' என்று அறிவித்தார், தலைமை ஆசிரியர். மிகுந்த மகிழ்ச்சியுடன், 5ம் வகுப்புக்கு அடி எடுத்து வைத்தோம்.எனக்கு, 62 வயதாகிறது; அந்த தலைமை ஆசிரியர் அன்று அறிவித்ததை இன்றும் நண்பர்கள் சந்திப்பின் போது பேசி மகிழ்கிறோம். அந்த நினைவு மங்காமல் மனதில் நிலைத்துள்ளது.- எம்.ஜி.காந்தி, சென்னை.தொடர்புக்கு: 70102 88530